சிப்லி பாருக் கிழக்கு முதலமைச்சர் ஆதரவு பற்றி YLS ஹமீடின் ஊடக அறிக்கை - Sri Lanka Muslim

சிப்லி பாருக் கிழக்கு முதலமைச்சர் ஆதரவு பற்றி YLS ஹமீடின் ஊடக அறிக்கை

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சகோதரர் சிப்லி பாரூக்  கட்சியுடன் கலந்தாலோசிக்காமல் தான் கிழக்கு மாகாண முதலமைச்சர் விடயத்தில் ஏன் ஆதரவு வழங்கினார்? என்பது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக மக்களுக்கு சில தெரிவினை வழங்குவற்காக இவ்வறிக்கையினை வெளியிடுகின்றேன்.

 

கடந்த 2014ம் ஆண்டில் நடைபெற்ற கிழக்கு மாகாணசபை தேர்தலை தொடர்ந்து நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் 05 ஆசனங்களை மட்டும் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு முதலமைச்சர் ஒரு அமைச்சர் மற்றும் அவைத்தலைவர் பதவிகளும் 07 ஆசனங்களை பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு 02 அமைச்சுப் பதவிகளும் 03 ஆசனங்களை பெற்ற தேசிய காங்கிரசிக்கு 01 அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்ட போதும். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைச்சரவையில் உள்வாங்கப்படாமையினால் வாக்களித்த மக்களுக்கு கருமமாற்றுவதில் பலத்த சிரமங்களை எமது கட்சி எதிர்நோக்கியிருந்தது.
இன்னும் கூறப்போனால் மாகாண சபை விடயங்களில் அதிகாரத்தில் உள்ளவர்களால் எமது கட்சி ஓரங்கட்டப்பட்டிருந்தது. ஒரு சிறிய விடயத்தை சாதிப்பதற்கும் பெரிய போராட்டம் தேவைப்பட்டது. இதற்கு குறித்த அங்கத்தவர் சிப்லி பாரூக் அவர்களும் சாட்சி பகர்வார்.

 

இது தொடர்பாக அரச மேல்மட்டத்தில் பல தடவை எடுத்துரைத்ததும் எதுவும் நடைபெறாத நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் ஜனாதிபதியை சந்தித்து பேசினோம். அதில் முதலமைச்சர் பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்குவதற்கு எமக்கு எதுவித ஆட்சேபனை இல்லையென்றும் எமது கட்சியும் அமைச்சரவையில் உள்வாங்கப்படவேண்டியது அவசியமென்றும் சுட்டிக்காட்டினோம். இதனை ஏற்றுக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி இரண்டு வாரத்துக்குள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து ஒருவரை முதலமைச்சராக நியமிப்பதாகவும் எமது கோரிக்கையை உள்வாங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார். வாரங்கள் கழிந்து மாதங்களாகின. மாற்றங்கள் தூரத்துப்பச்சையாகின.

 

ஜனாதிபதி தேர்தலும் வந்தது அது நடைபெற்றும் முடிந்தது அதனை தொடர்ந்து கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தை மாற்றியமைப்பது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் பேச்சுவார்த்தை நடாத்துவதாகவும் முதலமைச்சர் பதவியை தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரி நிற்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

 

இது தொடர்பாக நாம் ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டிருந்தோம். அதில் கிழக்கு மாகாணத்தில் தமிழிர் ஒருவர் முதலமைச்சராக வருவதில் கொள்கை ரீதியாக எமக்கு முரண்பாடுகள் இல்லை என்ற போதும் இன்றைய காலகட்டத்தில் இருக்கின்ற முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை நீக்கிவிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ஒருவரை முதலமைச்சராக்கினால் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வடகிழக்கை இணைக்க சதி செய்கின்றார்கள் என்ற பிரச்சாரத்தை இனவாதிகள் தெற்கில் கட்டவிழ்த்து விடுவார்கள்.

 

 

இனவாதிகளால் கடந்த 02 வருடங்கள் சுக்குநூறாக்கப்பட்டு இப்பொழுதுதான் ஓரளவு நிம்மதி காற்றை சுவாசிக்கின்ற முஸ்லிம் சமூகம் அவ்வாறான முனைவுகளால் பாரிய எதிர்மறையான சூழ்நிலையை சந்திக்க நேரிடும். எனவேää முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் முதலமைச்சரை இச் சந்தர்ப்பத்தில் விட்டுக் கொடுக்கக் கூடாது என்றும் மாறாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து முஸ்லிம் முதலமைச்சரை பெற்றுக்கொண்டு ஆட்சியமைக்க முன்வர வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

 

எனவே,தமிழர் ஒருவரை முதலமைச்சர் ஆக்குவதற்கு நாம் முனைவதாக இருந்திருந்தால் இவ்வாறான ஒரு அறிக்கையை ஏற்கனவே, நாம் வெளியிட்டிருக்க முடியாது.

