சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்பும் பொறுப்பு எவ்விதமான தளர்வுகளும் இன்றி நிறைவேற்றப்படும் - ஜனாதிபதி » Sri Lanka Muslim

சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்பும் பொறுப்பு எவ்விதமான தளர்வுகளும் இன்றி நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி

mai66

Contributors
author image

முதலமைச்சர் ஊடகப்பிரிவு

அரசாங்கத்தின் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தால் அது கடந்த இரண்டாண்டுகளில் ஏற்பட்டது அல்ல, அது கடந்த அரசாங்கம் உருவாக்கிய பாரிய கடன்சுமையுடன் ஏற்பட்ட நிலைமையாகுமென ஜனாதிபதி தெரிவிக்கிறார்.

இப்போது அந்த பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பை தனது தலைமையிலான அரசாங்கம் ஏற்றுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், எந்தவொரு சவாலுக்கு மத்தியிலும் ஏற்றுக்கொண்ட பொறுப்பை உரியவாறு நிறைவேற்றி நாட்டை சுபீட்சமான தேசமாக கட்டியெழுப்பும் பணியை மக்களுடன் இணைந்து தளர்வுகள் இன்றி நிறைவேற்றுவதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (11) முற்பகல் மொரகஹகந்த நீர்த்தேக்கத்துக்கான மங்கள நீர்நிரப்பு விழாவின் பின்னர் எலஹெர மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் அமுல்படுத்தப்படும் பாரிய பல்நோக்கு திட்டமான மொரகஹகந்த நீர்தேக்கத்துக்கான மங்கள நீர்நிரப்பும் விழா இன்று (11) முற்பகல் சுபவேளையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் நீர்ப்பாசன வரலாற்றின் புதிய அத்தியாயமாக நிர்மாணிக்கப்படும் மேல் எலஹெர நீர்ப்பாசன வாய்க்கால் அமைப்புக்கான வேலைகளும் ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதன்பின்னர் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், வடமத்திய மாகாண மக்களின் கண்ணீர் கதைகளை முடிவுறுத்துவதற்காக மொரகஹகந்த அபிவிருத்தி திட்டம் தொடர்பாக கண்ட கனவை நனவாக்கி அதன் பலனைப் பெறும் இன்றைய நாள் தனது வாழ்நாளில் மறக்கமுடியாத மிகவும் மகிழ்ச்சியான நாளாகும் என தெரிவித்தார்.

மொரகஹகந்த அபிவிருத்தி திட்டம் நாட்டின் கமத்தொழில், நீர்ப்பாசன துறைகளில் புதிய எழுச்சியை ஏற்படுத்தும் என தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இவ்வாறான பாரிய திட்டங்கள் ஊடாக மன்னராட்சி காலங்களில் இருந்த தன்னிறைவு மற்றும் சுபீட்சமான பொருளாதாரத்தை மீண்டும் உருவாக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் வானிலை மற்றும் காலநிலைகளுடன் இன்று நாம் கடுமையான வரட்சிக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ள போதிலும் மக்களை பட்டினியில் வாடவிடுவதற்கு அரசாங்கம் தயாரில்லை எனவே மிக விரைவாக வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டு குறைந்த விலையில் மக்களுக்கு அரிசியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

வரட்சியுடன் ஏற்படக்கூடிய சவால்கள் தொடர்பில் கவனமெடுத்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், அவர்களது நலன்களுக்காக தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, அதற்காக அமைச்சரவை உபகுழுவும் நியமிக்கப்பட்டு விரிவான திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

நாட்டின் நான்காவது இடத்தைப்பிடிக்கும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 460,000 ஏக்கர் அடியாகும். பிரதான அணைக்கட்டு மற்றும் துணை அணைக்கட்டுக்களுடனான இந்த நீர்த்தேக்கம் முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் நிர்மாணிக்கப்படும் பாரிய நீர்த்தேக்கமாகும்.

மாத்தளை, அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை ஆகிய மாவட்ட மக்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்துவந்த நீர்ப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நிர்மாணிக்கப்படும் இத் திட்டத்துக்காக 555.7 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளது.

மொரகஹகந்தவிலிருந்து அனுராதபுர மாவட்டத்தின் மஹாகந்தராவ குளம் வரையான மேல் எலஹெர வாய்க்காலின் நீளம் 103 கிலோ மீற்றர் ஆகும். நாட்டின் நீர்ப்பாசன வரலாற்றில் நிர்மாணிக்கப்படும் இந்த மிக நீண்ட வாய்க்கால் திட்டத்துக்கான முழு செலவு 6500 கோடி ரூபா ஆகும். நிர்மாண காலம் ஐந்து ஆண்டுகளாகும்.

எலஹெர மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பைத் தொடர்ந்து மொரகஹகந்த அபிவிருத்தி திட்டம் காரணமாக காணிகளை இழக்கும் மக்களை மீள்குடியேற்றும் திட்டத்தின் கீழ் காணி உறுதிகளும் ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டது.

அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, பிரதி அமைச்சர் அனுராத ஜயரத்ன, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரும் மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன உள்ளிட்ட அரச அலுவலர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Web Design by The Design Lanka