ஜனாதிபதியின் விசேட நேர்காணல் » Sri Lanka Muslim

ஜனாதிபதியின் விசேட நேர்காணல்

maith

Contributors
author image

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன இணைந்த கூட்டு அரசாங்கமானது எதிர்காலத்தில் முகம் கொடுக்கவிருக்கும் சவால்களை வெற்றி கொள்வது தொடர்பாக கௌரவ ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றிய விசேட ஊடகக் கலந்துரையாடல் – 13.08.2016

கேள்வி : இந்த அரசாங்கம் பலவீனமானது, நிலையற்றது. கொள்கைகள், பிரேரணைகளைக் கொண்டுவந்து அதில் திருத்தம் மேற்கொள்கிறது, மக்கள் கருத்துக்கு செவி சாய்க்கிறது. சிலபோது கொள்கைகளை இரத்துச் செய்கின்றது என சமூகத்தில் ஒரு கருத்து நிலவுகின்றது. இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் பண்புகளாக இது காணப்பட்டாலும், இது நம் நாட்டுக்கு பரீட்சியமற்றது. இது பற்றி நாட்டுக்கு விளக்கம் அளிக்கப்படவில்லை. அனைவரின் மனங்களிலும் முரண்பாட்டு அரசியலே பதிந்துள்ளது. இந்த சவாலை இணக்கப்பாட்டு அரசாங்கம் எவ்வாறு வெற்றி கொள்ளலாம்? ஜனாதிபதி அவர்களே, இந்த அரசாங்கம் நிலையற்றற அரசாங்கமா அல்லது பலவீனமான அரசாங்கமா?

இந்த அரசாங்கம் நிலையானதா நிலையற்றதா?, பலவீனமானதா என்பன பற்றி குறிப்பிடுகையில், முதலாவது விடயமாக இந்த அரசாங்கம் எவ்வாறு அமையப் பெற்றது என்பது பற்றி குறிப்பிடப்பட வேண்டும். நாம் அதிகாரத்திற்கு வந்து உருவாக்கும் அரசாங்கம் ஓர் இணக்கப்பாட்டு அரசாங்கம் என கடந்த ஜனாதிபதி தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும், நாம் வெளியிட்ட தேர்தல் கொள்கைப் பிரகடனங்களில் குறிப்பிட்டோம். அரசாங்கத்தில் இணையுமாறு பிரதான அரசியல் கட்சிகளுக்கும், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகளுக்கும் நாம் அழைப்பு விடுத்தோம்.

அவ்வாறே இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஒரு புதிய அனுபவமாக அனைவருக்கும் தென்படுகின்றது. காரணம் சுதந்திரத்தின் பின் இலங்கையில் இவ்வாறான ஒரு இணக்கப்பாட்டு அரசாங்கம் உருவாகியிருக்கவில்லை. ஆயினும் இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் பெயர் கடந்த பல தசாப்தங்களாக இந்நாட்டில் பேசப்பட்டு வந்தது.

தேசிய பிரச்சினைகளின்போது ஒரு சில சந்தர்ப்பங்களில் எல்ரீரீஈ. பயங்கரவாதிகளின் பலத்தினை எடுத்துக்காட்டும் சந்தர்ப்பங்கள் காணப்பட்டது. அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கம் என்ற வகையில் இதனை எதிர்கொள்வோம் என்று நாட்டு மக்கள் கூறினார்கள். சுனாமி அனர்த்தத்தின்போதும் இவ்வாறுதான் நிகழ்ந்தது. அவ்வாறுதான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொதுவான விடயங்களில் விசேடமாக எல்ரீரீஈ யை தோற்கடித்ததன் பின்னர் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென்ற ஒரு கருத்து கட்டியெழுப்பப்பட்டது.

ஆகவே இவ் இணக்கப்பாட்டு அரசாங்கம் தொடர்பான மக்களது கோரிக்கை, கருத்து மற்றும் இது தொடர்பான உரையாடல் நீண்டகாலமாக நிலவுகிறது. கடந்த ஆண்டு நாம் இப்பணியினை நிறைவேற்றினோம். உண்மையில் இதன்மூலம் திருப்தியடையாதோர் ஏராளமானோர் உள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் கிராமப்புற ஆதரவாளர்கள், இது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அல்ல எனக் கூறுகின்றனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் இது சுதந்திரக்கட்சி அரசாங்கம் அல்ல என்று கூறுகின்றனர்.

இதுவரைகாலமும் சம்பிரதாய பூர்வமாக தனியொரு கட்சி பாரிய ஒரு வெற்றியின் மூலம் தனித்து ஆட்சி அமைத்தது வந்திருந்தது. ஆயினும் தற்போது தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் அரசாங்கத்தின் ஒரு சில விடயங்கள் வெற்றியளித்தபோதும் ஏராளமான விடயங்களில் நாம் தோல்வியடைந்துள்ளோம்.

