சித்திலெப்பை எனும் மறுமலர்ச்சி பல்கலைக்கழகம் » Sri Lanka Muslim

சித்திலெப்பை எனும் மறுமலர்ச்சி பல்கலைக்கழகம்

sidd

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

 

எஸ். ஸஜாத் முஹம்மத்
sajathislah@gmail.com


இலங்கை முஸ்லிம்களின் கல்விப் பாரம்பரிய வளர்ச்சியில் பாரிய அசைவியக்கத்தை ஏற்படுத்திய முன்னோடிகளில் முதன்மையானவர் அறிஞர் சித்திலெப்பை ஆவார். முஸ்லிம்களின் சமூக, கல்வி, அரசியல் தளங்களில் இவர் ஆற்றிய பங்களிப்பு இன்றும் நிங்கா இடத்தை பெற்றுள்ளது.

இலங்கை முஸ்லிம் சமூகமானது 19 ம் நுாற்றாண்டில் காலநித்துவ ஆட்சியின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்த காலப்பகுதியில் பழைமை பேணுபவர்களாகவும், நவீன மாற்றங்களை ஏற்காதவர்களாகவும், ஏனைய சமூகங்களிலிருந்து ஒதுங்கி வாழும் மனப்பாங்கை கொண்டவர்களாகவும் இருந்தனர்.

கல்வியில் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேல் பின்னடைந்தவர்களாக முஸ்லிம்கள் இருந்த காலப்பகுதியில் இற்றைக்கு 173 ஆண்டுகளுக்கு முன் கண்டியில் பிறந்த சித்திலெப்பை எனும் ஆழுமை ஆழ்ந்த உறக்கத்தில் இருட்டரையில் உறங்கிக்கிடந்த முஸ்லிம்களை தட்டியெழுப்பி முஸ்லிம் சமூகத்திற்கு புது இரத்தம் பாய்ச்சுவதற்காக முன்வந்தார். இதனால் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பௌத்த, இந்து சமூகங்களின் மறுமலர்ச்சி நாயகங்களாகப் பார்க்கப்பட்ட அனகாரிக தர்மபால (கி.பி 1867 – 1933), ஹிக்கடுவை ஸ்ரீ சுமங்கல தேரர் (கி.பி. 1827 – 1912), ஆறுமுக நாவலர் (கி.பி 1822 – 1879) போன்று முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சித் தந்தையாக அறிஞர் எம்.சீ. சித்திலெப்பை பார்க்கப்படுகின்றார் அல்லது நோக்கப்படுகின்றார்.

இலங்கை முஸ்லிம் சமூகம் இருண்ட யுகத்தில் எழுச்சியை நோக்கி நகர்வதற்காக ஆற்றல் மிக்க தலைமையை வேண்டி நின்ற காலத்தில் சித்திலெப்பை போன்ற ஆளுமைகள் அந்த இடைவெளியை நிறைவு செய்தன என கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள் குறிப்பிடுகின்றார்.

முஸ்லிம்கள் தங்களது எழுச்சிக்காக ஒரு புத்திஜீவியான சக்திமிக்க தூரநோக்கு கொண்ட தலைமைத்துவத்தை வேண்டி நின்ற ஒரு காலத்தில் வரலாற்றில் இத்தேவையை பூர்த்தி செய்வதற்காகத் தோன்றிய இரண்டு தலைவர்களாக எம்.சீ. சித்திலெப்பையும் (கி.பி 1833 – 1898), எகிப்திலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் ஒராபி பாஷாவும் (கி.பி 1833 – 1900) விளங்குகின்றார்கள்.

அரேபியத் தீபகற்பத்தின் மேற்குக் கரையிலிருந்து வணிகராக இலங்கையில் இறங்கு துறைமுகங்களில் முக்கிய ஒன்றாகிய அளுத்காமம் எனும் பகுதியில் குடியேறி இலங்கை பெண்ணைத் திருமணம் செய்த முல்க் (ரஹ்) பர்பரீ என்பவரின் சந்ததியில் முஹம்மத் காஸிம் சித்திலெப்பை எனும் ஆளுமை கி.பி 1838 ஜுன் மாதம் 11ஆம் திகதி கண்டியில் பிறந்தார்.

