ஜனாதிபதிக்கு 856 கோடி: சகோதரர்கள் மூவருக்கும் 72,400 கோடி! - Sri Lanka Muslim

ஜனாதிபதிக்கு 856 கோடி: சகோதரர்கள் மூவருக்கும் 72,400 கோடி!

Contributors

பொதுநலவாய நாடுகள் அமைப்பில் 50இற்கும் அதிகமான நாடுகள் அங்கம் வகிக்கின்றபோதும் தற்போது வரையில் 13 நாடுகள் மட்டுமே மாநாட்டுக்கான வருகையை உறுதிப்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

நேற்று (28) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க,

பொதுநலவாய மாநாட்டை விளம்பரப்படுத்துவதற்காக மட்டும் 10,000 லட்சம் செலவிடப்படுகிறது.

பொதுநலவாய மாநாட்டுக்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்காக 24,000 லட்சம் ரூபா செலவிடப்படுகிறது.

பொதுநலவாய மாநாடு நடப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

பெருந் தொகையான பணத்தை செலவிடுவதற்கே எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

இவ்வாறு செலவிடப்படும் பணத்தை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கத்தினால் முடியாது.

கடந்தவாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட சட்டமூலத்தில் தனி நபராக ஜனாதிபதிக்கு மட்டும் 856 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜனாதிபதிக்காக 742 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது. இதன்படி இவ் வருடம் 114 கோடி ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பிரதமருக்கு இவ்வருடம் 2 கோடி ரூபா குறைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் பிரமரது செலவுக்காக 32 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இவ்வருடம் 30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அடுத்த வருடம் ஜனாதிபதிக்கான செலவுக்காக 856 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமரது செலவுக்காக 30 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பஷில் ராஜபக்ஷவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 10,600 கோடி ரூபாவும் கோட்டாபாய ராஜபக்ஷவின் பாதுகாப்பு அமைச்சுக்கு 25,390 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் கீ்ழ் உள்ள அமைச்சுக்களுக்காக 36,250 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்படி இவர்கள் சகோதரர்கள் மூவருக்குமாக 72, 400 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இது அடுத்த ஆண்டுக்கான மொத்த செலவில் நூற்றுக்கு 47 வீதமாகும்.

என திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்தார்.

அத தெரண

Web Design by Srilanka Muslims Web Team