சிங்கப்பூரை இலங்கையை போன்று மாற்ற வேண்டுமென 1960ஆம் தசாப்தத்தின் ஆரம்ப காலங்களில் லீ குவான் யூ கூறினாலும், நாம் தற்போது 9 இலட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கியுள்ளோம். நீண்டகால யுத்தத்தின் பின் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரேரணை போன்று பல்வேறு விடயங்களை நாம் எதிர்கொண்டுள்ளோம். தற்போது உள்ள பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிகள் மத்தியில் இவ்வாறான ஒரு அரசாங்கத்தின் தேவை நிலவுகிறது. ஆயினும் தனித்து ஆட்சி செய்வதே எமக்கு பழக்கமானதாகும். தனித்து ஆட்சி செய்யும் ஓர் அரசியல் கலாசாரம் எமக்கு உள்ளது. ஆகவே தனித்து ஆட்சி செய்யும் அரசியல் கலாசாரம், சம்பிரதாயம் எமக்கு பாரிய சவாலாக உள்ளது.

அரசாங்கம் நிலையானதா? நிலையற்றதா? பலவீனமானதா என்ற உங்கள் வினாவிற்கு தற்போது நான் கூறிய விடயங்கள் பதிலளிக்கும் இதுதான் உண்மை நிலைமை. ஆகவே நாம் மிகப் பலமானதொரு அரசாங்கத்தைக் கொண்டுள்ளோம்.

ஜனாதிபதி என்ற ரீதியில் எனக்கு, சுமார் அறுபத்தி இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் கிடைத்தது. அடுத்ததாக ஆகஸ்ட் 17 பாராளுமன்ற தேர்தலின் பின்னர் எம்மால் அங்கீகரிக்கப்பட்ட வரவுசெலவு திட்டத்தில் தெளிவாக தெரியவரும் விடயம் என்னவென்றால், பாராளுமன்றத்தில் எமக்கு மூன்றில் இரண்டு அதிகாரம் உள்ளது என்பதே. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு அதிகாரத்தை வைத்துக்கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஏன் இன்னும் தாமதமாகின்றது என மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே எமது அரசாங்கம் தெளிவாகவே ஒர் பலமான அரசாங்கம் ஆகும். நாம் பலவீனமான அரசாங்கம் அல்ல.

கடந்த வார இறுதியில் பத்திரிகைகளில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் எழுதிய கட்டுரைகள் சிலவற்றை நான் படித்தேன். பலமுள்ள ஓரு எதிர்க்கட்சி அவசியம் என்பதை வலியுறுத்தி எழுதப்பட்ட கட்டுரைகளை நான் வாசித்தேன். புத்தி ஜீவிகளின் கருத்தென நான் அதைக் கண்டேன். பலமுள்ள எதிர்க்கட்சி தேவை என்ற கருத்தில் இருந்து புலப்படுவது ஆளுங்கட்சி பலமாக உள்ளதென்பதாகும். எதிர்க்கட்சி பலவீனம் என்பதாகும். இதுதான் உண்மை நிலை ஆகும். நாம் பலமான அரசாங்கம், அசைக்க இயலாத அரசாங்கம் என்பதை உறுதிப்படுத்த பல்வேறு விடயங்களை முன் வைக்க முடியும்.

கேள்வி : இந்த அரசாங்கம் எந்தவித அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை என குற்றம் சுமத்தப்படுகின்றதே?

நாம் அரசங்கத்தை பொறுப்பேற்ற போது, முன்னர் இருந்த அரசாங்கம் செய்ததைப்போல் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டுமென எதிர்பார்ப்பதே இங்கு உள்ள பிரச்சினையாகும். அதே முறையில் நாமும் பயணிக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். காரணம் தற்போது கிராமமும் பாதையும் இருக்கின்றது. ஏனெனில் முன்னர் கிராமத்தில் பாதை அமைக்கின்றபோது மதிப்பீடுகள் இடம்பெறுவதில்லை. நிதி அமைச்சிலிருந்து அனுமதி கிடைப்பதில்லை. அமைச்சரவை அனுமதி இல்லை. டென்டர்கள் இல்லை. ‘அதோ அந்த வீதியை அமைக்கவும், பத்து கிலோ மீட்டர்கள் உள்ளன’ என பிரதான ஒப்பந்தக்காரருக்கு கூறப்பட்டால் அவர் அதை செய்வார்.
‘அதோ அந்த கட்டிடத்தை நிர்மாணியுங்கள்’ எனச் சொன்னால் அவர் அதை அமைப்பார். அலரி மாளிகையில் நிர்மாணிக்கப்பட்ட பிரமாண்டமான மண்டபத்திற்கு செலுத்தப்பட வேண்டிய நிதியினைக் கோரி இந்த நாட்டில் உள்ள ஒரு பிரதான நிர்மாணக் கம்பனி கடந்தவாரம் எனக்கு கடிதம் அனுப்பி இருந்தது. இம் மண்டபத்திற்கான மதிப்பீடுகள் எதுவும் இல்லை. அமைச்சரவை அங்கீகாரம் இல்லை. பிரதான நிர்மாண கம்பனிக்கு இதை நிர்மாணிக்குமாறு கூறப்பட்டது. நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் பிரதானமாக ஊழல் மோசடி முறைகேடுகள், வீண்விரயம், நிதி சார்ந்த ஒழுக்கம் மற்றும் நிதி முகாமைத்துவம் என்பன காணப்படவில்லை.

