சிரியாவில் ISIS மீது சவுதி, UAE, பஹ்ரைன், கத்தார் கூட்டாக தாக்குதல் - Sri Lanka Muslim

சிரியாவில் ISIS மீது சவுதி, UAE, பஹ்ரைன், கத்தார் கூட்டாக தாக்குதல்

Contributors
author image

World News Editorial Team

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நிலைகள் மீது அமெரிக்கா, சவுதி, பக்ரைன், கத்தார் எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டாக வான் தாக்குதலை நடத்தியுள்ளன. ஈராக் மற்றும் சிரியாவில் முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.  இஸ்லாமிய தேசம் என்ற தனிநாட்டை பிரகடனம் செய்துள்ளனர். இந்த இயக்கம் பிற நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

 

இதனால் ஐ.எஸ். இயக்கத்தை அழிக்க அமெரிக்கா தலைமையில் 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்று திரண்டுள்ளன. ஈராக்கில் அமெரிக்காவுடன் இணைந்து இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் வான்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

 

இந்த நிலையில் சிரியாவிலும் ஐ.எஸ். நிலைகள் மீது அமெரிக்கா மற்றும் அதன் நேச நாட்டுப் படைகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக அதன் ராணுவ தலைமையகமான பென்டகனின் ஊடக செயலாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

 

சிரியாவின் அல் ரக்கா நகரைத் தான் ஐஎஸ்ஐஎஸ் தனது தலைமையகமாக வைத்துக் கொண்டுள்ளது. இந்த நகரமே இந்தத் ISIS களின் முழுக் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. ISIS அங்கு  நீதிமன்றங்கள் நடத்துகின்றனர். மத போலீஸ் படையும் வைத்துள்ளனர்.

 

இங்குதான் அமெரிக்காவும் அதன் கூட்டு படைகளும் தாக்குதல் நடத்தின. இத்தாக்குதலில் ஜோர்டான், சவுதி, பக்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமிரேட்ஸ் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன.

 

ஐ.எஸ். இயக்கத்தின் ராணுவ தலைமையகம், பயிற்சி மையங்கள், பதுங்கு குழிகள் என 20க்கும் மேற்பட்ட முக்கிய நிலைகள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவுடன் அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து ஐ.எஸ். மீது சிரியாவில் தாக்குதல் நடத்தத் தொடங்கியிருப்பது மிகவும் முக்கியமான ஒரு திருப்பமாக கருதப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team