செத்துக் கொண்டிருக்கும் ஒரு ஜனநாயகம்! - Sri Lanka Muslim

செத்துக் கொண்டிருக்கும் ஒரு ஜனநாயகம்!

Contributors

athens1

(கலாநிதி தயான் ஜயதிலகா)

 தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

கடந்த வாரக்கடைசியில் ரணிலுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமும் மற்றும் அதன்விளைவாக ஏற்பட்ட வெட்டுக் குத்துகளும் நான்கு வகையில் பெரிதான ஒரு அரசியல் உண்மையை நாட்டுக்குத் தெரியப்படுத்தியுள்ளது.
வாக்குகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இழந்து இரத்தக் கசிவுக்கு ஆளாகியுள்ள ஐ.தே.க இப்போது உடன்பிறப்புகளைக் கொல்ல நினைக்கும் அரசியல் முரண்பாடு காரணமாக இரத்தம் சிந்தும் நிலைக்கு ஆளாகியுள்ளது. (அடுத்தது என்ன? ரணிலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் மீது கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்வதா?)
ஐ.தே.க என்பது இரண்டு கட்சிகள் ஒன்றுபோல பொய்த் தோற்றம் காட்டுகிறது, ரணில் தலைவராக நீடிக்க வேண்டும் என வலியுறுத்தும் பிற்போக்குவாதிகள் ஒரு பக்கம், ரணில் இப்போது வெளியேறாவிட்டால் அடுத்த சுற்று தேசிய மட்டத்திலான தேர்தல்கள் வரை கட்சியை அழிவிலிருந்து மீட்டெடுக்க முடியாது என நம்பும் சீர்திருத்தவாதிகள் மறுபக்கம்.
உடனடியாக அனைவரையும் அணைத்து நடந்து தற்போதுள்ள வியாதியை குணப்படுத்தக்கூடிய ஒருவரால் திரு.விக்கிரமசிங்காவை மாற்றீடு செய்யாவிட்டால்;, ஐ.தே.க, வாக்காளர்களின் கட்சித்தாவல், நிறுவன ரீதியான முட்டுக்கட்டை, தெருச் சண்டைகளினால் ஏற்படும் கூட்டழிவு மற்றும் ஒழுக்க நெறி பிறழ்வு என்பனவற்றால் மரணிக்க நேரும்.
அரசியல் சமநிலையற்ற தன்மையின் விளைவாக தெற்கில் ஜனநாயகம் மெல்ல மெல்ல மரணத்தை தழுவ நேரிடும்.
பல்வேறு காரணங்களினால் ஐ.தே.க செத்துக் கொண்டிருக்கிறது. அது வாக்குகளை இழந்து கொண்டிருக்கிறது,ஏற்கனவே தன்னுடைய சொந்த வாக்குகளை மட்டுமன்றி ஒரு எதிர்க்கட்சி என்கிற வகையில் அது கவர்ந்திழுக்கக்கூடிய புதிய வாக்குகளையும் அது இழந்து கொண்டிருக்கிறது. அது பாராளுமன்ற அங்கத்தவர்களையும் இழந்து கொண்டிருக்கிறது, இறுதியானதும் மிகத் தெளிவானதுமான உதாரணம் தயாசிறி ஜயசேகர. அது அபத்தமான ஒழுங்கு விசாரணைகள் மூலமாக ஆhவலர்களையும் பிரதிநிதிகளையும் இழந்து கொண்டிருக்கிறது – கட்சியிலிருந்து வேண்டாதவரை நீக்கிக் கழிக்கும் முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு இளம் வழக்கறிஞர்களான  சிரால் லக்திலக மற்றும் மைத்திரி குணரத்ன ஆகியோரின் ஒழுக்காற்று நடவடிக்கைகள் இதற்கு நல்ல உதாரணம். அது அரசியல் முறையின் ஒவ்வொரு மட்டத்திலும் வாக்குகளையும் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளையும் இழந்து வருவதினூடாக பாராளுமன்றத்தில் எண்ணிக்கையையும் இழந்து வருகிறது. இப்போது அது தொலைக்காட்சி படப்பிடிப்பு உபகரணங்களுக்கு முன்பாக பூரணமாக காட்சி தரத்தக்க விதத்தில் தனது அதிருப்தியாளர்களை தாக்குவதன் மூலம் இரத்தம்,ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் அனுதாபம் என்பனவற்றையும் இழந்து வருகிறது.