நல்லாட்சி எண்ணக்கருவில் நிதி ஒழுக்கம் மற்றும் நிதி முகாமைத்துவம் என்பன முக்கிய விடயங்களாக உள்ளது. டென்டர் கோரப்படாமல் பல கோடி ரூபாய் பெறுமதியான நிர்மாணப் பணிகள் இம்பெறுமாயின், நிதி அமைச்சு அங்கீகரிக்காவிடின், அமைச்சரவை அங்கீகாரம் வழங்காவிடின் சாதாரண ஒரு பெட்டிக் கடை போன்று அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை தயாரிக்க முடியாது. திறைசேரியில் வேலை செய்ய முடியாது. ஆயினும் நாம் பதவியேற்றதன் பின் சென்ற ஆண்டில் நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் எம்மீது குற்றம் சுமத்தப்பட்டது. நிர்மாணத்துறை உள்ளிட்ட பல்வேறு கருத்திட்டங்களை தற்காலிகமாக நிறுத்துவதற்கு நேர்ந்தது.

இதற்கான ஒரு முறைமை தயாரிக்கப்பட வேண்டுமென கூறுகின்றீர்களா?

சரியான முறை ஒன்று தயாரிக்கப்படல் வேண்டும். கடந்த ஆட்சியில் அனுமதி வழங்கக்கூடிய உத்தியோகத்தர்கள் சம்மதம் தெரிவிக்காமையே நிதியினை செலுத்த முடியாமைக்கான காரணமாகும். தன்னால் முடியாதென திறைசேரி கூறுகிறது எமக்குத் தெரியாது என ஏற்புடைய அமைச்சுக்கள் கூறுகின்றன. உரிய விதிமுறைகளுக்கு அமைய இவை சமர்ப்பிக்கப்படவில்லை என கணக்காளர்கள் கூறுகின்றனர். அதாவது முன்னைய ஆட்சியில் டென்டர் விதிமுறையோ ஒழுங்கு விதியோ பின்பற்றப்பட்டிருக்கவில்லை.

பெரும்பாலும் பாரிய கருத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும்போது சாத்தியக்கூற்று ஆய்வு மேற்கொள்ளப்படும். பெரும்பாலான பாரிய கருத்திட்டங்களுக்கு இவ் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. மத்தளை விமான நிலையம் இதற்கு சிறந்த உதாரணமாகும். வேறேதும் தேவைக்காக மக்களை சந்திப்பதற்காக மத்தளை பிரதேசத்திற்கு சமல் ராஜபக்ஷ அவர்கள் சென்றபோது மக்கள் அவரை சூழ்ந்துகொண்டு, எமது வயல் காணிகள் விமான நிலைத்திற்கு சுவீகரிக்கப்படுகின்றது எனக் கூறி எதிர்ப்புத் தெரிவித்தபோது அங்கு இருந்துகொண்டே அவர் தனது கையடக்கத் தொலைபேசியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு இங்கு பாரிய மக்கள் எதிர்ப்பு உள்ளதாக கூறுவார்.

மத்தளை விமான நிலையத்திற்கான சாத்தியக்கூற்று அறிக்கை மேற்கொள்ளப்படவில்லை. உலக வங்கி, சர்வதேச நாணயநிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜயிக்கா போன்ற நிறுவனங்கள் எமக்கு உதவி வழங்குவதை ஏன் நிறுத்திக்கொண்டன? உலக வங்கியின் பணிப்பாளர் சபை எமது நாட்டுக்கு வந்தது. எம்மைச் சந்தித்தது. 36 ஆண்டுகளின் பின்னர் உலக வங்கியின் பணிப்பாளர் சபை இலங்கைக்கு வந்தது. அவ்வாறே சர்வதேச நாணய நிதியம் எம்மை விட்டு விலகியிருந்தது. ஆசிய அபிவிருத்தி வங்கியும் அப்படித்தான். ஜயிக்கா நிறுவனம் நீண்டகாலமாக உதவி செய்தபோதும் கடந்த தசாப்தத்தில் வேகமாக பின்னோக்கிச் சென்றது. ஏன் இப்படி நடந்தது? நிதிசார் ஒழுக்கம் இல்லை எனவும் நிதி முகாமைத்துவம் இல்லை எனவும், ஊழல்மோசடி மற்றும் முறைகேடுகள் உள்ளதெனவும் எமது நாட்டில் மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியிலும் அனைவரும் கண்டுகொண்டனர்.

ஜனாதிபதி அவர்களே, தற்போது இதற்கான முறைமை தயார் செய்யப்பட்டுள்ளதா?

தற்போது நாம் இம்முறைகளை தயாரித்துள்ளோம்.

மறுபடியும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தாமதிக்காதா?

உண்மையில் நாம் சுமார் ஓராண்டு காலம் பிரதான கருத்திட்டங்களை ஆரம்பிக்கவில்லை. தற்போது ஆரம்பித்துள்ளோம். நான் இதுபற்றி ஒவ்வொன்றாக விளக்கவில்லை. நிர்மாணப்பணிகள், வீதிகள், பாரிய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் இடம்பெறுவதில்லை என யாராவது கூறுவார்களாயின், டென்டர் கோரப்படுகிறது. அத்தியாவசியமான ஏதேனும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தாமதிக்க முடியாத ஒன்று இருப்பின் டென்டர் கோராது இதனை மேற்கொள்வதாயின் அது எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டுமென அவ்வப்போது அமைச்சரவையுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படுகிறது. ஆகவே இறுக்கமான நிதிசார் ஒழுக்கம் மற்றும் நிதி முகாமைத்துவத்துடன் நாம் இவற்றை மேற்கொள்கிறோம்.