 

சகோதரர் சிப்லி பாரூக் அவர்கள் கூறிய விடயம் தொடர்பாக உண்மையில் நடந்தது என்ன? என்பதை மக்கள் அறிய வேண்டும்.

 

கடந்த 05 திகதி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை காரியாலயத்துக்கு உரிய கட்சிகளக்கு தெரியாமல் அழைத்திருந்தார். இதனை கேள்வியுற்று நானும் அங்கு சென்றிருந்தேன். என்னுடன் எமது மாகாண சபை உறுப்பினர் M.S. சுபைரும் வந்திருந்தார் ( மறுநாள் வெள்ளி நடைபெறவிருக்கம் உயர்பீட கூட்டம் தொடர்பாக சகோதரர் சிப்லி பாரூக் அவர்களிடம் கதைத்தபோது சனிக்கிழமை தான் (07ந் திகதி) கொழும்பு வர முடியும் என்று தெரிவித்திருந்தர்)

 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமை காரியாலயத்திற்குச் சென்றபோது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பலர் மண்டபத்தில் இருந்தனர். சுசில் பிரமே ஜயந்தவின் அறைக்குள் சென்றபோது அவர் சில மாகாண சபை உறுப்பினர்களிடம் சத்திய கடதாசியில் ஒப்பம் பெற்றுக்கொண்டிருந்தார்.

 

அவருடன் நான் கதைக்க வேண்டும் என்று கூறிய போது சத்திய கடதாசி தங்களது உறுப்பினர்களுக்கு அல்ல என்றும் குறித்த அங்கத்தவர்கள் கையொப்பம் வைத்து விட்டு வெளியே சென்றதும் என்னிடம் பேசுவதாகவும் சற்று தாமதிக்குமாறும் கூறினார்.

 

அச் சந்தர்ப்பத்தில் நான் வெளியெ வந்து மண்டபத்திலிருந்த ஏனைய மாகாணசபை உறுப்பினர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது எமது அங்கத்தவர் சுபைர் உள்ளே அழைக்கப்பட்டு சத்திய கடதாசியில் கையொப்பம் வைக்குமாறு வற்புறுத்தபட்டிருக்கின்றார். அதற்கு அவர் கட்சியின் செயலாளர் நாயகம் வந்திருக்கின்றார் முதலில் அவருடன் பேசுங்கள் என்று கூறிய போது இல்லை நீங்கள் கையொப்பம் வைத்துவிட்டு ஏற்கனவே கையொப்பம் வைத்துவிட்டதாக அவரிடம் கூறுங்கள் என்று சுசில்பிரேம ஜயந்த அவர்கள் கூறியிருக்கின்றார்கள். அதற்கு சுபைர் அவர்கள் நான் கையொப்பம் வைக்கவில்லை என்ற விடயத்தை ஏற்கனவே கட்சியின் செயலாளரிடம் கூறிவிட்டேன் எனவே என்னால் பொய் கூற முடியாது என்று வெளியில் வந்துவிட்டார்.

 

அதன்பின் உள்ளே சென்ற நான் சுசில் பிரேம ஜயந்த அவர்களிடம் பேசினேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவி வழங்குவதில் எமக்கு ஆட்சேபனை இல்லையென்றும் ஆனால் அமைச்சரவை அமைப்பது தொடர்பாக உரிய கட்சிகளுடன் பேசாமல் நீங்கள் இவ்வாறு செய்வது பிழையென்றும் சுட்டிக்காட்டினேன். அவ்வாறாயின் திங்கட் கிழமை வரை (09.02.2015)இதை ஒத்தி வைப்பதாக சுசில் பிரேமஜயந்த அவர்கள் என்னிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து நானும் M.S. சபைர் அவர்களும் வெளியில் வந்துவிட்டோம்.

 

ஆனாலும் சகோதரர் சுபைர் அவர்களுக்கு தொடர்ந்தும் தொலைபேசி அழைப்புக்கள் வந்தவண்ணம் இருந்தன. “வந்து கையொப்பம் வைத்துவிட்டு செல்லும் படி” ஆனாலும் அவர் மறுத்துவிட்டார். அதேநேரம் சிப்லி பாரூக் அவர்கள் காத்தான்குடியில் இருந்ததாக நாம் நம்பியதால் அவரிடம் கையெழுத்துப் பெற முனைவார்கள் என்று நாம் நினைத்துக்கூட பார்க்கவில்லை அதே நேரம் அவர் மீது எமக்கிருந்த அதீத நம்பிக்கையும் அவரை சந்தேக கண்ணோட்டத்தினால் பார்ப்பதற்கான சு10ழ்நிலையை எமக்கு உருவாக்கவில்லை.

 

ஆனால் பின்னர் தான் சகோதரர் சிப்லி பாரூக் அவர்களும் சத்திய கடதாசியில் கையொப்பம் வைத்த செய்தி எமக்கு கிடைத்தது.

