சீனோபார்ம் தடுப்பூசி இலங்கை வாழ் சீன பிரஜைகளுக்கு மாத்திரமே...! - Sri Lanka Muslim

சீனோபார்ம் தடுப்பூசி இலங்கை வாழ் சீன பிரஜைகளுக்கு மாத்திரமே…!

Contributors

எம்.மனோசித்ரா)

சீனாவில் தயாரிக்கப்படும் சீனோபார்ம் கொவிட் தடுப்பூசிகளை முதற்கட்டமாக இலங்கை வாழ் சீன பிரஜைகளுக்கு வழங்குவதற்கே ஒளடத ஒழுங்குறுத்துகை அதிகார சபை அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தடுப்பூசிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. முதற்கட்டமாக இந்தியாவின் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசி பெறப்பட்டு தற்போது வினைத்திறனாக அவற்றை வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சீனாவில் தயாரிக்கப்படும் சீனோபார்ம் தடுப்பூசிகளுக்கு அவசர பயன்பாட்டுக்காக உபயோகிப்பதற்கு தேசிய ஒளடத ஒழுங்குறுத்துகை அதிகார சபை அனுமதியளித்துள்ளது.

இந்த தடுப்பூசியை மக்களுக்கு வழங்க முன்னர் அதன் பக்களை விளைவுகள், எவ்வாறு சோதனைகளை முன்னெடுப்பது, முதற்கட்டமாக யாருக்கு வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை தடுப்பூசி தொடர்பில் ஆராய்வதற்காக லலித் வீரதுங்க தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழு தீர்மானிக்க வேண்டும்.

இலங்கைக்கு 6 இலட்சம் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க சீனா விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அவற்றை முதற்கட்டமாக இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கு வழங்குவதற்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்தே இலங்கை மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் தடுப்பூசி தொடர்பில் ஆராயும் விசேட குழுவினால் முழுமையான பரிசோதனைகள் செய்யப்பட்டு, அதன் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இலங்கை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் விசேட வைத்தியர் வாசன் ரத்னசிங்கம் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team