சுதந்திர இலங்கையில் சோனகர் சுதந்திரம் (கவிதை) » Sri Lanka Muslim

சுதந்திர இலங்கையில் சோனகர் சுதந்திரம் (கவிதை)

flag6

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous

சின்னச் சின்ன
சிராய்ப்புக்கள் இருந்தாலும்
சிறு பான்மை இந் நாட்டில்
சிறகொடிக்கப் பட்ட
சிட்டுக் குருவியல்ல.

அவ்வப் போது
அழுத்கம அவலங்களையும்
காலிக் கவலைகளையும்
காவிக் கலவரங்களையும்
கடைகளில் தீக்களையும்
காடையர்கள் மூட்டினாலும்
சுந்தர இலங்கையின்
சோனக சமூகத்தில்
சுதந்திரக் காற்றின்
சுகமான அனுபவங்களே
சுற்றி நிற்பதை
சொல்லி ஆக வேண்டும்.

அமைதியாய் வாழ்வதில்
ஆத்மீகம் கற்பதில்
இறையில்லம் அமைப்பதில்
ஈகைக் கொண்டாட்டங்களில்
உழைப்பதில், சேர்ப்பதில்
ஊடகம் நடாத்துவதில்
எழுதுவதில் பேசுவதில்
ஏழைகள் படிப்பதில்
ஐ வேளை தொழுவதில்
ஒழுக்கமாய் அணிவதில்
ஓதும் மறை வழி நடப்பதில்
இஸ்லாமிய நாடுகளிலும்
இல்லாத சுதந்திரம்
இங்கு உள்ளதை
எவரும் மறுக்க மாட்டார்.

இ.°.திகாப் இருப்பதற்கு
ஸ்டேசனில் பதியச் சொல்லும்
இஸ்லாமிய நாடுகள்

அடையாளத்தை பரீட்சித்து
அள்ளாஹ்வின் இல்லத்துள்
அனுமதி வழங்கும்
அரபு ஆட்சிகள்

வெள்ளி குத்பாவை
பள்ளியில் ஓத முன்
முன்னனுமதி பெறவேண்டிய
முஸ்லிம் அரசுகள்

இஸ்லாமிய நாடுகளிலும்
இல்லாத சுதந்திரம்
இங்கு உள்ளதை
எவரும் மறுக்க மாட்டார்.

“முஸ்லிம் கல்வியில்
முடியாத பிரச்சினைகள்,
வேலை வாய்ப்புக்களில்
வெறுப்பான நிலைமைகள்,
வியாபார நிலமைகள்
விசனம் தருகின்றன”

சோனக சமூகத்தின்
சோகமான பக்கம் பற்றி
சொல்லப் படும் கூற்றுக்களில்
உள்ளன உண்மைகள்.

ஆனால் இவைகள்
அனைத்து சமூகத்திலும்
பொதுவான பிரச்சினைகள்
போய்ப்பார்த்தால் தெரியும்.

கஞ்சிக்கும் வழியின்றி
கெஞ்சும் ஏழைகளின்
சிங்களக் கிராமங்கள்
இங்கு இருக்கின்றன.

இங்கு வேலையின்றி
எடுபுடியாய் வெளிநாட்டில்
எத்தனை பேரினங்கள்
இருக்கின்றன என்பது
எல்லோரும் அறிந்ததே.

அரசியலில் ‘அவர்கள்’
அடக்க முயற்சிப்பதும்
அட்ரஸ் இல்லாது
அழிந்து போவதும்
எங்களுக்கு இந் நாட்டில்
இறைவன் தந்த வரம்.

கஷ்டம் என்று வந்தால்
கை நீட்டி உதவி செய்ய
இஷ்டப்பட்டு வரும்
ஏராள பெரும்பான்மை
இருக்கின்ற நாடு இது.

நாங்கள் பிறந்த மண்
நம் முன்னோர் இருந்த மண்
நல் வளங்கள் நிறைந்த மண்
நாம் வாழச் சிறந்த மண் இது.

Web Design by The Design Lanka