சொந்த வீடுகளை இழந்துகொண்டிருக்கும் கொம்பனித் தெரு முஸ்லிம்கள்! உதவி புரிபவர்கள் யார்? - லத்தீப் பாரூக் - Sri Lanka Muslim

சொந்த வீடுகளை இழந்துகொண்டிருக்கும் கொம்பனித் தெரு முஸ்லிம்கள்! உதவி புரிபவர்கள் யார்? – லத்தீப் பாரூக்

Contributors

-லதீப் பாரூக்-

மூன்று ஆண்டுகளுக்கு முன், 2010, மே மாதம், 8 ஆம் நாள். பிற்பகல் வேளை. பாதுகாப்பமைச்சின் கீழ் இயங்குகின்ற நகர அபிவிருத்தி அதிகார சபை, கொழும்பின் மத்திய பகுதியான கொம்பனித் தெரு மீவ்ஸ் வீதியில்  இருக்கின்ற வீடுகளைத் தரை மட்டமாக்குவதற்காக, பொலிஸ் மற்றும் விசேட துருப்பினரைக் களத்தில் இறக்கியது.

தமிழர் ஒருவரினால் உரிமை கொள்ளப்பட்டிருந்த ஒரு வீடு தவிர, இவற்றில் ஏனைய சகல வீடுகளுமே முஸ்லிம்களுடையவையாகும். அவர்களது உடமைகள் பாதையில் தூக்கி எறியப்பட்ட நிலையில், அவர்கள் பலவந்தமாக வெளியேற்றப்படுகிறார்கள்.

 

காணி உரிமைப் பத்திரம், வீடுகள் சட்டபூர்வமானவை என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும், பல தசாப்தங்களாக தாம் இவ்விடத்தில் வசித்து வந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இவர்கள் பணி புரிந்ததும், அவர்களது பிள்ளைகள் பாடசாலை சென்றதும் இதன் சுற்று வட்டாரத்தில்தான்.

மனிதாபிமானம் அற்ற முறையில் அவர்களது வீடுகள் தகர்க்கப்பட்ட போது, அவர்களது கனவுகளும் இரவோடிரவாகத் தகர்ந்து போயின. மட்டக்குலியில் பலகையால அமைக்கப்பட்ட தற்காலிகக் குடியிருப்புகளுக்கு அவர்கள் அனுப்பப்படுகிறார்கள்.

இவ்வெளியேற்றத்தை நியாயப்படுத்தி, தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் விடுத்திருந்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. “மீவ்ஸ் தெருவில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவைப் பாடசாலை (Defence Services School) உடன் இணைந்த காணியில் வசித்து வந்த, அனுமதி வழங்கப்படாத குடியிருப்பாளர்களை அகற்றும் பணி, மிகவும் நீதியான, மனிதாபமான, சட்ட ஒழுங்குகளுக்கு இயைபான முறையில் மேற்கொள்ளப்பட்டது. குறித்த இந்நிலம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு (UDA) சொந்தமானதாகும். முறையான அனுமதி பெறாத நிலையில் குடியிருப்பாளர்கள் வசித்து வந்த போதிலும், மனிதாபமான ரீதியான காரணங்களைக் கருத்திற்கொண்டு, அவர்கள் நஷ்டஈடு வழங்கப்பட்டதோடு, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டோடு, மாற்றுத் தங்குமிடங்களும் வழங்கப்பட்டன. சட்ட விரோதக் குடியிருப்பைக் காலி செய்யுமாறு தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வந்த போதும், அவர்கள் அதனை பொருட்படுத்தவில்லை. இந்நிலையில், நஷ்டஈடும், மாற்றுக் குடியிருப்புக்களும் வழங்கப்பட்டு, மே 7 ஆம், திகதி, 2010 வெள்ளிக்கிழமை அன்று அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