மங்கள சமரவீரவின் பேரணி, ரணில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் முன்யோசனையற்ற விதத்தில் மோதிக்கொண்டது,மற்றும் ஆரம்ப இடையூறுகளைத் தொடர்ந்து ஏற்பட்ட தாக்குதல்கள் ஒரு தற்கொலைக் குண்டுத்தாக்குதலைப்போல தென் மாகாணசபை மற்றும் சிலவேளைகளில் மேற்கு மற்றும் ஊவா மகாண சபைகளிலும் ஐ.தே.க வின் தேர்தல் பிரச்சாரங்களை முன்கூட்டியே சிதைவடையச் செய்திருக்கிறது.
தொலைக்காட்சியில், மங்களவின் அணியினை சேர்ந்தவர்கள் “எங்களுக்கு ரணில் உள்ள ஒரு அரசாங்கம் வேண்டும்” என்று கூச்சலிடுவதை கேட்ககூடியதாக இருந்தது. உண்மை என்னவென்றால் அவர்களிடம் ஏற்கனவே அப்படியான ஒரு அரசாங்கம் உள்ளது. ( நான் எனது மனைவிக்கு கடமைப்பட்டுள்ளேன் என்று கிண்டலடிப்பதை போல,தற்போதுள்ள அரசாங்கத்தில் திரு. விக்கிரமசிங்க எதிர்க்கட்சி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சராக உள்ளார்).
கிழிந்து கந்தலாகியுள்ள பச்சைக் கூடாரத்தின் கீழ் இரண்டு பிரிவினர் போராட்டம் நடத்துகிறார்கள், என்கிற உண்மையை யாரும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை போலத் தெரிகிறது. மதிப்புமிக்க வணக்கத்துக்குரிய கிரம்பே ஆனந்த மேற்கொண்ட தலைமைத்துவ சபை பிரேரணைதான் ஒற்றுமைக்காக மேற்கொண்ட கடைசி முயற்சி. அது நடைமுறைக்கு ஒவ்வாத முயற்சியாகப் போய்விட்டது ஏனெனில் அது திரு.விக்கிரமசிங்காவின் நன்மதிப்பு மற்றும் நல்லுணர்வுகளையே கணக்கில் எடுத்திருந்தது. எனினும் மிகவும் நெஞ்சழுத்தம் மிக்க கீழ்படியாத பழங்கால ஆட்சியினரைப்போல அவர் மேடையிலிருந்து கீழே இறங்க தயாராக இல்லை. ஆகவே ஐ.தே.க வினை பாதுகாக்க இரண்டு நடைமுறைகள் மட்டுமே உள்ளன. முதலாவதாக கட்சியின் உள்பிரிவுகள் அனைத்தும் மீள ஒருங்கிணைக்கத்தக்க,குணமாக்கத் தக்க அரவணைப்பு வழங்ககூடிய ஆளுமையுள்ள ஒருவரின் தலைமையின் கீழ் கட்சியை மீளக் கட்டியெழுப்புவது. இதற்கு பொருத்தமானவராக நான் நினைப்பது ஐ.தே.கவிற்குள் அப்பழுக்கற்ற ஒரு தந்தையின் வடிவத்திலிருக்கும் கரு ஜயசூரியா அவர்களைத்தான். இரண்டாவதாக ஐ.தே.க தனது மின்கலங்களுக்கு மீண்டும் சக்தி ஊட்டி, புதுப்பித்து, புதிய சின்னமிட்டு, மீள ஆரம்பிக்க வேண்டும் அதற்கு பொருத்தமாக தொகுதி வாரியான தளவேலைகளுக்கு சக்தியூட்டக்கூடிய பொருத்தமான ஒரு வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை மட்டும்தான் என்னால் நினைத்துப் பார்க்க முடியும்.
