சிங்கள மக்களின் எதிர்ப்பினைச் சமாளிக்கவே வடக்கில் கைதுகள் - சார்ள்ஸ் நிர்மலநாதன் - Sri Lanka Muslim

சிங்கள மக்களின் எதிர்ப்பினைச் சமாளிக்கவே வடக்கில் கைதுகள் – சார்ள்ஸ் நிர்மலநாதன்

Contributors

சிங்கள மக்களின் எதிர்ப்பினை சமாளிக்கவே வடக்கில் கைதுகள் இடம்பெறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

வட பகுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இடம்பெற்று வரும் கைதுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்

தற்போதைய கோட்டபாய அரசாங்கம் சிங்கள மக்களின் பெரும்பான்மையான ஆதரவோடு ஆட்சி பீடம் ஏறிய போதிலும் தற்போது சிங்கள மக்களின் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகிய நிலை காணப்படுகின்றது

சிங்கள மக்கள் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாட்டில் ஈடுபட்டு உள்ளார்கள் பௌத்தத் துறவிகள் சிங்கள மக்கள் அரசுக்கு எதிராக முழுமையான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள்

குறிப்பாக ஆட்சிக்கு வரும் போது இந்த அரசாங்கம் நாட்டிற்கு நன்மை புரியும் நீதியை நிலைநாட்டும் நேர்மையான அரசாக இருக்கும் எனவும் சிங்கள மக்கள் விரும்பியே இந்த அரசாங்கத்திற்கு பூரண ஆதரவு வழங்கிய ஆட்சி பீடம் ஏற்றினார்கள்

எனினும் தற்போதைய அரசாங்கமானது இலங்கையின் முக்கிய ஸ்தானங்களை வெளிநாடுகளுக்கு தாரை வார்க்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதன் காரணமாக சிங்கள மக்கள் பௌத்த துறவிகள் தமது எதிர்ப்பினை அரசாங்கத்திற்கு எதிராக வெளியிட்டு வருகிறார்கள்

வட கிழக்குப் பகுதியில் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க எத்தனிக்கின்றார்கள் எனக் காரணங்காட்டி இளைஞர் யுவதிகளை கைது செய்து சிங்கள மக்களின் எதிர்ப்பினை சமாளிப்பதற்காக வடக்கில் பல்வேறுபட்ட கைது நடவடிக்கைகள் இந்த அரசினால் திட்டமிடப்பட்டு இடம்பெற்று வருகின்றது

வட கிழக்கில் புலிகள் மீள உருவாகிறார்கள். ஆனால் கோட்டாபய அரசினால் மாத்திரமே இந்த விடுதலைப் புலிகள் உருவாக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்ற செய்தியினை தென்னிலங்கை மக்களுக்கு தெரிவித்து, தென்னிலங்கை மக்களை கோட்டாபய மீது நம்பிக்கையினை ஏற்படுத்தி அரசாங்கத்தின் மீது உள்ள எதிர்ப்பு உணர்ச்சியை இல்லாமல் செய்வதற்காகவே இந்த வலுக்கட்டாயமான செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இவ்வாறான ஒரு சம்பவம்தான் இன்றைய தினம் வடக்கு மாகாணத்தில் 4 க்கும் மேற்பட்டோர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த செய்தியானது தென்னிலங்கை மக்களை சமாளிப்பதற்காக அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படும் ஒரு காரியம் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

யாழ். நிருபர் பிரதீபன்

Web Design by Srilanka Muslims Web Team