நாடு என்ற ரீதியில் நான் கருத்திட்டங்களை கொண்டுவந்தேன். ஏற்கனவே 562 கருத்திட்ங்கள் காணப்பட்டது. இவற்றுள் வீதிகள். கட்டிட நிர்மாணிப்புக்கள் உள்ளடங்கும். எமது வீதி புனரமைப்பு பணிகளில் பாதி நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வளவுதான் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என அதன்போது கிராமங்களில் கூச்சலிடத் தொடங்கினர். ஆயினும் தற்போது இந்த 562 கருத்திட்டங்களும் நடைபெற்று வருகின்றது. தற்போது இவ்வாறான பிரச்சினைகள் இல்லை.

கௌரவ அஜித் பி பெரேரா அவர்களே! ஒன்பது இலட்சம் கோடி ரூபாய் கடன்பட்டு இருந்ததாக நீங்கள் கூறினீர்கள். இவ் அரசாங்தை பொறுப்பேற்றபோது இதுபற்றி அறிந்திருக்கவில்லையா?

ஓரளவு அறிந்து இருந்தோம். மறைக்கப்பட்ட மேலும் பாரியளவு கடன்கள் இருந்தது. நாம் பதவியேற்று இது பற்றி ஆராய்ந்தபோது அறிந்து கொண்டோம். இது அதிர்;ச்சி அளவான கடனாகும். ஆகவே புதிய கடன் பொறுப்புக்களை இனம் கண்டு அவற்றை எதிர்கொள்ள எமக்கு நேர்ந்தது. ஆகவே நாம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இதற்கு ஏற்ப வருமானங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறே கௌரவ ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டது போன்று அனைத்து அமைச்சுக்களிலும் அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அபிவிருத்தி திட்டங்கள் முன்னொக்கி செல்கிறது என பெருமையுடன் கூற முடியும். அவ்வாறே கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், மின்சாரம் ஆகிய துறைகளில் பாரியளவு முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அவர்களே, வற் வரிக்கு என்ன நடந்தது. வற் சட்டத்திற்கு என்ன நடந்தது. இதன் காரணமாக அரசாங்கத்திற்கு 6,000 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டள்ளதாக கூறப்படுகிறது. இதை எவ்வாறு திரட்டிக்கொள்ளப் போகின்றீர்கள்?

வற் வரியைப்பற்றி பேசும்போது அதன் பின்னனி பற்றி கூற வேண்டும். அரசாங்கத்தை கொண்டு செல்ல நிதி தேவைப்படுகிறது. வரி அறவிடல் பற்றி பாரியதொரு வரலாறு உள்ளது. சிங்கள மன்னர்கள் காலத்தில் வரி அறவிடல் தொடர்பான அழகான கதைகள் உள்ளன. அவ்வாறே ஆங்கிலேயர் காலத்தில் வரி பற்றி கூறும்போது, நாய்களுக்கான வரி காணப்பட்டது. உலகில் எந்தவொரு நாட்டையும் ஆட்சி செய்வதற்கு எவ்வகையான ஆட்சி முறை காணப்பட்டபோதும், ஆட்சி செய்வதற்கு நிதி தேவைப்படுகிறது. நாம் தற்போது 9 இலட்சம் கோடி ரூபா கடன் சுமையில் உள்ளோம்.

நாம் எவ்வாறு நாட்டின் பொருளாதாரத்தை வழி நடத்துவது? முகாமைத்துவம் செய்வது? எமக்கு நிதி தேவைப்படுகிறது. குறைந்த வருமானம் பெறுபவர்களை வாட்டி வதைத்து நிதியினை பெற முடியாது. கூடுதலான வருமானம் தரும், வரி அறவிடுவதற்கு பொருத்தமானவர்களிடம் வரி அறவிடப்படல் வேண்டும். நாம் சமர்ப்பித்த பிரேரணைகளில் ஒரு சில சட்ட சிக்கல் நிலைமைகள் ஏற்பட்டது. நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுபற்றி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நாம் அதை ஏற்றுக்கொள்கிறோம். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய நாம் எமது பிரேரணையை சட்ட ரீதியாக சீர்செய்து எதிர்காலத்தில் சமர்ப்பிப்போம்.

வருமான இழப்பு அரசாங்கத்தை பாதிக்காதா?

