சாய்ந்தமருதில் மீண்டும் எழும் போராட்டம் : உரிமைகேட்டு வீதிக்கு இரங்கப்போவதாக பகிரங்க அறிவிப்பு ! - Sri Lanka Muslim

சாய்ந்தமருதில் மீண்டும் எழும் போராட்டம் : உரிமைகேட்டு வீதிக்கு இரங்கப்போவதாக பகிரங்க அறிவிப்பு !

Contributors
author image

நூருள் ஹுதா உமர்

நூருள் ஹுதா உமர்.

சாய்ந்தமருது மக்கள் பணிமனை கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை கோஷத்தை முன்வைத்து சுயற்சை குழுவாக தோடம்பழ சின்னத்தில் போட்டியிட்டு கல்முனை மாநகர சபையில் ஆறு வட்டாரங்களையும் வென்று மொத்தமாக 09 ஆசனங்களை பெற்றது. அதில் 19 ஆம் வட்டார உறுப்பினர் முஹர்ரம் பஸ்மீர் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக மாநகர சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அந்த வெற்றிடம் யாரை கொண்டும் நிரப்பப்படாமல் கடந்த 11 மாதங்களாக வெற்றிடம் நிலவி வருகிறது. அந்த வெற்றிடத்தை நிரப்பி புதிய உறுப்பினரை சபைக்கு அனுப்ப யாரும் முயற்சிகளை மேற்கொள்ள வில்லையென வட்டாரத்தில் தேர்தல் பணி செய்த முக்கியஸ்தர்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.

சாய்ந்தமருதில் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசியபோதே ப்ளாஸ்டர் அமைப்பின் முகாமையாளர் எம்.எல். பஸ்மீர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது பலரும் இங்கு கருத்து தெரிவித்தனர். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த எம்.எல். பஸ்மீர், இந்த 19ஆம் வட்டாரத்தை மு.கா இலகுவாக வெல்லும் என்ற நிலைப்பாட்டை தவிடுபொடியாக்கி தோடம்பழத்தை வெல்ல வைக்க உயிரை பணயம் வைத்து போராடி வெற்றி கண்டோம். துரதிஷ்டவசமாக எங்களின் உறுப்பினர் தனது சொந்த வேலை நிமிர்த்தம் பதவியை ராஜினாமா செய்து ஒரு வருடத்தை நெருங்கி விட்டது. எங்களின் வட்டாரத்தில் நிறைய உட்கட்டமைப்பு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. சாய்ந்தமருதில் ஏனைய வட்டார உறுப்பினர்களும் எங்களை கவனிப்பதில்லை. எங்களின் பிரதேசங்களுக்கு அரசினால் வழங்கப்படும் உதவிகளை கூட பெறமுடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. சுயட்சைக்குழு தலைவர் எங்களின் விடயத்தில் பாராமுகமாக இருக்கிறார். இந்த விடயத்தை நாங்கள் இனியும் பொறுக்க முடியாது. ஒரு வார காலத்தில் எங்களுக்கான உறுப்பினராக பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள சமூக ஆர்வலர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். இல்லாது போனால் வீதிகளை மரித்து போராட்டம் செய்வோம். அது எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. அரசினால் ஒதுக்கப்படும் மில்லியன்கணக்கான ஒதுக்கீடுகளை பெற எங்களின் வட்டாரத்தில் உறுப்பினர் யாருமில்லை. நாங்கள் ஊரின் தேவைக்காக முன்னின்று போராடியவர்கள். எங்களின் குறைகளை நிபர்த்தி செய்ய கேட்பதனால் நாங்கள் துரோகிகளாகிவிட முடியாது என்றார்.

மேலும் இந்நிகழ்வில் சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவு சங்க தலைவர் எம்.எம். உதுமாலெப்பை, லக்ஸ்டோ அமைப்பின் தலைவர் ஏ.எல். அன்சார், இயற்கையை நேசிக்கும் மன்ற செயற்பாட்டாளர் முஹம்மத் ஆஷிக் ஆகியோரும் நிரப்பப்படாமல் இருக்கும் இந்த வட்டாரத்தின் உறுப்பினரின் நியமனம் தொடர்பில் சுயட்சை குழுத்தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மட்டுமின்றி கடந்த காலங்களில் இடம்பெற்ற வேட்பாளர்கள் தெரிவிலும் நிறைய குளறுபடிகள் இருந்தது. பள்ளிவாசலை முன்னிலைப்படுத்தியதனால் ஊரின் ஒற்றுமையை சீரழிக்க கூடாது என்பதற்காக பொறுமை காத்தோம். சாய்ந்தமருதை பிரதிநித்தித்துவப்படுத்தும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களின் மக்கள் நல செயற்பாடுகள் தொடர்பிலும் மக்களிடம் நிறைய விமர்சனங்கள் உள்ளது என்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team