செவ்வாயில் நீர் நிலைகள் இருந்ததற்கான அடையாளங்கள் ; ரோவர் விண்கலம் படம் அனுப்பியது..! - Sri Lanka Muslim

செவ்வாயில் நீர் நிலைகள் இருந்ததற்கான அடையாளங்கள் ; ரோவர் விண்கலம் படம் அனுப்பியது..!

Contributors

செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, பெர்சவரன்ஸ் என்கிற ரோவரை கடந்த ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது.

கடந்த பெப்ரவரி மாதம் செவ்வாய்க்கிரகத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய்க் கிரகத்தை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது.

செவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்தனவா என்பதை ஆராய அங்கிருந்து பாறை மற்றும் மண் துகள்களைச் சேகரிப்பதே பெர்சவரன்ஸ் ரோவரின் முக்கிய பணியாகும்.

ஆனால் பாறைத் துகள்களைச் சேகரிக்கும் பெர்சவரன்ஸ் ரோவரின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்ததாக கடந்த ஓகஸ்ட் மாதம் நாசா அறிவித்தது. எனினும் கடந்த மாத இறுதியில் செவ்வாய்க்கிரகத்தின் ஜெசேரோ பள்ளத்தாக்கில் இருந்து 2 பாறை துகள்களை பெர்சவரன்ஸ் சேகரித்தது.

அதன் தொடர்ச்சியாக தற்போது செவ்வாய்க் கிரகத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆறு, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் இருந்ததற்கான அடையாளங்களை பெர்சவரன்ஸ் ரோவர் படம் பிடித்து அனுப்பியுள்ளது.

நாசா அந்தப் படங்களை டுவிட்டரில் வெளியிட்டு, ‘‘விண்வெளியில் இருந்து, செவ்வாய்க் கிரகத்தை ஆராய்ந்து வரும் பெர்சவரன்ஸ் ரோவர், நீர்நிலையுடன் இருந்த ஜெசேரோ பள்ளத்தாக்கின் கடந்த காலத்தை பற்றிய அற்புதமான குறிப்புகளை எங்களுக்குத் தந்தது. புவியியல் குறித்த இந்த ஆச்சரியங்கள் விஞ்ஞானிகளை உற்சாகமடையச் செய்துள்ளன’’ எனத் தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team