 

சகோதரர் சிப்லி பாரூக் அவர்கள் ஆதரவளித்த அங்கத்தவரின் கணக்கைகாட்டி முஸ்லிம் முதலமைச்சரை பெறுவதற்காக கட்சியுடன் கலந்தாலோசிக்காமல் ஆதரவளித்ததாக கூறியிருக்கின்றார்.
பொது மக்கள் இங்கு சிந்திக்க வேண்டிய விடயங்கள் சகோதரர் சிப்லி பாரூக் அவர்கள் கட்சியுடன் கலந்தாலோசித்து கட்சி ஒரு தமிழரை முதலமைச்சராக்க முயற்ச்சிக்கின்றது என்பதை அறிந்ததும் அவர் மறுபக்கம் ஆதரவளித்திருந்தால் அவரது கூற்றில் நியாயம் இருந்திருக்கும். சுசில் பிரேம ஜயந்த அவர்கள் திங்கட் கிழமை வரை ( 09.02.2015) கால அவகாசம் கோரியிருக்க கட்சியுடன் கலந்தாலோசிக்காமல் அவசர அவசரமாக சத்திய கடதாசியில் கையொப்பம் வைத்தது ஏன்? கட்சியுடன் கலந்தாலோசிக்காதது தவறுதான் என்று அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார். அவ்வாறாயின் அத்தவறை அவரைச் செய்யத் தூண்டிய காரணியென்ன.

 

அவர் கையொப்பம் வைத்தபின் அத்தகவல் கட்சிக்கு கிடைத்ததும் அதனை வாபஸ் பெறுவதற்கு கட்சி அவரை அறிவுறுத்தியது உண்மை. ஏனெனில் அவரது ஆதரவின்றி முதலமைச்சர் நியமிக்கப்பட முடியாது அவ்வாறான சு10ழ்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் அமைச்சரவை அமைப்பது தொடர்பாக ஒரு உடன்பாட்டிற்கு வந்திருக்கும். கட்சியின் பலத்தை தனது தன்னிச்சையான செயலினால் தவிடுபொடியாக்கிவிட்டு அவ்வாறு வாபஸ் பெற கோரியது ஒரு தழிழ் முதலமைச்சரை உருவாக்க என்ற அவரது கூற்றிலிருந்து அவர் கூறும் விளக்கமென்ன?

 

ஆதரவளித்த அங்கத்தவர்களின் கணக்கைக்காட்டி தான் வாபஸ் பெற்றால் ஆட்சிக்கு தேவையான 19ல் ஒன்று குறைந்துவிடும் எனவே பெறும்பான்மை இருக்காது என்பது அவரது வாதம். அது சரியானது. ஆனால் அது எப்போது சரியானது? முதலமைச்சர் நியமித்ததன் பின்பா அல்லது அதற்கு முன்பா. முன்பு சரியென்றால் அது கட்சிக்கு சாதகமானது கட்சியுடன் ஒரு உடன்பாட்டிற்கு வராமல் முதலமைச்சரை நியமித்திருக்க முடியாது எனவே கட்சிக்கு அமைச்சரவையில் கிடைக்கவேண்டிய பங்கு கிடைத்திருக்கம்.

 

எனவே திட்டமிட்டு அதனை சிப்லி அவர்கள் தடுத்தாரா? என்ற கேள்வி எழும் அதுதான் உண்மையென்றால் அதன் பின்னணியும் துலக்கப்படவேண்டிவரும் அல்லது பின்பு என்றால், முதலமைச்சரை நியமித்ததன் பின்னர் அவரை கட்சி வாபஸ் வாங்கமாறு கேட்டதாக கூறமுடியுமா? முதலமைச்சர் நியமனத்தின் முன்பு அதனை வாபஸ் வழங்குமாறு கோரியது முதலமைச்சர் நியமனத்தை தாமதிக்கச் செய்து அமைச்சரவையில் கட்ச்சிக்குரிய பங்கினை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகும். மறு வார்த்தையில் சொல்லபோனால் கட்சியின் பேரம்பேசும் தன்மையை தக்க வைத்துக்கொள்வதற்காகவும்.

 

ஏனைய கட்சிகள் முதலமைச்சர் பதவிக்காக குறிவைக்கும் போது மூன்று ஆசனங்களை பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைச்சரவையில் கடந்த இரண்டரை வருடங்கள் இடம்பெறாததினால் (ஏன் சிப்லி பாரூக் அவர்களே கட்சியின் உயர் பீடத்தில் மாகாண சபையில் எதுவும் செய்ய முடியாமல் உள்ளது என முறையிடவில்லையா?) ஏற்ப்பட்ட அனுபவத்தின் பின்னனியில் எமக்கு வாக்களித்த மக்களுக்கு பணியாற்றுவதற்காக அமைச்சரவையில் இடம் எதிர்பார்ப்பது தவறா?

 

Y.L.S. ஹமீட்
செயலாளர் நாயகம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

Web Design by Srilanka Muslims Web Team