நாட்டைப் பயங்கரவாதத்திடம் இருந்து பாதுகாப்பதற்காக சுயநலமற்ற உறுதியோடும், தியாகத்தோடும் செயல்பட்ட பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளுக்குப் போதுமான கல்வி வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கத்துடன், சில ஆண்டுகளுக்கு முன்பு Defence Service School ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலையின் தற்போதைய வசதிகளை மேம்படுத்தி, அதனை அபிவிருத்தி செய்வதற்கு, குறித்த நிலத்தை சுவீகரிப்பது அவசியமானதாக இருந்தது. எனவேதான், அரசாங்கம் இத்தீர்மானத்தை எடுத்தது. அது மிகவும் நீதியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது”. இவ்வாறு அவ்வூடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்பட்டது போலவே, வீடுகள் தகர்க்கப்பட்ட போது, பதட்ட நிலையொன்று உருவானது. குடியிருப்பாளர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் நடந்த si evitமோதலில், பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைந்தார். சில நாட்கள் கழித்து,கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், இருக்கமான பாதுகாப்பிற்கு மத்தியிலும், வீட்டு உரிமையாளர்கள் வீதிப் போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். மே, 14, 2010அன்று இது தொடர்பாக பின்வருமாறு டெய்லி மிரர் செய்தி வெளியிட்டிருந்தது.“லிப்டன் சதுக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசுகையில், நீதி அமைச்சர் ரவூப் ஹகீம் அவர்கள் ‘நகர அபிவிருத்தி அதிகார சபையை வழிநடாத்துகின்ற பாதுகாப்புச் செயலாளருக்கு மக்களைப் பலவந்தமாக வெளியேற்ற எந்த உரிமையும் இல்லை. அவர் தனது சகோதரர் ஜனாதிபதி ராஜபக்ஷவினால் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துபவரே அல்லாமல், மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்லர். இம்மக்கள் வெளியேற்றப்பட்ட முறை கருணையற்றதாகும். இரண்டு மணித்தியாலத்திற்குப் பதிலாக குறைந்த பட்சம் ஒரு மாதமாவது இவர்கள் காலக்கெடு வழங்கப்பட்டிருக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்”.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தார்கள். தெமடகொடவில் மாற்று இட வசதி செய்து தருவதாக இதன் போது, நகர அபிவிருத்தி அதிகார சபையும் இணங்கியது. புதிதாகக் கட்டப்பட்டு வந்த தொடர்மாடிக் குடியிருப்பில் , இவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்படும் என சட்டமா அதிபர் அவர்களும் இணங்கியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அரசாங்கம் சொன்ன மாதிரி தெமடகொடையில் வீடுகளை அமைத்தது. துரதிஷ்டவசமாக ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் ஆதரவாளர்களான பொரல்லையைச் சேர்ந்த மக்கள் மத்தியில் அவை பங்கு வைக்கப்பட்டன.

பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, கொழும்பு மேயர் A.J.M. முஸம்மில் ஆகியோர் கலந்து கொண்டிருந்த நிகழ்வில், மிஹிந்து சேன்புர என்ற இந்த வீட்டுத் தொகுதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. முன்பு கொழும்பில் சிறு குடில்களில் வசித்து வந்தவர்கள் மத்தியில் இவ்வீடுகள் கட்சி பேதமின்றிப் பங்கு வைக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில், அதிகாரிகள் மீது, தாம் பூரணமாக நம்பிக்கை இழந்திருப்பதாக மீவ்ஸ் தெருக் குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். கொழும்பின் வறுமையான பிரதேசங்களில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு, அவர்களது நிலங்களை அபகரிக்கும் சதித் திட்டம் இடம்பெற்று வருவதாக அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

இதனை உறுதிப்படுத்துவது போல், கொழும்பின் சனத்தொகை விகிதாசாரத்தை அரசியல் நோக்கங்களுக்காக அரசாங்கம் மாற்றியமைக்கும் திட்டத்துடன் இயங்கி வருவதாக மங்கல சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் அபிவிருத்தி என்ற பெயரில் நிலங்கள் அபகரிக்கப்படுவதாகவும், கொம்பனித் தெரு மக்கள் வீடற்றவர்களாக மாறி இருப்பதாகவும், கடந்த டிசம்பர் 2 ஆம் திகதி அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“கொழும்பு நகரத்தின் சனத்தொகை அமைப்பை மாற்றியமைப்பதற்கு பாதுகாப்பமைச்சு திட்டமிட்ட அடிப்படையில் முயற்சித்து வருகிறது என்பதை இச்சபைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நகர அபிவிருத்தி அதிகார சபை சார்பில் படையினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட கொம்பனித் தெரு மக்களின் நிலை இதற்கு நல்லதொரு உதாரணமாகும். நகர அபிவிருத்தி என்ற பெயரில் பல முஸ்லிம் மற்றும் தமிழ் குடும்பங்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்களில் பலர் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவகள். நகர அபிவிருத்தி சபையை நடைமுறையில் கட்டுப்படுத்தும் படையினர்களின் அச்சுறுத்தல்கள், போலியான வாக்குறுதிகள், கட்டாயப்படுத்தல்கள் மூலமாகவே இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது.