ஒல்லாந்தர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கடைபிடித்த இறுகிய பொருளாதாரக் கொள்கையால் முல்க் (ரஹ்) மகனான முஹம்மத் லெப்பை ஸ்ரீ விக்ரமராஜசிங்கனின் காலத்தில் கண்டி இராச்சியத்தில் குடியேறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டார். அவர் கண்டியில் வாழ்ந்த முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவரின் வாரிசான எம்.எல். சித்திலெப்பை பிறக்கின்றார். (எம்.சீ. சித்திலெப்பையின் தந்தை) இவர் அறபு, தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்றவராக இருந்ததுடன் சட்டக்கல்வியிலும் தேர்ச்சிபெற்றிருந்தார். இதனால் 1833 ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞராகவும் ஆங்கிலேயரினால் நியமிக்கப்பட்டார்.

எம்.எல். சித்திலெப்பைக்கு மூன்று ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் இருந்தனர். மூத்தவர் முஹம்மத் லெப்பை இவர் ஓர் ஆலிமாகவும் முஸ்லிம்களுக்கு தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்ததுடன் விவாக விவாகரத்துப் பிரச்சினைகளை தீர்க்கும் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டிருந்தார். கலைத்துறையில் ஆழ்ந்த ஈடுபாடுடைய இவர் 300க்கும் அதிகமான பதங்களைப் பாடிய ஒரு புலவராக அவர் திகழ்ந்தார். இரண்டாமவர் சித்திலெப்பை. பெண் பிள்ளையான முத்துநாச்சியா ஒரு ஆலிமாவாகவும் கண்டியில் சித்திலெப்பை ஆரம்பித்த முஸ்லிம் பெண்களுக்கான பாடசாலையின் அதிபராகவும் இருந்தார்.

சித்திலெப்பை தனது ஆரம்பக் கல்வியை தின்னைக் குர்ஆன் பள்ளிக்கூடத்திலும் அறபு, தமிழ் மொழிகளை மூத்த சகோதரரான முஹம்மத் லெப்பை ஆலிமிடமும் கற்றார். அக்கால முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பிரபல்யமாகியிருந்த மார்க்க அறிஞரான அக்குரணையைச் சேர்ந்தவரும் காயல்பட்டினத்தில் கற்றவருமான கசவத்தை ஆலிம் அப்பா என்று அழைக்கும் ஷேக் முஹம்மத் ஆலிமிடம் கற்றார்.

பின்னர் கண்டியிலிருந்த ஜெனரல் ஸ்கூலில் ஆங்கிலக் கல்வியைக் கற்றார். இதனால் சிறு வயதிலேயே ஆங்கிலம் அறபு, சிங்களம், தமிழ் போன்ற மொழிகளில் புலமை பெற்றவராகவும், இஸ்லாமிய கலைத்திட்டத்தில் தேர்ச்சிபெற்றவராகவும் இருந்தார்.

அவரது அறிவுப்பின்னனியினால் தூரநோக்கு சிந்தணை காரணமாக அவரைச் சுற்றி நிகழும் மாற்றங்களை ஆழமாக சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தார். காயல்பட்டினத்தை சேர்ந்தவரும் கண்டியில் வசிப்பிடத்தைக் கொண்டவருமாகிய அப்துல் காதர் மியாபிள்ளையின் மகளான செய்யிதா உம்மாவை கி.பி 1871 இல் திருமணம் செய்தார்.

கசவத்தை ஆலிம் அப்பா, யமனிலிருந்து வந்து குடியேறிய அறிஞர் உமர் பின் அப்துல்லாஹ் அல்பாதிஹ் அல்யெமனி, 1833 ஆம் ஆண்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட எகிப்தின் சுதந்திரப் போராளி ஒராபி பாஷா ஆகியோரின் தொடர்பும் 19ஆம் நூற்றாண்டின் இஸ்லாமிய சிந்தனையை நவீனமயப்படுத்தி ஒருமைபாட்டிற்காக அழைப்புவிடுத்த ஜமாலுத்தீன் அப்கானி, முஹம்மத் அப்துஹு, இந்திய முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்காக உழைத்து அலிகார் பல்கலைக்கழகத்தையும், அலிகார் கல்வி மறுமலர்ச்சி இயக்கத்தையும் தோற்றுவித்த சேர் செய்யித் அஹ்மத் கான் போன்றோர்களின் சிந்தனைத் தாக்கமும் சித்திலெப்பையை இலங்கை முஸ்லிம் சமூகத்தை பற்றியும் மறுமலர்ச்சி பற்றியும் தேவையை உணர்த்தியது.