நாம் புதிதாக கொண்டு வரும் பிரேரணைகளில் வருமான இழப்புக்கான தீர்வினை கண்டறிய வேண்டியுள்ளது. வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் முறையினை உள்ளடக்கியதாகவே எதிர்காலத்தில் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படும். சர்வதேச நாணய நிதியத்தின் பணி;பபாளர் இலங்கையில் இருந்தபோது அவருடன் நான் கதைத்தேன். அவ்வாறே பிரதமர் அவர்களும் கதைத்தார். கடைகள் பூட்டப்பட்டு ஊழியர்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தினர். எமது வரலாற்றில் முதல் தடவையாக வியாபாரிகள் தமது கடைகளை அடைத்து வீதியில் இறங்கினர். தமது கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுடன் சேர்ந்தே அவர்கள் வீதியில் இறங்கினர். இது தொடர்பான பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது. ஆகவே இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு, முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி சரியான முறையில் பிரச்சினைகள் எழாத வண்ணம் ஒரு வேலைத்திட்டத்தை எதிர்காலத்தில் கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஜனாதிபதி அவர்களே, இப்பிரேரணை அமைச்சரவைக்கு வந்தபோது இதுபற்றி பின்னர் கலந்துரையாடி தீர்மானம் எடுப்போம் என நீங்கள் கூறினீர்கள். புதிதாக கொண்டுவரும் திருத்தம்பற்றி உங்களது நிலைப்பாடு என்ன?

இதன் அடிப்படையை மாற்றுவதற்கு எம்மால் முடியாது. வரி அவசியமாகும். நாட்டுக்கு வருமானம் அவசியம். வருமானம் பெறுபவர்களிடம் அரசாங்கம் ஒரு பகுதியை பெற்றுக்கொள்வது உலக நியதியாகும். உலகெங்கும் இவ்வாறே நடைபெறுகிறது. சகல அரசாங்கங்களும் அவ்வாறுதான். எதிர்ப்பு மற்றும் எதிர்ப்புக்கான காரணங்கள் என்ன என்பதுபற்றி நாம் கருத்திற் கொள்ளல் வேண்டும். இந்த வரி முறைமை தங்களுக்கு பரீட்சையம் அற்றது என்பதே சிறிய வியாபாரிகள் முன் வைத்த விடயமாகும்.

புத்தகங்களை தயாரிப்பது கடினமாகும். கணக்கிடல், கணக்காய்வு நடவடிக்கைகள் பற்றிய அறிவு இல்லாதது அவர்களுக்கு பிரச்சினையாகும். இது தொடர்பாக அவர்களுக்கு அறிவூட்டும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு நான் முன்மொழிந்துள்ளேன். ஏதேனும் ஓர் இடத்தில் இருந்து ஏதேனும் ஒரு தொகையினை அரசாங்கத்திற்கு பெற்றுக்கொள்ளத் தேவையாயின், வருமானம் பெறுபவர்களிடம் அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவரது வியாபாரத்திற்கு பாரியளவில் பாதிப்பு இல்லாது ஓரளவு தொகை அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்விடயங்களுக்கு பழக்கப்படாத பிரிவினர்கள் காணப்படின் சிறியளவிலான வியாபாரிகள் இவ் வரி முறைபற்றி அவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களுக்கு தொல்லை தராத விதமாக அரசு என்ற ரீதியில் இது தொடர்பான நிகழ்ச்சித் திட்டங்களை தயாரிக்க எம்மால் முடியும். மாவட்ட செயலாளர்கள் அல்லது நிதி அமைச்சின் மூலம் இது தொடர்பாக அவர்களுக்கு அறிவூட்ட முடியும். அரசுக்கு வருமானம் தேவை என்பதுடன் வருமானம் உழைப்பவர்களை தேவையற்ற விதத்தில் பாதிப்படையச் செய்ய கூடாது. பொதுமக்களுக்கும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கும் கூடுதலான பாதிப்பு ஏற்படாத வகையில் இது அமைதல் வேண்டும்.

பாராளுமன்றத்தில் மிகச் சிரமத்துடன் அங்கீகரித்த காணாமற் போனோர் பற்றிய அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டம், நாட்டைப் பிரிப்பதற்கான மற்றுமொரு வேலையா எனும் குற்றச்சாட்டு உள்ளது. இதன் மூலம் இராணுவ வீரர்கள் தண்டிக்கப்படுவார்களா?

காணாமற் போனோர்கள் பற்றிய அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களை பார்க்கும்போது அவர்கள் இந்த நாட்டு தேசிய அரசியலில் எங்கு உள்ளார்கள் என நான் சிந்திக்கின்றேன். எல்லா பிரச்சினைக்கும் ஆரம்பம், மத்தி, முடிவு உண்டு. காணாமற் போனோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டம் பற்றி அல்ல நாம் நோக்க வேண்டும். இதன் ஆரம்பம் எது என்பது தொடர்பாகவே நாம் நோக்க வேண்டும். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஊடாக எம்மிடம் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகளே இதன் ஆரம்பமாகும். பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டது ஏன் என நாம் அறிவோம். இப் பிரேரணைகளுக்கு முகம் கொடுக்க முடியாமை காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி இரண்டு ஆண்டுகள் மீதமிருந்த நிலையிலும் தேர்தலை நடாத்தினார்.