இந்த இரண்டு நடவடிக்கைகளுக்கும் ஒரு உடனடி அங்கீகாரம் கிடைக்கிறது  என்று முன்னதாகவே எண்ணிக்கொள்வோமானால் பிரச்னைக்கு அல்லது பிரச்சினையின் பெரும்பகுதிக்கு காரணமான ரணில் விக்கிரமசிங்கா அதன் தீர்வுக்கான எந்த ஒரு பகுதியாகவும் இருக்கமுடியாது. ஐ.தே.க வானது தான் புலிகளைத் திருப்திப்படுத்திய இருண்ட யுகத்தை அப்புறப்படுத்தி விட்டதாக காட்டும் ஒரு தோற்றத்தை தேசிய தேர்தலில் காண்பிக்க வேண்டும். அது தனது சொந்த அங்கத்தவர்களுக்கும் தோல்வியின் பழைய முகம் போய்விட்டது. அதற்குப் பதிலாக கட்சிக்கு புத்துயிர் ஊட்டக்கூடிய ஒரு புதிய பார்வை கிடைத்துள்ளது, என்பதை காட்டும் புதிய பக்கத்தை புரட்டவேண்டும். இந்த இரண்டு நகர்வுகளுக்கும் தேவையாக உள்ளது ஒரு தலைவர் என்கிற நிலையிலிருந்து ரணிலை மாற்றி பொதுமக்களின் பார்வையிலிருந்து அவரை அகற்றக்கூடிய ஒரு புதிய வெளிச்சம்.
ஐ.தே.க ரணிலை தொடர்ந்தும் தலைவராக கொண்டிருக்குமானால் வெளிப்படையான அச்சம் எதுவுமின்றி பரஸ்பர நாசம் ஏற்படுத்தும் உள்ளக முரண்பாடுகள் மூலம் கட்சியை கூறுபோடும் செயல்முறை தொடரும், இதனால் அடுத்த தேர்தலில் அது செயலிழப்பதற்கு முன்னரே அதன் வாக்காளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆகிய அனைவரையும் கட்சி இழந்துவிடும். ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒரு பெரிய தனியார் ஊடக நிறுவனம் மற்றும் அதன் தலைவர் ஆகியோர் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்துவருவதாக ஐ.தே.க வின் தகவல் தொடர்பு மற்றும் ஊடகத் தலைவரான திரு.சமரவீர குற்றம் சாட்டியுள்ளார். அது உண்மையாயின் அதற்கான காரணம் என்னவென்று அவர் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும். தனியார் ஊடகத் துறையிலுள்ள ஒரு செயற்பாட்டாளரை தாக்குவதற்கு முன் அவர் தன்னிடம் கேட்கவேண்டிய அடுத்த கேள்வி அவருடைய தலைவருக்கும் மற்றும் அவரது வேட்பாளர்களுக்கும் எதிராக அரச ஊடகங்கள் மற்றும் செல்வாக்குள்ள தனியார் ஊடகங்களின் ஒரு பிரிவினர் ஆகிய இரண்டும் செயற்பட்டால் ஒரு தேர்தலை எப்படி வெல்லமுடியும் என எதிர்பார்ப்பது என்று.
ரணிலுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் கட்டாயம் உணரவேண்டியது ஐ.தே.க வின் வாக்குகள் சுருங்கிக் கொண்டே போகிறது, பாராளுமன்றத்துக்கு மீளத் தெரிவாகும் வாய்ப்பு ஆவியாகிக் கொண்டேபோகிறது மற்றும் ஐ.தே.க வுக்கு வாக்களிப்பவர்களாலும் இவர்கள் மேலும் தண்டனை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது, ஏனெனில் ஐ.தே.க வாக்காளர்களே தங்கள் வெறுப்பை வெளிக்காட்டும் வகையில் ஒரு ஜனநாயகக் கட்சி ஒருபோதும் கொண்டிராத ஒரு மோசமான தலைவருக்கு பக்கபலமாக நின்றார்கள் என்பதற்காக தங்கள் விருப்பு வாக்குகளை இவர்களுக்கு வழங்காமல் போகலாம்.
நாட்டின் மூன்றிலிரண்டு பகுதியான தெற்கில் ஜனநாயகம் மரணித்தால், அது மகிந்த ராஜபக்ஸவினால் சாகடிக்கப்பட்டிருக்காது, ஏனெனில் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க தனது தலைவராக ரணில் விக்கிரமசிங்காவை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டிருப்பதைக் காணச் சகியாமல் அது தானே தற்கொலை செய்துகொண்டிருக்கும்.

Web Design by Srilanka Muslims Web Team