சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும்! ஆனால் சமூக ஊடகங்களில் வீராப்பு வசனங்களை பேசி தமிழ்,முஸ்லிம் என்னும் தமிழ் பேசும் உறவை சீர்குலைக்க முயற்சிக்காதீர்கள்! - கலாநிதி.வி.ஜனகன்….! - Sri Lanka Muslim

சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும்! ஆனால் சமூக ஊடகங்களில் வீராப்பு வசனங்களை பேசி தமிழ்,முஸ்லிம் என்னும் தமிழ் பேசும் உறவை சீர்குலைக்க முயற்சிக்காதீர்கள்! – கலாநிதி.வி.ஜனகன்….!

Contributors


(ஊடகப் பிரிவு)

சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் நூறுசதவீதம் மாற்றுக்கருத்து இல்லை. அது அரசியல் கடந்த ஒரு நீதி சார்ந்த விடயம். அதற்காக என்னுடைய ஜனனம் அறக்கட்டளையினூடாக சிறுமியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கத் தேவையான உதவிகளை ஜனநாயக அடிப்படையில் மேற்கொள்ளவும் தாங்கள் தயாராக உள்ளோம்.

ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களில் இச்சிறுமியின் விவகாரத்தை வைத்து இரு தரப்பினரும் மாறி மாறி அரசியல் செய்வதை காணக்கூடியதாக இருக்கின்றது. இலங்கை திருநாட்டை பொருத்தமட்டில் மதங்களால் இந்து, முஸ்லிம் என்று வேறுபட்டாலும் “தமிழ்” என்ற ஒரு குடையின் கீழ் இரு சமூகங்களும் ஒன்றாக பிணைந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இரு சமூகங்களுக்கிடையிலும் தொப்புள்கொடி உறவு இருக்கின்றது. இந்த விவகாரத்தை வைத்து சமூக ஊடகங்களில் தனிப்பட்ட காரணங்களுக்காக இதை அரசியல்மயமாக்கி தமிழ் முஸ்லிம் உறவை சீர்குலைக்க தயவுசெய்து முயற்சிக்க வேண்டாம் என்று சமூக ஊடகங்களில் வீராப்பு வசனம் பேசுபவர்களிடம் தாழ்மையாக வேண்டிக்கொள்கிறேன்.

இந்தச் சிறுமியின் விவகாரமானது தமிழ் முஸ்லிம் சிங்களம் என்பதைத் தாண்டி அப்பாவி சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாங்களும் நீங்களும் குரல் கொடுக்க வேண்டுமே தவிர தனிப்பட்ட அபிலாசைகளுக்குகாகாவும், அரசியல் நோக்கங்களுக்காகவும் உங்கள் கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவிட முன்னர் சிந்தித்துப் செயற்படுங்கள்.

இவ்வாறான ஒரு நிலை தொடருமானால் தமிழ் முஸ்லிம் உறவுகளுக்கு இடையில் விரிசல் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தச் சிறுமி மட்டுமின்றி இனிவரும் காலங்களில் எந்தச் சிறுமிக்கும் இவ்வாறான நிலை ஏற்படக் கூடாது என்பதற்காக நாங்கள் அனைவரும் இனம் மதம் கடந்து ஒன்று சேர வேண்டும் என்பதை உங்களிடம் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

ஜனனம் அறக்கட்டளையினூடாக இனிவரும் காலங்களில் சிறுவர் சிறுமியர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாகவும், நேரடியாகவும் மேற்கொள்ள இருக்கின்றோம்.

இச்சம்பவத்திற்கு பின் கொழும்பு மாவட்டத்தில் வீட்டு வேலை செய்யும் மலையக மக்கள் சிலர் திருப்பி அனுப்பப்படுவதாக சமூக ஊடகங்கள் மூலமாக அறிகின்றோம். இது ஒரு பண்பற்ற செயல் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

சிறுவர்கள் அல்லாமல் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுகின்றவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றின் ஊடாக இவ்வேலை சார்ந்த துறையில் பயிற்றுவிக்கப்பட்டு நிறுவனத்தினூடாக அதன் கண்காணிப்பின் கீழ் வேலைக்கு அமர்த்தப்பட்டால் இவ்வாறான ஒரு பிரச்சினைக்கு தீர்வை காணலாம்.

இந்த விடயத்திற்காக என்னுடைய கல்வி நிறுவனமும் உதவத் தயாராக உள்ளது என்பதையும் குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகிறோம். அதுமட்டுமன்றி இன்றைய சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை சீரழிப்பதை சமூக ஊடகங்களுக்கு முன் கொண்டுவந்து அதற்கான சிறந்த தீர்வினையும் மேற்கொள்ள சமூக ஊடக ஆர்வலர்கள் முன்வர வேண்டும் என்பதையே நான் எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறான தீர்வுகளை பற்றி விவாதிக்காமல் சமூக வலைதளங்களில் வீராப்பு பேசிக்கொண்டு வீடுகளில் இருப்பதை நான் விரும்பவில்லை என்று ஜனனம் அறக்கட்டளையின் தலைமை அறங்காவலரும் சமூக செயற்பாட்டாளருமான கலாநிதி. ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team