1862 ஆம் ஆண்டு கண்டி மாவட்ட நீதிமன்றத்திலும் கி.பி. 1864 உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக ஆங்கில அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்த இவர் சமகாலத்தில் பிரசித்தமான நேந்தாரிசாகவும் பணிபுரிந்தார். இவரால் எழுதப்பட்ட காணியுறுதிகள் இன்றும் பலரிடம் உள்ளதாக அறியப்படுகின்றது. 1874 – 1878 வரை கண்டி மாநகர நீதிமன்ற நீதிபதியாகவும், கண்டி மாநகரசபை அங்கத்தவராகவும் ஐந்து வருடங்கள் கடமையாற்றினார். ஐந்து வட்டாரங்களைக் கொண்ட அம் மாநகரசபையின் ஏனைய அங்கத்தவர்களாக லாங்கல் பேர்க், எல்.பீரிஸ், ரிபல், ஏ.குணதிலக என்போர் கடமையாற்றினர். 1882ஆம் ஆண்டு கண்டி மாநகரசபை அங்கத்துவத்திலிருந்து தானாக விலகி முஸ்லிம் சமூகத்தின் மறுமலர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் உழைப்பதற்கு முற்பட்டார்.

1882 ஆம் ஆண்டு டிசெம்பர் 12 ஆம் திகதி முஸ்லிம் நேசன் என்ற பத்திரிகையை ஆரம்பித்து முஸ்லிம் சமூகத்திற்கு அறிவூட்டி வந்தார். முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணம் அறியாமை என்பதை இனங்கண்டார். அவருடைய ஆக்கங்களும், பணிகளும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அறிவெழுச்சியை இலக்காக் கொண்டதாகவே இருந்தன. இவரது செயற்பாடுகளை அவதானித்த பழைமைவாதிகளும் கிளிப்பிள்ளை பாடம் சொல்லிக்கொடுக்கும் லெப்பைமார்களும் இவருக்கும் ஆதரவு வழங்காவிட்டாலும் கூட சில படித்த வர்க்கத்தினரும் வாப்பிச்சை மரைக்கார் போன்ற தொழில் அதிபர்களும் உறுதுணையாக இருந்தனர்.

சித்திலெப்பை தனது அறுபதாவது வயதில் நோய்வாய்ப்பட்டு 1898 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி (ரமழான் பிரை-14இல்) காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். இவரது ஜனாஸா கண்டி மஹிய்யாவையில் உள்ள காட்டுப்பள்ளி வலாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஒராபி பாஷா, யாகூப் பாஷா தனது குடும்பத்துடன் ஜனாஸா நல்லடக்கத்துக்காக எகிப்திலிருந்து வந்திறங்கினார். 3000 இக்கும் அதிகமானவர்கள் ஜனாஸா தொழுகையில் கலந்துகொண்டனர். இவருக்கு கண்டி நீதிமன்றத்தில் அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் பல பகுதிகளிலும் இந்தியாவில் கீழக்கரையிலும் ஜனாஸா தொழுவிக்கப்பட்டது.

கல்விச் சீர்திருத்த பணியில் சித்திலெப்பை

முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணம் நவீன கல்வியையும் ஆங்கில மொழியையும் புறக்கனித்ததே என்பதை உணர்ந்தார். மதமாற்ற அச்சமும் பழைமைவாதிகளின் தூண்டலும் முஸ்லிம்கள் நவீன கல்வியை புறக்கணிப்பதற்கு காரணம் என அறிந்த அவர் முஸ்லிம் நேசன், ஞானதீபம் ஆகிய தமது பத்திரிகைகளில் கல்வி சீர்திருத்தம், சமய முன்னேற்றம், பகுத்தறிவு வளர்ச்சி பற்றி எழுதிவந்தார்.

அத்துடன் இந்தியாவில் கல்வி மறுமலர்ச்சிக்காக போராடி வந்த அலிகார் இயக்கத்தின் செயற்பாடுகள் பற்றியும் மத்திம காலத்தில் முஸ்லிம் முன்னோடிகள் கல்விக்கு ஆற்றிய பங்களிப்பினையும் ஆங்கிலக் கல்வியை முஸ்லிம்கள் அறிவதால் இருக்கின்ற வாய்ப்புக்களையும் இஸ்லாமிய சூழலில் நவீன கல்வியின் தேவையையும் அதற்கான முஸ்லிம் பாடசாலை, அதிபர், ஆசிரியர், உதவியாசிரியர் உருவாக்கம் பற்றியும் எழுதிவந்தார். இதனால் 19ஆம் நூற்றாண்டின் முஸ்லிம் சமூகமாற்றத்தின் தந்தையாக கருதப்படுகின்றார் என கலாநிதி எம்.எஸ்.எம் அனஸ் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சமய மரபுகளில் கட்டுண்டு கிடந்த முஸ்லிம்களின் பழைமைவாதம் தகர்க்கப்படாதவரை முன்னேற்றம் சாத்தியமற்றது என முதலில் உணர்ந்திருந்த இலங்கையராக சித்திலெப்பையை குறிப்பிடலாம். நவீன சமய அறிவும் உலகியல் நோக்கும் என்ற அடுத்த நவீன யுகத்திற்கு அவசியமாக இருந்த சிந்தனையை அன்று சித்திலெப்பை பெற்றிருந்தார். அதுவே அவரை முஸ்லிம்களின் மறுமலர்ச்சித் தந்தையாக்கியது. சமய கடமைகளையும் சமய ஒழுங்குகளை மட்டுமே தனது போதனைகளாகக் கொண்டிருந்த உலமா மரபிலிருந்து சித்திலெப்பை புதிய பாதையை வகுத்தார். (கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் – தற்கால இஸ்லாமிய சிந்தனை)

சமகாலத் தேவையை நிறைவுசெய்யும் வகையில் மத்ரஸா கல்வி முறைமை பொருத்தமாக இல்லாமையினால் இங்கிருந்து படித்து வெளியாகின்ற மாணவர்கள் உலக மாற்றங்களுக்கும் புதிய கருத்துக்களுக்கும், சிந்தனைகளுக்கும் எதிர்ப்பை வெளிப்படுத்துபவர்களாகவும் பழைமையைப் பேணுபவர்களாகவும் இருந்தனர். இதனால் நவீன மாற்றங்களுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் பாடநூட்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

19ம் நூற்றாண்டு ஆரம்பப்பகுதியில் இலங்கையின் கல்வி குறிப்பாக முஸ்லிம்களின் கல்வி பள்ளிவாசல், குர்ஆன் மத்ரசாக்களோடும், திண்ணைப் பள்ளிக்கூடங்களோடும் சம்பந்தப்பட்டிருந்ததே தவிர நாம் கூறக்கூடியதாக ஒன்றும் இருக்கவில்லை. வைத்தியத் துறையிலும் கப்பலோட்டும் துறையிலும் வானாராய்ச்சி முறைகளிலும் பண்டைய இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு மரபும் அறிவும் இருந்தது என்பது வரலாற்றில் கூறப்பட்டிருக்கின்றுது.

சேர். அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்டன் இந்த உண்மைகளை தனது நூலில் பதிவு செய்துள்ளார். அரபு மொழியில் கிரேக்கர்களினால் மொழிபெயர்க்கப்பட்ட பல விஞ்ஞான கல்வி நூல்கள் இலங்கை முஸ்லிம்களிடத்தில் இருந்ததாகவும் இங்கிருந்தும் அவை மேல் நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் குறிப்புக்கள் இருக்கின்றன. ஆனால் வாய்ப்புக்கேடாக அந்தக் கல்விமுறை என்ன? எவ்வளவு காலம் நீடித்தது? அதில் பயன்படுத்தப்பட்ட நூல்கள் எவை? அந்தப் மரபுக்கு என்ன நடந்தது? என்பன பற்றி நமக்கு எதுவும் தெரியவில்லை. நாம் பொதுவாகக் கூறுவது போல் போர்த்துக் கீசரினுடைய பாரிய எதிர்ப்புக்களின் காரணமாக முஸ்லிம்கள் தங்களது இந்த வகையான கல்வித் துறைகளை இழந்திருக்கக்கூடும்.