2015 ஆம் ஆண்டில் அரசாங்கம் என்ற ரீதியில் எதிர்நோக்கும் பாரதூரமான பிரச்சினைகளாக 9 இலட்சம் கோடி ரூபா கடன் சுமை மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஊடாக் ஊடாக எம்மிடம் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகள் காணப்பட்டன. ஆகவே தான் தேர்தலுக்கு சென்றார்கள். சோதிடக்காரர்கள் சொன்னதற்காக அல்ல. அப்போது இருந்த அரசாங்கத்தின் முக்கிய ஒரு நபர் என்ற ரீதியில் 2015, 2016ஆம் ஆண்டளவில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடம் என்பதை நாம் அறிந்திருந்தோம். இந்த 9 இலட்சம் கோடி ரூபா கடனை அன்று நாம் அறிந்து வைத்திருந்தோம்.

2014ஆம் ஆண்டில் இதுபற்றி நிதி அமைச்சின் பிரதானிகள் தனிப்பட்ட முறையில் என்னிடம் கூறினார்கள். நடைபெற உள்ள தேர்தலின் பின்னர் நாம் இப்பதவியில் இருக்க மாட்டோம் என கூறினார்கள். 2015ல் தேர்தல் நடத்தப்படாவிடின் அடுத்த ஆண்டு நவம்பர் வரை இந்த நாட்டு ஜனாதிபதியாக இருந்திருக்க வேண்டியவர் முன்னாள் ஜனாதிபதி அவர்களாகும். இரண்டு ஆண்டுகள் அதிகாரத்தில் இருக்க சந்தர்;ப்பம் இருந்தும் தேர்தலை நடாத்தியதற்கான காரணம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் ஊடாக எம்மிடம் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகளுக்கு முகம் கொடுக்க முடியாமை மற்றும் பாரிய பொருளாதார நெருக்கடி ஆகியனவாகும்.

நாம் பதவிக்கு வந்ததன் பின்னர் புதியதொரு அரசியலமைப்பினை உருவாக்குவதாக சர்வதேசத்திடம் கூறினோம். மனித உரிமைகள், அடிப்படை உரிமைகளை பலப்படுத்துவதாகக் கூறனோம். நீதிமன்றத்தை சுதந்திரமாக்குவதாகக் கூறினோம் அத்தோடு அதனை பக்கசார்பற்றதாக ஆக்குவதாக கூறினோம். நாட்டின் நீதிமன்ற முறைமை பாதிக்கப்பட்டிருந்த விதம் அனைவரும் அறிந்ததே. 2015 ஜனவரி 09ஆம் திகதி நான் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அப்போது இந்த நாட்டின் நீதித்துறையில் அதி உயர் பதவி வகித்த பிரதானி என்னை சந்தித்து கூறியவை பற்றி ஆச்சரியமடைகின்றேன். நீதித்துறையின் பிரதான நபரா இவ்வாறு கதைக்கின்றார் என அப்போது நான் சிந்தித்தேன். அங்கு கதைத்ததைப் பற்றி நான் கூறவில்லை. என்றோ ஒருநாள் அதுபற்றிக் கூறுவேன்.

ஜனநாயகமற்ற சுதந்திரமற்ற 18வது அரசியலமைப்பு திருத்தத்துடன் ஒரு சர்வாதிகாரத்தை நோக்கிப் பயணிக்கும் ஒரு நாடாகவே அன்று எமது நாட்டை முழு உலகும் நோக்கியது. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டது எனும் குற்றச்சாட்டுடன் மிகப் பாரதூரமான ஒரு நிலை காணப்பட்டது. இந்நிலைமைகளிலேயே சர்வதேச யுத்த நீதிமன்றம் மின்சாரக் கதிரை என்பன பற்றி மேடைகள் அதிரும் வண்ணம் கூச்சலிடத் தொடங்கினார்கள்.

ஆயினும் பதிய அரசாங்கம் பதவியேற்று, நாம் தேர்தல் பிரகடனத்தில் வழங்கிய விடயங்கள் மற்றும் சர்வதேசத்திற்கு சமர்ப்பித்த விடயங்கள் தொடர்பாக, சர்வதேசம் எம்மைப்பற்றி சாதகமான மனோ பாவத்துடன் நோக்கினர். 19 வது அரசியலமைப்பு திருத்தத்தினை நாம் பாhளுமன்றத்தில் நிறைவேற்றினோம். விசேடமாக பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு மூன்றில் இரண்டு அதிகாரம் இருந்த பாராளுமன்றத்தில் நாம் 19வது அரசயலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றினோம்.

