சுதந்திரக் கட்சி எப்போதும் மக்கள்நேய, மனிதாபிமான பாதையிலேயே பயணிக்க வேண்டும் - ஜனாதிபதி » Sri Lanka Muslim

சுதந்திரக் கட்சி எப்போதும் மக்கள்நேய, மனிதாபிமான பாதையிலேயே பயணிக்க வேண்டும் – ஜனாதிபதி

Maithripala

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எப்போதும் மக்கள்நேய, மனிதாபிமான பாதையிலேயே பயணிக்க வேண்டுமெனவும், கட்சியில் பணியாற்றுவோரின் நடத்தைப் பண்புகளுக்கமையவே கட்சி ஒளி பெறும் எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவிக்கிறார்.

நற்பண்பு, நல்லொழுக்கம், நாட்டை நேசித்தல், எளிமை, நேர்மை ஆகிய அனைத்தும் அரசியல்வாதிகளிடம் இருக்க வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், ஊழல், மோசடி, களவு, வீண்விரயம், அதிகார துஸ்பிரயோகம் போன்றவற்றை மேற்கொள்ளும் நபர்கள் இருக்கும் கட்சி தோல்வியடைவது மட்டுமன்றி, அந்த அரசியல்வாதிகள் மக்களால் நிராகரிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையில் நேற்று (10) பிற்பகல் களுத்துறை வேர்னன் பெர்ணாண்டோ விளையாட்டரங்கில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்காக உயிர்த்தியாகம் செய்த இந்ரபால ஜயவீர, விஜயலால் மென்டிஸ், பாடின் சில்வா ஆகியோரின் இருபத்தெட்டாவது நினைவு நிகழ்விலேயே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் உப செயலாளராகவும் களுத்துறை மாவட்ட இணை அமைப்பாளராகவும் கடமையாற்றிய இந்ரபால அமரவீர, அவருடன் கட்சிக்காக செயற்பட்ட விஜேலால் மென்டிஸ் மற்றும் பாடின் சில்வா ஆகியோர் இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொடூரமாக கொல்லப்பட்ட போதிலும் கட்சிக்காக அவர்கள் ஆற்றிய பணிகள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வரலாற்றில் இருந்து மறையமாட்டாதென ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

அனைத்து அரசியல் கட்சிகளும் நாட்டுக்காக தமது கடமைகள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றும் போது சமகால பிரச்சினைகளுடன் நெகிழ்வுத்தன்மையாக முன்செல்ல வேண்டுமெனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை உருவாக்கி எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா அவர்கள் வழங்கிய கோட்பாட்டை புதிய உலகத்துக்கு பொருத்தமானவாறு மாற்றியமைத்து பலமான கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முன்னோக்கி பயணிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

அரசியல் எதிர்கருத்துடையவர்கள் என்னதான் விமர்சனங்கள் முன்வைத்தபோதும் தாய்நாட்டின் பொறுப்பாளர் என்ற வகையில் வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புக்களை கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆகக் கூடியளவு நிறைவேற்றியதைப் போன்றே எதிர்காலத்திலும் அப் பொறுப்புக்களை உரியவாறு நிறைவேற்றுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அனைத்து மக்களும் சமாதானமாக ஒற்றுமையுடன் வாழக்கூடிய நாடாக, நற்பண்புள்ள சமூகத்தையும் பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தையும் கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்படன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

பௌத்த குருமார்களுக்கு ஒலிபெருக்கி சாதனங்கள், பாடசாலை பிள்ளைகளுக்கு பாதணிகள் மற்றும் சுகாதார நிலையங்களுக்கான மருத்துவ உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் ஜனாதிபதி அவர்களும் இணைந்துகொண்டார்.

அமைச்சர்களான மகிந்த சமரசிங்க, மகிந்த அமரவீர, மேல் மாகாண அமைச்சர் சுமித் லால் மென்டிஸ் உட்பட்ட மாகாணசபை உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஸ்ட செயற்பாட்டாளர்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் பின்னர் வஸ்கடுவ ராஜகுரு ஸ்ரீ சுபூதி மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள் மத வழிபாடுகளிலும் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கோண்டதுடன், விகாராதிபதியையும் சந்தித்து சுகநலன்களை விசாரித்தார்.

அத்துடன் ஜனாதிபதி அவர்கள் களுத்துறை புராதன வெள்ளரசு மரத்தை வழிபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

Web Design by The Design Lanka