2007 இல் க்ளேனி வீதியில் 300 வீடுகள் தகர்க்கப்பட்டன. இவை சிறிய குடிசைகள் அல்ல. உண்மையில், இவற்றுள் சில இரண்டு, மூன்று மாடிகளைக் கொண்டவை. இவற்றுள் பல வீடுகளுக்கு நூறு ஆண்டுகளை விட அதிகமான வரலாறு உண்டு.

இக்குடியிருப்பாளர்கள் படையினரால் மட்டக் குலியவில், வெலிகொடவிற்கு சென்று, தற்காலிகக் குடியிருப்புக்களில் வசிக்குமாறு அச்சுறுத்தப்பட்டு, ஆறு ஆண்டுகளாக அங்கு வசித்து வருகிறார்கள்.

பிறகு 2010 இல் மீவ்ஸ் தெருவில் பெரும்பான்மையாக முஸ்லிம் மற்றும் தமிழர்களுக்குச் சொந்தமான 18 வீடுகள்,மூர்க்கத்தனமான பலம் மற்றும் ரவுடித்தனம் பயன்படுத்தப்பட்டு உடைத்து நொருக்கப்பட்டன. பலர் தமது தளபாடங்கள் மற்றும் உடமைகளை விட்டு விட்டு, உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஓட வேண்டியேற்பட்டது.

தொடர்ந்து நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக எம்.எம்.எஃப். ரிஸ்மியா என்பவர் குடியிருப்பாளர்கள் சார்பில் அடிப்படை மனித உரிமை வழக்கொன்றை (FRsl eviction339/2010) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். திரு J.C. வெலிமுன் என்பவர் நீதிமன்றத்தில் ‘வாதிகள்’ சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

2011, மே, 11 அன்று தெமடகொட பேஸ்லைன் வீதியில் வீட்டுத் தொகுதியொன்றை அமைப்பதற்குத் தீர்மானித்திருப்பதாகவும்,குறித்த மனுதாரர்களுக்கு இவ்வீடுகளை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை  இணங்கி இருப்பதாகவும் Deputy Solicitor General உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தார். எவ்வாறாயினும், மிஹிந்துபுர வீட்டுத் தொகுதி நிர்மாணம் நிறைவு பெற்றதோடு, முன்னைய நீதிமன்றத் தீர்ப்பைக் காலில் போட்டு மிதிக்கும் வகையில் மனுதாரர்களுக்கு  இந்த வீட்டுத் தொகுதிகள் வழங்கப்பட மாட்டாது எனக் கூறப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபைக்கு வெளியில் சிறுபான்மைக் குடும்பங்களைக் குடியேற்றும் மோசமான திட்டத்தோடு இணைந்த வகையில், கொழும்பு மாநகர சபைக்கு வெளியில் ராஜகிரிய, பண்டாரநாயகபுரவில் இவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மிக மோசமான விடயம் என்னவென்றால், உயர்மட்டத்தில் இருப்பவர்கள் இந்த வீடுகளை தெமடகொட ரயில் நிலைய விடுதிகளில் வசிப்பவர்களுக்கு வழங்கத் தீர்மானித்து இருப்பதுதான்”. இவ்வாறு மங்கல சமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பில், “Strengthening the culture of fear or democratic problem solving” (பயக் கலாசாரத்தைப் பலப்படுத்தல் அல்லது ஜனநாயக ரீதியாகப் பிரச்சினை தீர்த்தல்) என்ற தனது ஆக்கத்தில் ஜெஹான் பெரேரா பின்வருமாறு தெரிவிக்கின்றார்:   “சட்டரீதியற்ற கட்டடங்கள் என்ற பெயரில் வீடுகளும், கூடாரங்களும் தகர்க்கப்பட்டமையும், அதற்குப் பலமானதொரு எதிர்ப்பு இல்லாமல் இருக்கின்றமையும், முழு நாட்டையும் தழுவிய வகையில் இது போன்ற நிலை தோற்றமெடுக்கலாம் என்று கருதத்தக்க யதார்த்தத்திற்கு சான்றாக இருக்கின்றது.