19வது அரசியலமைப்பு திருத்தத்தின் பின்னர், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் முதல், உலகின் ஜனநாயகத்தை போற்றும் அனைத்து நாடுகளும் எம்மை நன்நோக்கத்துடன் பார்க்கத் தொடங்கினர். பிரதானமாக நீதிமன்றத்தின் நடு நிலைமைக்காக, இந்நாட்டின் சிறுபான்மை புத்திஜீவியை நாம் அப்பதவியில் அமர்த்தினோம். அவ்வாறான இடங்களை நாம் சீர் செய்து வருகிறோhம். இதன் விளைவாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முன்னைய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட இருந்த ஐக்கி நாடுகளின் மனித உரிமைகள் பேவையின் பல பிரேரணைகள் இலகுவாக்கப்பட்டது. அதாவது இதனைவிட பாரதூரமான பிரேரணைகள் அவர்களிடம் காணப்பட்டது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றியடையாது இருந்திருப்பின் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைகளில் இருந்த விடயங்கள் இதனைவிட மாறுபட்டதாக இருந்திருக்கும். அப்போது இருந்த எமது அரசாங்கத்திற்கு எதிராக தடைகள் விதிக்கப்பட்டிருந்தது. எமது மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருந்தது. தைத்த ஆடைக் கைத்தெதாழில் தொடர்பான வரி நிவாரணம் அகற்றப்பட்டு இருந்தது. அண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் மீன் ஏற்றமதிக்கான தடையை நீக்கியது. அவர்களுக்கு தேவையான மீன்கள் தற்போது எம்மிடம் இல்லை. எமது ஆட்சியில் முன்னர் இருந்த அரசாங்கத்திற்கு எதிராக வர இருந்த பிரேரணைகள் வரவில்லை என்பதை நாம் தெளிவாகக் கண்டோம். அது மட்டுமல்ல, சென்ற ஆண்டு மார்ச் மாதம் வரவிருந்த பிரேரணைகள் தொடர்பாக புதிய அரசாங்கம் என்ற ரிதியில் பணியாற்றுவதற்கு அவகாசம் தருமாறு நாம் கோரினோம்.

நாட்டில் ஜனநாயகம், சுதந்திரம் மனித உரிமைகள், அடிப்படை உரிமைகளை பலப்படுத்துவதற்கான அடிப்படையை உருவாக்குவதற்கு அவகாசம் கோரினோம். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் எமது கோரிக்கைகளை நிறைவேற்றியது. கடந்த மார்ச் மாதம் கொண்டு வருவதற்கு இருந்த பிரேரணையை செப்டெம்பர் மாதத்திற்கு பிற்போடுமாறு நாம் கூறினோம். ஆகவே செப்டெம்பர் மாதமளவில் கூறப்பட்ட சர்வதேச யுத்த நீதிமன்றமும் இல்லை. மின்சாரக் கதிரையும் இல்லை, பொருளாதார தடையும் இல்லை.

நாம் பதவி ஏற்காது இருந்திருப்பின் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஜயிக்கா என்பன இங்கு வந்திருக்காது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினூடாக கொண்டு வரப்பட்ட இப்பிரேரணைகள் ஏற்கனவே வரவிருந்த பிரேரணைகளைவிட மிகவும் இலகுவாக்கப்பட்டு நெகிழ்வுதன்மையுடைய பிரேரணைகளாக மாற்றமடைந்தது.

நாம் கடந்த 11ஆம் திகதி காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் பற்றிய சட்ட மூலத்தை சமர்ப்பித்தோம். அதனை நான் சமர்ப்பித்தேன். பிரதமரும் எமது இரண்டு பிரதான கட்சிகளும் கலந்துரையாடி அதில் பல திருத்தங்களை மேற்கொண்டோம். அவ்வாறு செய்துதான் நாம் இதை அங்கீகரித்தோம்.

அப்போது வந்த விமர்சனங்களை நான் கண்டேன். நேற்று பாராளுமன்றத்தின் எதிரே ஒரு சிலர் நிலத்தில் உட்கார்ந்து கூச்சலிடுவதை நான் கண்டேன். ஆகவேதான் இப்பிரச்சினையின் ஆரம்பம், மத்தி, முடிவு என்பவற்றை புரிந்துகொள்ள வேண்டுமென நான் கூறினேன். கூச்சலிடும் இவர்களுக்கு ஆரம்பமும் இல்லை மத்தியும் இல்லை முடிவும் இல்லை. இந்நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு கூச்சலிடும் நபர்களுக்கு நான் அழைப்புவிடுக்கின்றேன்.

விசேடமாக இந்த நாட்டின் சிங்கள பௌத்த மக்களை தூண்டிவிட வேண்டாம், தவறாக வழிநடத்த வேண்டாம். பௌத்த தேரர்களுக்கு இந்த சட்டம் தொடர்பாக பிழையாக விளக்கம் அளிக்க வேண்டாம். நாம் அனைவரும் இந்த நாட்டை நேசிக்கின்றோம் என நான் மிகத் தெளிவாகக் கூறுகின்றேன். முன்னைய அரசாங்கத்திலும் இது போன்ற ஓர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான பிரேரணைகள் முன்வைக்கப்பட்ட போதும் சட்ட மூலம் முன்வைக்கப்பட்ட போதும் அடிக்கடி ஒருசில பிரச்சினைகள் எழுந்தமையால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும். இது 88,89 ஆம் ஆண்டுகளில் காணப்பட்ட ஒரு நிலைமை அல்ல. நீதிமன்ற செயற்பாட்டுக்கு உட்படுத்துவதற்கான சாத்தியம் இங்கு இல்லை.

