சிறுநீரக நோயாளருக்குரிய மருந்து பாகிஸ்தானால் இலங்கைக்கு அன்பளிப்பு! - Sri Lanka Muslim

சிறுநீரக நோயாளருக்குரிய மருந்து பாகிஸ்தானால் இலங்கைக்கு அன்பளிப்பு!

Contributors

சிறுநீரக மாற்று சிகிச்சை நோயாளர்களுக்கு உறுப்பு செயலிழப்பைத் தடுக்க உதவும் உயிர்காக்கும் மருந்தான டக்ராப் (Tacgraf) மருந்தை பாகிஸ்தான் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இம்மருந்துப் பொருளின் ஒரு தொகுதி சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் பாரூக்கினால் அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.

இம்மருந்துப் பொருட்களை பாகிஸ்தானின் ‘சி.சி.எல் பார்மசுட்டிக்கல்’ நிறுவனம் கொழும்பிலுள்ள உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடாக இலங்கைக்கு நன்கொடையாக வழங்கி இருக்கின்றது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நிலவும் மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு இம்மருந்துப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாகவும் இம்மருந்துப் பொருட்கள் சிறுநீரக நோயாளர்களுக்கு தேவையான முக்கியமான மருந்துகள் என்றும் தற்போதைய சூழலில் இது இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய உதவியாக அமையும் என்றும் உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவியானது, அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சி.சி.எல் இன் ‘ஹேண்ட் இன் ஹேண்ட், ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி இலக்கு 2030 இன் கீழ் செயற்படுகின்றது.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் பாரூக் பர்கி, சி.சி.எல். நிறுவனத்தின் வர்த்தகத் தலைவர் சையத் உமைர் மரூஃப், உயர் ஸ்தானிகராலயத்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு இணைப்பாளர் அஸ்மா கமால், சி.சி.எல் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதிகள் குழு சி.ஐ.சி ஹோல்டங்கின் தலைமை அதிகாரி விராஜ் மனதுங்க ஆகியோர் இணைந்து இம்மருந்துப்பொருள் தொகுதியை அமைச்சரிடம் கையளித்தனர். இச்சமயம் அமைச்சின் செயலாளர் ரசித விஜேவர்தன, தேசிய மருந்துப் பொருட்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் பிரசன்னமாகி இருந்தனர்.

இந்நிகழ்வில் சி.சி.எல். நிறுவனத்தின் வர்த்தகத் தலைவர் சையத் உமைர் மரூஃப் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையின் மருத்துவத் தேவை களை பூர்த்தி செய்யவென சுகாதார அமைச்சுக்கு ஒத்துழைப்பு நல்குவதில் சி.சி.எல். நிறுவனம் மிகவும் மகிழ்ச்சியடைகிறது. அத்துடன் அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி இலக்கின் உத்தரவாதத்தின் ஊடாக ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி உறுதிப்படுத்தப்படுகின்றது” என்று கூறியுள்ளார்.

இச்சமயம் உரையாற்றிய உயர் ஸ்தானிகர் உமர் ஃபாரூக் பர்கி, ‘பாகிஸ்தான் அரசாங்கமும் தனியார் துறையும் எமது இலங்கை சகோதர சகோதரிகளுக்கு தம்மாலான அனைத்து உதவி ஒத்துழைப்புகளையும் நல்கத் தயாராக இருக்கின்றனர். குறிப்பாக இந்த சவாலான சந்தர்ப்பத்தில் இலங்கை மக்களுக்கு உயிர்காக்கும் மருந்துப்பொருளான டக்ராப் (Tacgraf) மருந்தை வழங்குமாறு நாம் விடுத்த அழைப்புக்கு சாதகமான பதிலளித்து அம்மருந்துப் பொருளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ள சி.சி.எல். பார்மசூட்டிகல் நிறுவனத்திற்கு எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கருத்து தெரிவிக்கையில், கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சி.சி.எல். பார்மசுட்டிகல் நிறுவனம், இத்தகைய முக்கியமான மருந்தை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முன்வந்துள்ள மையை நாம் அன்புடன் வரவேற்கிறோம். இம்மருந்துப்பொருட்கள் சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பெரிதும் உதவக்கூடியவையாகும். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையில் சி.சி.எல். நிறுவனம் இம்மருந்துப்பொருளை வழங்க முன்வந்ததன் ஊடாக இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவையை வழங்கத் தேவையான தரம் வாய்ந்த மருந்துப்பொருட்கள் தம்மிடம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன’ என்றுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team