“கொழும்பில் இருக்கின்ற கொட்டகைகளில் வாழ்பவர்கள்தான் அடுத்த இலக்காக இருக்கப் போகிறார்கள்….  நடைமுறையில் இரவோடிரவாக, அரிதான முன்னெச்சரிக்கைகளுடன் நூற்றுக் கணக்கானவர்கள் தமது வீடுகளை இழக்கிறார்கள். நடைபாதை வியாபாரிகளும், கொட்டில்களில் வாழ்பவர்களும் இடைஞ்சல் தருகிறார்கள், அல்லது அதை விட மோசமான பிரச்சினைகளைத் தருகிறார்கள் என்ற ரீதியில், அவர்கள் இடம் மாற்றப்பட வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால், இது தொடர்பில் கலந்துரையாடலும், பரஸ்பர ஒத்துழைப்பும் வழங்கப்பட வேண்டும். குரூரமான முறையில், அரச அதிகாரம் ஏனையவர்களின் வாழ்வாதாரங்களும், வீடுகளும் அழிக்கப்படுவதற்குப் பயன்படுத்தப்படும் போது, அரசாங்கத்திற்கு மாற்றமான நிலைப்பாடுகளோ, அதிகாரச் சமநிலையோ இருக்க முடியாது என்று அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். எனவே, மேற்கொள்ளப்படுகின்ற விடயம் அவசியமானதாகவும்,தேவையானதாகவும் இருந்த போதிலும் கூட, இது பயத்தை உண்டு பண்ணி விடுகிறது”.

இன்று கொழும்பின் தெருக்களின் இடம்பெற்று வருவது ஒன்றும் புதிய விடயமல்ல. வெவ்வேறு நேரங்களில்,வெவ்வேறு அரசாங்கங்கள் நகரத்தை ‘சுத்தம்’ செய்து, உலகின் பார்வையில் இருந்து வறுமையை மறைப்பதற்கு பிரயத்தனம் செய்திருக்கின்றன. முன்னைய சந்தர்ப்பங்கள், முறையான மாற்றீடொன்று வழங்கப்பட்டு, ஏழைகள் அனுப்பப்பட்டார்கள். அவ்வாறில்லாத நேரங்களில், வீதி ஆர்ப்பாட்டங்களும், அரசியல் ஆர்ப்பாட்டங்களும் அரசாங்கத் தலைவர்கள் தமது முடிவை மீள் பரிசீலணை செய்து, மனதை மாற்றிக்கொள்ள வழி செய்தன. ஜனநாயக நாடொன்றில் சட்டத்தின் பாதுகாப்பு என்பது, சட்டம் அனைவரையும் கட்டுப்படுத்தும் எனவும், சட்டத்தின் பாதுகாப்பு அனைவருக்கும் உண்டு எனவும் அனைவரும் உணர்வதும், நம்பிக்கை கொள்ளவதுமாகும். சட்டத்தின் ஆட்சி தொடர்பில் தமது அரசாங்கத்தின் கடமை உணர்ச்சி குறித்தும், வார்த்தைகளில் மட்டும் அல்லாமல், செயலிலும் மக்கள் நம்பிக்கையை உணர வேண்டும். கருப்பை வெள்ளை என்றும், மறுப்பை தமது முதல் ஆயுதமாகவும் பயன்படுத்துகின்ற தலைவர்களால் மக்களின் நம்பிக்கையை நீண்ட காலத்திற்கு வைத்துக் கொண்டு இருக்க முடியாது”. இவ்வாறு ஜெஹான் பெரேரா சொல்கிறார்.

இத்தனை பிரச்சினைக்கும் மத்தியில், முஸ்லிம் பாராளுமன்ற அங்கத்தவர்கள் அமைதி காப்பது ஏன் என்ற கேள்வி எழலாம். அதற்கான காரணம் தெரிந்ததுதான். வெட்கமற்ற முறையில் சோரம் போகும் இவ்வரசியல் வாதிகள், தமது பதவி மற்றும் சொகுசுகளுக்காக அதிகாரத்தின் கால்களை முத்தமிடுவதில் கடும் பிஸியாக இருக்கிறார்கள். இறுதியில்,கொம்பனித் தெரு முஸ்லிம்கள், உதவிக்காகத் திரும்புவதற்கு எவரும் இல்லாத நிலை இன்று உருவாகி இருக்கிறது.

Web Design by Srilanka Muslims Web Team