சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையை வென்றெடுக்க முழுமையாக ஒத்துழைப்பேன்; ஜெமீல் உறுதி! - Sri Lanka Muslim

சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையை வென்றெடுக்க முழுமையாக ஒத்துழைப்பேன்; ஜெமீல் உறுதி!

Contributors
author image

Press Release

சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையை வென்றெடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் என கிழக்கு மாகாண சபையின் மு.கா. குழுத் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் உறுதியளித்துள்ளார்.

 

சாய்ந்தமருது ஜும் ஆப் பெரிய பள்ளிவாசலினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றே அவர் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.

 

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினருடனான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை இரவு அதன் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா தலைமையில் பள்ளிவாசல் காரியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

 

இதன்போது தலைமை உரை நிகழ்த்திய பள்ளிவாசல் தலைவர் ஹனிபா; சாய்ந்தமருது பிரதேசத்தின் நலன் கருதி தனியான உள்ளூராட்சி சபை ஒன்று உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் தேவை எனவும் அதற்கான முயற்சிகளில் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் ஈஎடுபடுவது எனவும் மரைக்காயர் சபை தீர்மானித்துள்ளதால் அதற்கு எமது ஊரின் மக்கள் பிரதிநிதியான ஜெமீல் அவர்கள் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

 

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாண சபையின் மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல்; பள்ளிவாசல் தலைவரினதும் நிர்வாகத்தினதும் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதுடன் அதற்காக பள்ளிவாசல் முன்னெடுக்கவுள்ள அனைத்து நடவடிக்கைகளிலும் தானும் பங்கேற்று முழுமையாக ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகக் கூறினார்.

 

அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;

“நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நான் ஊருக்கு வந்திருக்கின்ற நிலையில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் முற்பகுதியில் எனது ஏற்பாட்டில் கூட்டப்பட்ட கூட்டத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் 100 நாள் திட்டத்தின் கீழ் இப்பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்காக திட்டமிடல் குழுவொன்று அமைக்கப்பட்ட போதிலும் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்று இங்கு கூறப்பட்டது. அது உண்மைதான்.

 

முதலமைச்சர் சர்ச்சையை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் அசாதாரண சூழ்நிலை காரணமாக அவ்விடயத்தில் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட முடியாமல் போனமைக்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். எவ்வாறாயினும் சில வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்கிற செய்தியையும் அறியத் தருகின்றேன்.

 

என்னைப் பொருத்தவரை கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கட்சிக்காகவும் முஸ்லிம் சமூகத்திற்காகவும் நமது மண்ணுக்காகவும் என்னை அர்ப்பணித்து சேவையாற்றி வருகின்றேன். அதனால் எனது சொந்த வாழ்க்கையில் நான் நிறைய இழப்புகளை சந்தித்துள்ளேன். பொருளாதாரத்தை மாத்திரமல்ல உயர் கல்வி முன்னேற்றத்தையும் பல்கலை மட்ட உயர் பதவிகளையும் கூட இழந்தே நான் இந்த அரசியலை தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்.

 

முதலமைச்சர் பதவி தரப்படும் என்று முழுமையாக நம்ப வைக்கப்பட்டு- இறுதி நேரத்தில் கழுத்தறுப்பு செய்யப்பட்டேன். எனது நீண்ட நாள் அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அந்த அரசியல் அதிகாரம் உதவும் என பெரும் எதிர்பார்ப்புடன் நம்பியிருந்தேன்.

 

எவ்வாறாயினும் நான் சோர்ந்து விடப் போவதில்லை. குறைந்த பட்சம் நான் பிறந்த சாய்ந்தமருது மண்ணின் எழுச்சிக்காக என்னை தொடர்ந்தும் அர்ப்பணித்து போராடுவேன்.

 

18 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளைக் கொண்டுள்ள எமது மண்ணில் ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்வது குறித்து நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. கல்முனைத் தொகுதியில் அதிகூடிய வாக்குகளைக் கொண்டுள்ள முதன்மையான பிரதேசமாக சாய்ந்தமருது திகழ்கின்ற போது நாம் ஏன் அந்த வாக்கு வங்கியைக் கொண்டு எமக்கான் ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வது பற்றி சிந்திக்க முடியாது.

 

இந்த விடயத்தை பள்ளிவாசல் நிர்வாகம் தீவிரமாக சிந்தித்து- தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். பாராளுமன்றத் தேர்தலில் நானும் போட்டியிடத் தயாராகவே இருக்கின்றேன். அதற்காக என்னைத்தான் முன்னிலைப்படுத்துமாறு நான் ஒருபோதும் கூற மாட்டேன். இந்த மண்ணில் என்னை விட பொருத்தமான ஒருவரை இனம் கண்டு அரசியலுக்குக் கொண்டு வந்தால் அவரை அத்தேர்தலில் போட்டியிட வைத்து நமது பிரதிநிதியாக தேர்ந்தெடுப்பதற்கு நான் இதய சுத்தியுடன் பாடுபடுவேன் என இப்பள்ளிவாசலில் வைத்து உறுதியளிக்கின்றேன்.

 

அது போன்று சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை பற்றி இங்கு வலியுறுத்தப்பட்டு எனது ஒத்துழைப்பும் கோரப்பட்டது. இவ்விடயத்தை தற்போது பள்ளிவாசல் பொறுப்பெடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும். அப்போதுதான் அது இந்த ஊரின் ஒட்டு மொத்த கோரிக்கையாக அது பார்க்கப்படும்.

 

அந்த வகையில் இது விடயத்தில் பள்ளிவாசல் முன்னெடுக்கவுள்ள அனைத்து நடவடிக்கைகளிலும் நான் பக்க பலமாக நின்று முழு ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு என்றும் தயாராகவே இருக்கின்றேன்.

 

இக்கோரிக்கையை முன்னெடுத்து போராடி வந்த சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் 2010ஆம் ஆண்டு இது விடயமாக என்னை வந்து சந்தித்து பேசியபோது கூட நான் எனது ஆதரவை வழங்கி- அதற்கான் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் கொடுத்திருந்தேன். ஊரின் தேவை என்று வருகின்றபோது அதில் எனது சுயநலன் கருதி நான் மாற்றுக் கருத்துக் கொள்கின்ற எண்ணம் என்னிடம் கிஞ்சித்தும் கிடையாது.

 

எமது மண்ணின் விடிவுக்காக எந்த சவாலையும் எதிர்கொள்வதற்கு நான் தயாராக உள்ளேன். அத்தகைய அரிச்சுவடில்தான் இதுவரை நான் அரசியல் பயணத்தை தொடர்கின்றேன். அந்த வகையில் சாய்ந்தமருது பிரதேசத்தின் நலன்களுக்காக தொடர்ந்தும் என்னை அர்ப்பணித்துப் போராடுவேன் என உறுதியளிக்கின்றேன்” என்று ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team