சீனி இறக்குமதி நிதி மோசடியை மறைக்க அரசு புர்க்கா பிரச்சினையை திசை திருப்பியுள்ளது. - Sri Lanka Muslim

சீனி இறக்குமதி நிதி மோசடியை மறைக்க அரசு புர்க்கா பிரச்சினையை திசை திருப்பியுள்ளது.

Contributors

நூருள் ஹுதா உமர்

இன்று நாட்டினுடைய முக்கிய பேசுபொருளாக சீனி இறக்குமதி மோசடி மாறியுள்ளது. அதனை மறைக்கும் முகமாக அரசு புர்க்கா பிரச்சினையை முஸ்லிம்களுக்கு எதிராக திசை திருப்பியுள்ளது. ஜனாஸா எரிப்பினுடைய வலி அடங்கும் முன்னர், இன்னும் ஒரு சமூகப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டிய சமூகமாக மாற்றப்பட்டு இருக்கின்றோம் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ. எம். சிபான் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், எமது சமூகத்துக்கான பிரச்சினை எனும்போது முகநூல் வாயிலாகவும் ஊடகங்கள் ஊடாகவும் அறிக்கைகளை விடுகின்ற சிவில் பிரஜைகளும், எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களும் நாட்டின் முதுகெலும்பான பொருளாதாரத்தில் அடி விழுகின்றபோது வாய் திறக்காமலிருப்பதே வழமையாகிவிட்டது.

50 ரூபாய் வரியில் நாட்டுக்குள் வரவேண்டிய சீனி வெறும் 25 சத வரியில் மாத்திரம் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டமையால் இன்றைய அரசு சுமார் 1600 கோடி ரூபாய்களை ஏப்பம் விட்டு விழி பிதுங்கி நிற்கின்றது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் 1200 கோடி ரூபாய் பிணை முறி மோசடியே ஆட்சி கவிழ்ப்பு நிலைக்கு இட்டுச் சென்றது. இருப்பினும் அதில் 1100 கோடிகளை மத்திய வங்கி தற்காத்து வைத்திருந்தது.

இன்றைய மோசடியில் பிரதானமாக சஜாத் மௌஸும் என்ற முஸ்லிம் நபரொருவர் சம்பந்தப்பட்டிருப்பதன் காரணமாகவா முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசாமல் இருக்கின்றார்கள்? என்ற கேள்வி நிலையும் எழுகிறது.

நாட்டின் பொருளாதாரம் அதி பாதாளத்தில் செல்லும் போது, நாட்டின் பெரும்பான்மை சிங்கள மக்கள் மாத்திரமே சிந்திக்க வேண்டும், பேச வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருந்தால், சிங்களவர்கள் எங்களை அரபு தேசத்திற்குச் செல்லும்படி கூறுவதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

இதுவே பெரும் கட்சிகளான ஜே.வி.பி போன்றவை முஸ்லிம்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்று வருகின்றபோது எமக்காக குரல் கொடுப்பதற்கு தயங்குவதற்கான காரணங்களில் முதன்மையானதாகும். இருப்பினும் ஈற்றில் அவர்கள் எமக்காக குரல் கொடுப்பவர்களாகவே இருந்துள்ளார்கள்.

இந்த நாட்டினுடைய முஸ்லிம் அரசியல் புனர்நிர்மாணம் செய்ய வேண்டிய ஒரு காலகட்டம் வந்திருக்கின்றது. எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்து குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை தனித்தனியேவாகினும் இந்த சீனி மோசடியில் தங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team