ஆனால் 18ம் 19ம் நூற்றாண்டு காலப்பகுதியைப் பார்க்கும்போது எமது கல்வி மிகப் பின்தங்கியதாக புதிய யுகத்திற்கு முகம் கொடுக்கக்கூடிய சக்தியற்றதாக இருந்தது என்பதுதான் உண்மை. ஒரு பூச்சிய நிலையில் இருந்து முன்னேற்றத்தை ஆரம்பிக்க வேண்டியிருந்தது. எல்லையற்ற எதிர்ப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. எங்கும் ஒரு குழப்பமான சூழ்நிலை இருந்தது. பழைமையான கோட்பாடுகளில் இருந்து விடுபடுவதற்கு முஸ்லிம்கள் தயங்கினர். இந்தத் தயக்கம் இந்தியாவிலும் காணப்பட்டது. இந்தத் தயக்கம் முழு மத்திய கிழக்கையும் பாதித்து இருந்தது. இன்றும் அரபு மக்கள் அந்தத் தயக்கத்தில் இருந்து விடுதலை அடையவில்லை. மாற்றங்கள், முன்னேற்றம், புதிய கல்வி என்பதை நோக்கிய பயணத்தின் அவசியம் தேவையாக இருந்த சூழ்நிலையில் ஒரு சில முஸ்லிம் சிந்தனையாளர்கள்தான் இந்தப் பணியில் தம்மை அர்ப்பணித்து செயற்பட்டனர். இந்த வகையில் பணியாற்றியவர்களில் சித்திலெப்பை முக்கியமானவர் எனக் குறிப்பிடுகின்றார்.

முஸ்லிம் பாடசாலை உருவாக்கம்

முஸ்லிம்களின் தனித்துவத்தை பாதுகாப்பதற்கும் நவீன கல்வி மீது கொண்ட மதமாற்ற அச்சத்தை நீக்கி இஸ்லாமிய சூழலில் நவீன கல்வியைக் கற்பதற்காக பத்திற்கும் அதிகமான முஸ்லிம் பாடசாலைகளை சித்திலெப்பை உருவாக்கினார். முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்த கண்டியில் உடுநுவர, கொழும்பு, குருநாகல், கம்பளை, பன்னாகம், பொல்கஹவெல, பதுளை, காலி, மாத்தளை, கேகாலை, ஹட்டன், நுவரெலிய போன்ற இடங்களில் இவரது முயற்சியினால் முஸ்லிம் பாடசாலைகள் தோன்றின.

பழைமைவாதிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 1861ஆம் ஆண்டு சேக்காதி மரிக்கார், காசிம் லெப்பை மரிக்கார் போன்றோரின் உதவியால் புதிய சோனகத் தெருவில் 1884 ஆம் ஆண்டு சித்திலெப்பையின் அயராத முயற்சியினால் ஆங்கில முஹம்மதியா பாடசாலை அல்மத்ரஸதுல் ஹைரிய்யா இஸ்லாமிய்யா உருவாக்கப்பட்டது. தற்போது இது ஹமீத் அல்ஹுஸைன் தேசிய கல்லுாரி என அழைக்கப்படுகின்றது. இதற்கு முதன்முதலாக ஒராபி பாஷா அவர்கள் 100 ரூபா நன்கொடை வழங்கினார்.

1891 ஆம் ஆண்டு கொழும்பு மருதானை ஜும்ஆப் பள்ளிவாசலில் ஜும்ஆத் தொழுகைக்குப் பின்னர் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு உழைக்குமாறும் நவீன கல்வியை கற்பிப்பதற்காக பாடசாலையை உருவாக்குமாறும் உறுக்கமான உரை ஒன்றை நிகழ்த்தினார். இவ்வுரை பற்றிய செய்தியை Ceylon Times பத்திரிகை 1891ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி இதழில் வெளியிட்டது.

ஐ.எல்.எம் அப்துல் அஸீஸ் ஒராபி பாஷா, கொடைவள்ளல் ஏ.எம். வாப்பிச்சை மரிக்கார் ஆகியோர் இணைந்து 1891 ஆம் ஆண்டு கொழும்பு கல்விச்சங்கம் உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக 1892 ஆம் ஆண்ட 8ஆம் மாதம் 22 ஆம் திகதி மருதானை ஜும்ஆப் பள்ளி வளாகத்தில் மருதானை முஹம்மதியா ஆங்கிலப் பாடசாலை அல்மத்ரஸதுஸ் ஸாஹிரா (இன்றைய மருதானை ஸாஹிரா) நிறுவப்பட்டது. இது ஆறுமுகநாவலரின் இந்துக் கல்லூரியையும் சிங்கள ஆங்கில கல்லூரியையும் முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

