சிறுபான்மை மக்களின் குரலை நசுக்கும் முயற்சியே தலைவர் ரிஷாட்டின் கைது" - தவிசாளர் அமீர் அலி! » Sri Lanka Muslim

சிறுபான்மை மக்களின் குரலை நசுக்கும் முயற்சியே தலைவர் ரிஷாட்டின் கைது” – தவிசாளர் அமீர் அலி!

FB_IMG_1602758815455

Contributors
author image

ஊடகப்பிரிவு

முஸ்லிம், தமிழ் சிறுபான்மை மக்களின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனைக் கைது செய்து சிறையில் அடைப்பதனூடாக, இந்நாட்டு சிறுபான்மை மக்களின் குரலை நசுக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கட்சியின் தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக ரிஷாட் கைது முஸ்தீபு தொடர்பில், கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

“இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு பெற்ற ஒரு தலைவராகச் சிறும்பான்மை மக்களுக்குச் சேவை செய்து வரும் அதே வேளை, அவர்களுக்கெதிராக இடம்பெறுகின்ற அநீதிகளுக்கு நாடாளுமன்றிலும் அதற்கு வெளியிலும் குரல் கொடுக்கின்ற ஒருவராகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் திகழ்கிறார்.

தனது பாராளுமன்றக் காலத்தில் அமைச்சராக இருந்து தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு இன, மத பேதமற்ற அபிவிருத்திகளை முன்கொண்டு செல்வதில் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய அவர், எப்போதும் மக்கள் நலனுக்காகவே தனது அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.

அத்துடன், தான் வகித்த அதிகாரங்கள், அமைச்சுக்களூடாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும், யுத்தத்தால் சின்னாபின்னமாகிப் போன வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கும், அப்பிரதேச மக்களின் புனர்வாழ்வுக்கு அரும் சேவையாற்றிய ஒருவராகத் திகழும் அவர், தான் எடுத்துக்கொள்ளும் பொறுப்புக்களை செவ்வனே நிறைவேற்றும் அரசியல்வாதியாகத் தன்னைத் திடப்படுத்திக்கொண்டவர். அதன் காரணமாகவே சிறுபான்மை மக்களிடத்தில் நன்மதிப்பைப் பெற்ற அரசியல் தலைவராக அவர் மிளிர்கிறார்.

இவ்வாறாக நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சேவையாற்றிய ஒருவரை கைது செய்து, பெரும்பான்மை இனத்தவரைத் திருப்திப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்ள எடுக்கும் முயற்சியை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்டின் பொருளாதாரத்தையே அதலபாதாளத்துக்கு இட்டுச் செல்லுமளவு கொள்ளைகளில் ஈடுபட்ட பலர், நாட்டில் சுதந்தரமாகவும் தைரியமாகவும் நடமாடுகின்ற பொழுது, இவ்வாறான கைதுகள், தமது இழந்து வரும் செல்வாக்கை நிலைநிறுத்திக்கொள்ளவும், பெரும்பான்மையின மக்களை சிறுபான்மை மக்கள் பக்கம் திசை திருப்பி, தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ளவும் எடுக்கும் முயற்சியை இன, மத அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் கண்டிக்க வேண்டியது அவசியமாகின்றது.

தனிப்பட்ட குரோதங்களை, பகைகளைத் தீர்த்துக்கொள்ளும் சரியான சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்திக்கொள்ள எடுக்கும் முயற்சியைக் கைவிட்டு, நாட்டின் சகல இன மக்களும் ஒற்றுமையுடன் நிம்மதி, சந்தோசத்துடன் வாழ நடவடிக்கை மேற்கொள்ள புதிய அரசு முன்வர வேண்டும்.

அதே நேரம், அரசியல் வேறுபாடுகள், கட்சி பேதங்களை மறந்து, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டின் கைதுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

அவரையும், அவரது சகோதரர்களையும், அவரைச் சார்ந்தோரையும் கைது செய்து அடைப்பதனூடாக, ஒரு சாராரைத் திருப்திப்படுத்த எடுக்கப்படும் செயற்பாடுகளினால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை ஏதும் விளையப்போவதில்லை.

ஆகவே, அவரது கைதை மீள்பரிசீலனை செய்வதோடு தொடர்ந்தும், அவர் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சேவையாற்ற அனுமதிக்கப்பட வேண்டும்.

அதே நேரம், அவர் தொடர்பிலும் அவரது கைது தொடர்பிலும் வீணான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதையும், ஊடகங்களில் தெரிவிப்பதையும் தவிர்ந்துகொள்ளுமாறும், இதனை வைத்து அரசியல் இலாபம் தேட எடுக்கும் முயற்சிகளுக்கு துணைபோவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்வதுடன், இதனைக்கொண்டு பெரும்பான்மை இன மக்களுக்கெதிரான பிரச்சாரங்களை முன்னெடுப்பதையும், இது சார் கருத்துக்களைச் சமூக ஊடகங்களில் பகிர்வதை விட்டும் அவரது ஆதரவரளர்கள், அபிமானிகள், கட்சித்தொண்டர்கள் தவிர்ந்துகொள்ளுமாறும் தயவாய்க் கேட்டுக்கொள்கின்றேன்” என அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka