சாரா ஜெஸ்மினின் கீழ் ஆயுதப் பயிற்சி பெற்ற 10 பெண்களை, சட்டமா அதிபரின் ஆலோசனை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு..! - Sri Lanka Muslim

சாரா ஜெஸ்மினின் கீழ் ஆயுதப் பயிற்சி பெற்ற 10 பெண்களை, சட்டமா அதிபரின் ஆலோசனை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு..!

Contributors
author image

Editorial Team

சாரா ஜெஸ்மினின் கீழ் ஆயுதப் பயிற்சி பெற்ற 10 பெண்களை சட்டமா அதிபரின் ஆலோசனை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே நேற்று (19) உத்தரவிட்டார்.

 

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

கட்டுவாபிட்டி தேவாலயத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரி மொஹமட் ஹஸ்துனின் மனைவியான புலஸ்தினி மகேந்திரன் எனப்படும் சாரா ஜெஸ்மின் என்பவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டிருந்தார்.

தீவிரவாத சித்தாந்தங்களை பரப்புவதற்கும், முஸ்லிம் அரசாங்கத்தை உருவாக்குவதற்கும், ஈஸ்டர் தாக்குதலுக்கு ஆயத்தமாகும் விதமாக தீவிரவாத போதனைகளில் பங்கேற்று சத்தியப்பிரமாணம் செய்ததாகக் கூறப்படும் பத்து பெண் சந்தேக நபர்கள், அம்பாந்தோட்டை – சிட்டிகுளம், கந்தான்குடி- கரவலநகர் மற்றும் நுவரெலியா – பிளாக்பூல் ஆகிய முகாம்களில் பயிற்சி பெற்றுள்ளதாக நீதிமன்றில் தெரியவந்துள்ளது.

தீவிரவாத போதனைகள் மற்றும் ஆயுதப் பயிற்சிகளில் கலந்து கொண்ட பின்னர் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்ட 25 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 16 பெண்கள் அடங்குவதாகவும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட 25 சந்தேக நபர்களில் கைது செய்யப்பட்டவர்களை தவிர்த்து ஏனையவர்கள் உயிரிழந்து அல்லது காணாமல் போயுள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team