முஸ்லிம் பெண்களின் கல்வித்தேவையை நிறைவேற்றும் வகையில் பெண்களுக்கான தனியான முஸ்லிம் பாடசாலைகள் இருக்காதமையினால் முஸ்லிம் பெண் மாணவிகள் கற்பதற்காக வாய்ப்பு இருக்கவில்லை. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் கண்டி திருகோணமலை வீதியில் முஸ்லிம் பெண்களுக்கான முதல் பாடசாலையை நிறுவினார். இதன் அதிபராக சித்திலெப்பையின் சகோதரி முத்துநாச்சியார் கடமையாற்றினாள். இதற்காக கண்டி கச்சேரியில் வேலைசெய்த சித்திலெப்பையின் மைத்துனர் இஸ்மாயீல் லெப்பை மரிக்கார் சித்திலெப்பையுடன் இணைந்து உழைத்தார். இப்பாடசலையில் 152 மாணவிகளின் பெயர்கள் சேர்வு இடாப்பில் பதியப்பட்டிருந்தன. நான்கு ஆசிரியர்கள் இங்கு கற்பித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து மடைத்தெரு வீதி, கட்டுக்காலை, கம்பளை (1891 ஆகஸ்ட்), குருநாகல் (1891), பன்னாகமம், காலிக்கு அண்மையிலுள்ள தல்பிடிய, மாத்தறை என பல பிரதேசங்களில் பெண்களுக்கான பாடசாலையைத் தொடங்கினார். இப்பாடசாலையின் பாடத்திட்டமாக குர்ஆன், அறபு, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளும் கணிதம், தையல் போன்ற பாடங்களும் கற்பிக்கப்பட்டன.

அறிஞர் சித்திலெப்பையும் பெண்களின் கல்வியும்

பெண்களின் கல்வி வளர்ச்சிக்கு சித்திலெப்பை எடுத்த முயற்சியை 1892 ஆம் ஆண்டு சித்திரை மாதம் குருநாகல் நகரில் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கான பாடசாலையை தரிசித்த கவர்னர் ஹவ்லொக் பின்வருமாறு கூறுகின்றார். ‘முஸ்லிம் பெண்களின் கல்வியில் விருத்தி ஏற்படுத்துவதில் மிகவும் இடைஞ்சல் உண்டு. இத்தடைகளை மீறி கண்டியிலும் குருநாகலிலும் எடுக்கப்பட்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவை (முஸ்லிம் நேசன் – 1892-04-06 – எம்.ஐ.எம். அமீன் : இலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட முன்னோடிகள் – பக்கம்: 07)

பழைமைவாதிகள் இவரது முயற்சிகளை எதிர்த்தாலும் சில அரசாங்க உத்தியோகத்தர்களும், மரிக்கார்மார்களும் இவரது இம்முயற்சிக்கு உதவ முன்வந்தனர். குருநாகல் அஞ்சல் அதிபராக கடமையாற்றிய அப்துல் கரீம் குருநாகலில் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் பாடசாலைக்கு உதவினார். மாத்தறையில் வாழ்ந்த எம்.எல்.எம். மரிக்கார் என்பவர் அங்கு அமைக்கப்பட்ட பெண்களுக்கான பாடசாலை உருவாக்கத்திற்கு உதவினார்.

கொழும்பில் பெண்களுக்கான பாடசாலையொன்றை நிறுவுவதற்கான சித்திலெப்பை எடுத்த முயற்சி தகுதியான முஸ்லிம் பெண் அதிபர் இல்லாமையினால் காலம் தாழ்த்தப்பட்டது. இம்முயற்சியை எம்.எல்.எம். அமீன் பின்வருமாறு கூறுகின்றார்.

‘கொழும்பில் முஸ்லிம் பெண்களுக்கான பாடசாலையை உருவாக்கும் நோக்கில் பொதுமக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக 1892-01-14 அன்று பழைய சோனகர் தெருவில் ஒரு பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது. காதர் ஸாஹிப் அலிகார் மரிக்கார் ஆலிம் ஹாஜியார் தலைமை தாங்கினார். சட்ட நிரூபன சபை உருப்பினரான அப்துர் ரஹ்மான், வாப்பிச்சை மரிக்கார், எம்.எல்.எம்.ஏ. அஸீஸ், சின்ன மரிக்கார், இஸ்மாயீல் லெப்பை மரிக்கார் ஆலிம் ஸாஹிப் ஆகியோர் இதன் அவசியத்தை வற்புறுத்தி பேசினார்.

Web Design by The Design Lanka