சீனா இல்லையென்றால் இந்தியாவிலிருந்து கொண்டு வருவோம் - அரசாங்கம் அறிவிப்பு..! - Sri Lanka Muslim

சீனா இல்லையென்றால் இந்தியாவிலிருந்து கொண்டு வருவோம் – அரசாங்கம் அறிவிப்பு..!

Contributors

சீனாவிலிருந்து உரம் இறக்குமதி நிறுத்தப்பட்டால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லையெனவும் மாறாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்தார்.

நைற்றிஜன் உரம் இறக்குமதி செய்வதற்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார செயாலாளருடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சேதன உரத்தை நாம் பயன்படுத்தவில்லை என்றால் மாற்றீடாக எடுக்கும் வேலைத்திட்டம் என்ன? அதேபோல் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சேதன பசளையின் தரத்தை எவ்வாறு உறுதி செய்வது என்பது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக பத்திரன(Buddhika Pathirana) கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே(Mahindananda Aluthgamage), சீனாவில் இருந்து உரம் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ள காரணத்தினால் இலங்கையின் விளைச்சலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது நைற்றிஜன் உரமாகும். இது இலங்கையில் பயன்படுத்தும் உரத்துடன் கலப்பதற்கு (பூஸ்ட்) பயன்படுத்துவது.

பெரும்போகத்திற்கு தேவையான சகல உரமும் 10ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை வந்தடையும். சீனாவில் இருந்து நைற்றிஜன் உரம் கொண்டுவர தீர்மானிக்கப்பட்ட போதிலும் ஆய்வாளர்களின் கருத்துக்கு அமைய அதனை நிறுத்தியுள்ளோம்.

எனினும் நைற்றிஜன் உரம் இறக்குமதி செய்யவதற்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம், ஒரு வேளை கால தாமதமானால் மாற்று வழிகளை கையாள்வோம். எனவே எவரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team