சீனி இறக்குமதியால் ஏற்பட்ட நஷ்டத்தை பொதுமக்களிடமிருந்து அறவிடாமல் இதன் மூலம் லாபம் பெற்றவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். - Sri Lanka Muslim

சீனி இறக்குமதியால் ஏற்பட்ட நஷ்டத்தை பொதுமக்களிடமிருந்து அறவிடாமல் இதன் மூலம் லாபம் பெற்றவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

Contributors

(எம்.ஆர்.எம்.வசீம்)

சீனி இறக்குமதியால் ஏற்பட்டுள்ள 15.9 பில்லியன் நஷ்டத்தை மீண்டும் பெற்றுக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று சதொச நிறுவனம் கூடிய விலைக்கு சீனியை பெற்றுக் கொண்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் கடந்த வருடம் ஒக்டோபர் 13ஆம் திகதி இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான வரியை 50 ருபாவில் இருந்து ரூபா 25 சதம் வரை குறைப்பதாக வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்தே இந்த வரி குறைப்பை மேற்கொண்டது. கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி வரை இந்த வரி குறைப்பு நடைமுறையில் இருந்தது.

அத்துடன் சீனிக்கான வரி குறைப்பின் மூலம் ஒரு கிலோ சீனியை 85 ரூபாவுக்கு பெற்றுக் கொள்ளலாம் என்றே அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஆனால் மக்களுக்கு அந்த நிவாரணம் கிடைக்கவில்லை. என்றாலும் வரி குறைப்பினால் அரசாங்கத்துக்கு கிடைத்து வந்த லாபம் இல்லாமலாகியதால் 15.9 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சு பாராளுமன்ற பொதுமக்கள் நிதிக் குழுவுக்கு அறிவித்துள்ளது.

மேலும் சீனி வரிகுறைப்பின் நன்மை அரசாங்கத்துக்கு தேவையான சில வியாபாரிகளுக்கே சென்றிருக்கின்றது. வரிகுறைப்பு இடம்பெற்ற காலப்பகுதியில் குறித்த ஒரு நிறுவனம் மாத்திரம் கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் 26 ஆயிரம் மெட்ரிக் தொன் சீனி இறக்குமதி செய்திருக்கின்றது.

ஆனால் இந்த நிறுவனம் அரசாங்கம் அறிவித்த 85 ரூபாவுக்கு நுகர்வோருக்கு சீனியை பெற்றுக் கொள்ள தேவையான முறையில் விநியோகிக்காமல் அதனை பதுக்கி வைத்திருந்து, கூடிய விலைக்கே விநியோகித்துள்ளது.

அத்துடன் சதோச நிறுவனம் கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி ஒரு கிலோ சீனி 127.49 சதம் அடிப்படையில் 700 மெட்ரிக் தொன் பெற்றுக் கொண்டு 85 ரூபாவுக்கு விற்பனை செய்திருக்கின்றது.

அதேபோன்று 121 ரூபா, 92 ரூபா, 110 ரூபா என்ற அடிப்படையில் சதோச ஒக்டோபர் மாதம் சீனி கொள்வனவு செய்து 85 ரூபாவுக்கே விற்பனை செய்திருக்கின்றது. இவ்வாறு கூடிய விலைக்கு பெற்றுக் கொண்டு குறைந்த விலைக்கு சீனி விற்பனை செய்திருப்பதன் மூலமும் மக்களின் பணமே விரயமாகி இருக்கின்றது.

அதனால் சதோச நிறுவனம் 85 ரூபாவுக்கு சீனியை யாருக்கு அதிகம் விற்பனை செய்தது என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

வரி குறைப்பினால் அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நஷ்டத்தை அரசாங்கம் பொதுமக்களிடமிருந்து அறவிடாமல், இதன் மூலம் லாபம் பெற்றவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team