சிராஸ் மீராசாஹிப், உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்காமல் தனிமனித ஆட்சியினை செய்துவந்தார் - Sri Lanka Muslim

சிராஸ் மீராசாஹிப், உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்காமல் தனிமனித ஆட்சியினை செய்துவந்தார்

Contributors

( எஸ்.அஷ்ரப்கான் )

முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்காமல் தனிமனித ஆட்சியினை செய்துவந்தார். இவரது ஆட்சியில் வெளிப்படைத் தன்மை காணப்படவில்லை. இதனாலேயே சில உறுப்பினர்கள் அவரைவிட்டும் தூரமாகி நின்றோம்.

முதல்வர் நிஸாம் காரியப்பர் உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்கி எங்களுடன் கலந்தாலோசனை செய்து தனது பதவிக்காலத்தினை கொண்டுசெல்வாராயின் நிச்சயமாக அவருக்கு பக்கபலமாக இருப்போம். என்று கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் தெரிவித்தார்.
கல்முனை மாநகர புதிய முதல்வர் நிஸாம் காரியப்பருக்கு முதல்வர் ஆடை அணிவிக்கும் விழா அன்மையில் கல்முனையில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றிய பறக்கத்துள்ளாஹ் தொடர்ந்தும் அங்கு உரையாற்றும்போது,
கிழக்கு மாகாணத்தைப்பொறுத்தவரையில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் பரம்பரை பரம்பரையாக ஒற்றுமை, சக வாழ்வு வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். ஒவ்வொரு முஸ்லிம் ஊர்களுக்கும் இடையில் தமிழ் ஊர்களும,; அதேபோல் தமிழ் ஊர்களுக்கு இடையில் முஸ்லிம் ஊர்களும் என ஒன்றாய்க்கலந்து வாழ்ந்திருக்கின்றனர்
குறிப்பாக கல்முனை மாநகரம் என்பது வெறுமனே ஒரு ஊரையோ அல்லது ஒரு இனத்தையோ பிரதிபலிக்கும் மாநகரம் அல்ல. இது தமிழ் முஸ்லிம் என 11 கிராமங்களை உள்ளடக்கிய ஒரு மாநகரமாகும். அதிலும் விசேடமாக கல்முனை தொகுதிக்கே முழுமையான ஒரு உள்ளுராட்சி மன்றமாக கல்முனை மாநகரம் திகழ்கின்றது.
1956ம் ஆண்டு காலப்பகுதியில் கல்முனை முதன்முதலாக கல்முனை பட்டின சபை என்றும் கரவாகு வடக்கு கிராமோதைய சபை என்றும், கரவாகு தெற்கு கிராமோதைய சபை என்றும், கரவாகு மேற்கு கிராமோதைய சபை என்றும் பிரிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் சாய்ந்தமருதைச் சேர்ந்த கேட்முதலியார் அவர்களே கல்முனை பட்டின சபையின் தவிசாளராக இருந்தார். இதனைத் தொடர்ந்து செயின் தம்பி லெப்பை, எம். தம்பிப்பிள்ளை, எம்.சீ. அஹமது, கே.கே. மரைக்கார், ஏ. முகைதீன்பாவா ஆகியோர் கல்முனை பட்டின சபையின் தவிசாளர்களாக இருந்திருக்கின்றார்கள்.
இதன்பிறகு 1977 இலங்கை அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்கு அமைவாக தொகுதிவாரி தேர்தல் முறை ஒழிக்கப்பட்டு விகிதாசார தேர்தல் முறை உருவாக்கப்பட்டதன் பிற்பாடு குறித்த நான்கு உள்ளுராட்சி மன்றங்களும் ஒன்றினைக்கப்பட்டு 19 உறுப்பினர்களை உள்ளடக்கியதான கல்முனை பிரதேச சபை தோன்றம் பெற்றது. இருந்தபோது அக்காலத்தில் தேர்தல் இடம்பெறவில்லை. 1994ம் ஆண்டு முதன்முதலாக உள்ளுராட்சி மன்ற தேர்தல் விகிதாசார தேர்தலாக இடம்பெற்றது. இத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 10 ஆசனங்களை கைப்பற்றி அதன் தவிசாளராக ஐ.ஏ. ஹமீட் அவர்கள் தெரிவானார்கள். இவர் 3 வருடங்கள் தவிசாளராக இருந்தபிறகு உறுப்பினராக இருந்த எஸ்.எச்.அப்துல் ஹமீட் அவர்கள் தவிசாளராக நியமிக்கப்பட்டார்.
1994ம் ஆண்டு இடம்பெற்ற கல்முனை பிரதேச சபை தேர்தலின் பின்னர் கல்முனையில் 2006ம் ஆண்டு 2002ம் ஆண்டு தரமுயர்த்தப்பட்டிருந்த கல்முனை மாநகர சபை தேர்தலே இடம்பெற்றது. இத்தேர்தலிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 10 ஆசனங்களை கைப்பற்றி முதல்வரை தனதாக்கிக்கொண்டது. இதில் முதல்வராக ஏ.ஆர். அஜ்மீர் அவர்கள் இரு வருடங்களும், எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் இருவருடங்களும், செனட்டர் மசூர் மௌலானா அவர்கள் முதல்வராக கடமையாற்றினார்கள் என்பது வரலாறு.
2011ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 11 ஆசனங்களை கைப்பற்றி வெற்றியீட்டியது. இதனைத் தொடர்ந்து எழுந்த முதல்வர் சர்ச்சையின் பிற்பாடு சிராஸ் மீராசாஹிப் முதல் இரு வருடங்களுக்கு என நியமிக்கப்பட்டார். பின்னுள்ள இருவருடங்களுக்கு இன்று விழாக்காணும் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அவர்கள் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்;. இவருக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கல்முனை பட்டின சபை முதல் பிரதேச சபை மற்றும் மாநகர சபையில் இதுவரை எந்த தவிசாளரோ முதல்வரோ முழுமையான காலம் பதவியில் இருக்கவில்லை என்பது வரலாறாகின்றது. இது இவ்வாறு இருக்க அண்மைக் காலங்களில் சிலர் ஊர்களை மூட்டிவிடும் செயற்பாடுகளில் ஈடுபடமுற்பட்டனர். ஆனால் அந்த முயற்சியிலிருந்து அவர்கள் தோல்வியினையே கண்டு கொண்டனர். மக்கள் மத்தியில் பொய்யான செய்திகளை பரப்பி வந்தனர்.
மேலும் கல்முனை சாய்ந்தமருது ஆகிய ஊர்களுக்குள் அரசியலுக்கு அப்பால் திருமண உறவு முறை வலுப்பெற்றுக் காணப்படுகின்றது. அரசியல் வரலாறு தொடக்கம் படித்தவர்கள் பாமரமக்கள் வரை பெண் கொடுத்து பெண் எடுக்கும் வழமையைக் கொண்டுள்ளனர். இந்த உறவு முறை இரு ஊர்களும் முரண்படுவதில் இருந்து பெரிதும் பாதுகாத்தது என என்னால் உறுதியாக கூறிக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team