ஜனநாயகத்திற்கான வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் அறிக்கை » Sri Lanka Muslim

ஜனநாயகத்திற்கான வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் அறிக்கை

demo1

Contributors
author image

Press Release

 

அனைத்து அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி முறைமையும் தற்போதைய தேர்தல் முறையும் இலங்கையின் ஜனநாயக அடித்தளத்தினையும் அதன் உயரிய விழுமியங்களையும் சிதைத்து வருவதுடன் , வீழ்ச்சிக்கான முக்கிய காரணியாகவும் அமைந்திருக்கிறது என்பது தற்போது மெருமளவிலான இலங்கை மக்களால் உணரப்பட்டுள்ளது.

 

மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் இலங்கையின் அனைத்து மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய ஜனநாயக சூழலை ஏற்படுத்தி இருக்க முடியும். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தினை சரியான திசையில் கட்டி எழுப்பி இருக்க முடியும். ஆனால் இவற்றிற்கு பதிலாக நாட்டின் பொருளாதாரம், பாரளுமன்றம், அரசியல் அதிகாரம், இராணுவம் அனைத்தையும் தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து குடும்ப, கட்சி சர்வாதிகாரத்தினை நிறுவியுள்ளார்.

 

யுத்தத்தின் பெயரால் அழிக்கப்பட்ட ஜனநாயக நிறுவனங்கள் 2010க்குப் பின்னர் மீளமைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக எஞ்சியிருந்தவையும் அழிக்கப்பட்டு வருகின்றன. மகிந்த ராஜபக்சவின் குடும்ப சர்வாதிகார ஆட்சி சகல ஊழல் வழிமுறைகளையும் கையாண்டு அரச அதிகாரத்தினையும் வளங்களையும் பெருமளவில் துஷ்பிரயோகம் செய்து வருகிறது.

 

இனவாதத்தினை கிளப்பி வன்முறையைக் கட்டவிழ்த்து ,பாராளுமன்ற பெரும்பான்மையை விலைக்கு வாங்கி தொடர்ச்சியாக அதிகாரத்தில் இருப்பதற்கும் சகல அரச நிறுவனங்களையும் தனது இரும்பு பிடிக்குள் வைத்திருப்பதற்காகவும் 18வது அரசியலமைப்பு திருத்தத்தினை கொண்டு வந்து நிறைவேற்றி முழு நாட்டையும் ராஜபக்சவின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது.இந்த சர்வாதிகாரப் பயணம் இப்போது நிறுத்தப்படாவிட்டால், நாளை சகல மக்களும் அனைத்து ஜனநாயக உரிமைகளை இழந்தவர்களாக அச்சத்துடனும் பாதுகாப்பற்ற நிலைமையிலும் வாழ நேரிடும்.

 

இச்சூழலில்தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி முறை ஒழிக்கப்படல் வேண்டும் அல்லது அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் என்ற நிலைமையின் நிர்ப்பந்தம் பல்வேறு கட்சிகளையும் ஜனநாயக நிறுவனங்களையும் சிவில் அமைப்புகளையும் தனி நபர்களையும் பொது உடன்பாட்டின் அடிப்படையில் ஒன்று சேர்த்திருக்கிறது. இதன் விளைவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி , தொடரும் ராஜபக்சவின் ஜனநாயக விரோதத்திற்கு முடிவு கட்டும் பயணமாகும். இது மக்களின் அபிலாசையுடன் கலந்து ஜனநாயகத்தினை காப்பதற்கான ஒரு முடிவாகும்.

 

இன்றைய நிலையில் பல ஜனநாயக அமைப்புக்களின் ஆதரவுடன் பொது வேட்பாளர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுகின்றமை ஜனநாயக இடைவெளிக்கான முதற்படியாகும். இந்த பொது வேட்பாளருக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்குவது அனைவரினதும் வரலாற்றுக் கடமையாகும். இதில் நடு நிலைமை வகிப்பதோ, தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டுமெனக் கோருவதோ ,பாராமுகமாக இருப்பதோ மகிந்த குடும்ப சர்வாதிகாரத்திற்கு மறைமுகமாக வழங்கப்படும் ஆதரவாகவே கருதப்படல் வேண்டும். இந்தப் போக்கு ஜனநாயகத்தினை குழி தோண்டிப் புதைக்கவே உதவும்.

 

குடும்ப சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான இந்த போராட்டம் , சாராம்சத்தில் அனைத்து மக்களுக்கும் தேவையான அடிப்படை ஜனநாயகத்திற்கான போராட்டமாகும். இப்போராட்டத்தில் அனைத்து மக்களும் ஒரு பொது நோக்கத்திற்காக ஒன்றுபடக்கூடிய உன்னதமான நிலை உருவாகி உள்ளது.இந்த சூழல் மேலும் பலப்படுத்தப்படல் வேண்டும். எனவே, நாம் தூங்கினால் ஜனநாயகம் தூங்கிவிடும்.

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் , இலங்கையர் அனைவரும் தமது வாக்குரிமையை மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டும். மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நிபந்தனையுடன் வாக்களியுங்கள் என முழு இலங்கை மக்களையும் வேண்டுகிறோம்.

Web Design by The Design Lanka