"சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கும் ஜனாதிபதியின் இந்த முயற்சியை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" - ஹக்கீம்! - Sri Lanka Muslim

“சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கும் ஜனாதிபதியின் இந்த முயற்சியை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” – ஹக்கீம்!

Contributors

சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். அவரின் இந்த முயற்சியை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன், மனித உரிமை விடயத்தில் அரசாங்கம் நழுவிச்செல்லும் போக்கை கடைப்பிடிக்கக் கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (28) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

“வெளிநாட்டு கன்சியூளர் பதவி மிகவும் பொறுப்புவாய்ந்த சேவையாகும். கடந்த காலங்களில் சிறந்த அதிகாரிகள் இந்த பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருந்தனர்.

அதனால் எமது நாடு தொடர்பில் அவர்கள் சிறந்த முறையில் செயற்பட்டு வந்தனர். ஆனால், தற்போது அரசியல் ரீதியில் தூதுவர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்படுவதால் ஜெனிவாவில் எமது விடயங்களை முறையாக தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தற்காலத்தில் மனித கடத்தல்கள் தொடர்பில் வெளிநாட்டு அதிகாரிகள் முக்கிய கவனம் செலுத்தவேண்டும்.

அத்துடன், ஜெனிவா மனித உரிமை பேரவையில் இம்முறை எமக்கு அவமானத் தோல்வி. இந்த தோல்விக்கான காரணம் என்ன என்பதை பார்க்கவேண்டும்.

ஜெனிவா தீர்மானங்களுக்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.  மாறாக மனித உரிமை விடயத்தில் நலுவுவதற்கான முயற்சிகளை செய்யக்கூடாது. அரசாங்கம் தொடர்ந்து மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை அவமதி்க்கும் வகையிலேயே செயற்பட்டு வந்திருக்கின்றது.

இனங்களுக்கிடையில் வெறுப்பூட்டும் பேச்சுக்களை பேசிவந்த நபரை ஒருநாடு ஒருசட்டம் செயலணியின் தலைவராக அந்த அரசாங்கம் நியமித்தது. இந்த நடவடிக்கையை மேற்கொண்டபோது அப்போதைய நீதி அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்யவும் முயற்சித்தார்.

அதேபோன்று கொவிட் தொற்றில் மரணிப்பவர்களை எரிப்பதற்கு விஞ்ஞான ரீதியில் எந்த அடிப்படையும் இல்லாத நிலையில், அரசியல் ரீதியில் எடுத்த தீர்மானத்தின் அடையிலேயே சடலங்களை எரிக்க தீர்மானித்தனர். இதன் மூலம் முஸ்லிம் மக்களை நோவிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தது.

அத்துடன் ஜெனிவா மனித உரிமை பேரவையின்  பந்தி 10இல் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் கொவிட் தொற்றில் மரணித்தவர்களின் சடலங்களை எரிப்பதற்கு திர்மானம் எடு்ததவர்கள் யார் என்பதை கண்டறிந்து, இதற்கு பின்னால் வேறு சக்திகள் இருக்கின்றதா என தேடிப்பார்க்க விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். இந்த காரியத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும். அதனால்தான் இம்முறை ஜெனிவாவில் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்கவில்லை.

அத்துடன் அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி முயற்சி செய்து வருவதை காணமுடிகின்றது. அதனை நாங்கன் வரவேற்கின்றோம். எதிர்வரும் சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கின்றார். அவரின் இந்த முயற்சியை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

 

எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்

Web Design by Srilanka Muslims Web Team