அதற்கு எதிராக கதைப்பவர்கள் இது படையினருக்கு எதிரான ஒன்று என இதனைக் காட்டுவதற்கு முயற்சிக்கின்றனர். கடந்து காலங்களில் இந்த நாட்டில் பல்வேறு வகையான காணாமல்போதல் சம்பவங்கள் இடம்பெற்றன. எமது நாட்டின் முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திலும் பல்வேறு காணாமல்போதல் சம்பவங்கள் இடம்பெற்றன. எல்.ரீ.ரீ.ஈ இவர்களை கொலை செய்திருக்கலாம். மறைத்து வைத்திருக்கலாம் அல்லது கொண்டு சென்றிருக்கலாம் காணாமல் போயிருக்கலாம். இச்சட்டத்தின் மூலம் இவர்கள் பற்றியும் கண்டறிவதற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. எமது முப்படைகளைச் சேர்ந்த சுமார் 5000 இற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர். இச்சட்டத்தின் மூலம் காணாமல் போன எல்.ரீ.ரீ.ஈ இனர் பற்றியும், வடக்கைச் சேர்ந்த சாதாரண பொதுமக்கள் தொடர்பாகவும் மாத்திரம் கண்டறியப்படுவதில்லை. மாறாக அரச தரப்பினரான முப்படைகள் மற்றும் பொலிஸ் படையில் காணாமல் போனவர்கள் பற்றியும் கண்டறியப்படும். அத்துடன் 88, 89 காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் பற்றியும் கண்டறியப்படும்.

இத்துடன் கடந்த காலத்தில் இந்த நாட்டில் காணாமல் போனவர்கள் தொடர்பான ஏனைய அறிக்கைகளும் காணப்படுகிறது. வெள்ளைவான் கலாசாரத்தின் மூலம் ஊடகவியலாளர்கள், சாதாரண பொதுமக்கள் பலர் காணாமல் போகச் செய்யப்பட்டனர். அவர்கள் அனைவர் தொடர்பாகவும் இந்த அலுவலகத்தினால் நடவடிக்கை மேற்கொள்ள முடியும். இவர்கள் கூறுவது போன்று இங்கு இராணுவ வீரர்கள் வேட்டையாடப்பட மாட்டார்கள் என்பதை மிகத் தெளிவாகக் கூறுகிறேன். எம்முடன் கலந்துரையாடலுக்கு வருமாறு, இதற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு முகம் கொடுக்க இயலாததன் காரணமாகவே தேர்தலுக்குச் சென்றார்களென நான் ஏற்கனவே கூறினேன்.

அரசாங்கம் என்ற வகையில் தற்போது நாம் இதற்குமுகம் கொடுக்கின்றோம். தயவுசெய்து தமது மாற்று யோசனைகளை முன்வைக்குமாறு எதிர்ப்பு தெரிவப்பவர்களுக்கு நாம் கோரிக்கைவிடுக்கின்றோம். மனித உரிமைகள் தொடர்பாக கொண்டுவரப்பட்ட இப்பிரேரணைக்கு நாடு என்ற ரீதியில் நாம் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

இதற்குரிய மாற்று யோசனைகளை முன்வைக்குமாறு அவர்களுக்கு சவால் விடுக்க உங்களால் முடியுமல்லவா?

வெறுமனே கூச்சலிடுவதற்குப் பதிலாக மாற்று யோசனைகளை முன்வைப்பது அவர்களது பொறுப்பும் கடமையும் ஆகும். மலசல கூடத்தில் செய்யும் வேலையை சாப்பாட்டு மேசையில் செய்யவேண்டாமென சபாநாயகர் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அவர்கள் அதைத்தான் செய்கின்றார்கள். இவ்வாறு கூச்சலிடும் ஒரு சிலரில் மார்க்சிஸவாதிகளும் உள்ளனர். மார்க்சிஸம் பற்றி எனக்கும் ஓரளவு தெரியும். ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதற்கான கோட்பாடுகள் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கௌரவ ஜனாதிபதி அவர்களே. பாராளுமன்றத்தில் இச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட முன்னர் பாராளுமன்றத்தின் மேற்பார்வைத் தெரிவுக்குழுவில் இச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டது. கௌரவ தினேஷ் குணவர்தன, கௌரவ வாசுதேவ உள்ளிட்ட அனைத்து கட்சிகளதும் உறுப்பினர்கள் இக்குழுவில் இருந்தார்கள். ஒவ்வொரு பிரிவாக ஆராயப்பட்டது. வாசுதேவ அவர்கள் மாத்திரம் இரண்டு திருத்தங்களை முன்வைத்ததுடன் அரசாங்கம் அதனை ஏற்றுக்கொண்டது. இச்சந்தர்ப்பத்தில் கோட்பாடு தொடர்பாக எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை.

ஜனாதிபதி அவர்களே! இச்சந்தர்ப்பத்தில் ஒரு சட்டப் பிரச்சினை எழுகிறது. திருமணம் முடித்த ஒரு தம்பதியினருள் ஒருவர் காணாமல் போகுமிடத்து குறிப்பிட்ட ஒருசில காலம் கடந்ததன் பின்னரே மீண்டும் மணமுடிக்க முடியுமென சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறுதான் சொத்துக்கள் விடயத்திலும். அவ்வாறாயின் இவ்வாறான ஒரு முறையின்கீழ் இக்கால எல்லை குறிப்பாக இனங்காணப்பட்டதன் பின்னர் சட்டரீதியான உரிமை கிடைக்கப் பெறுகிறது. அப்படி இல்லாது விடின் அவர்கள் சட்டரீதியான உரிமையைப் பெறுவதற்கு எத்தனை ஆண்டுகள் செல்லும்? அது மட்டுமல்ல சொத்துக்கள் தொடர்பான சட்டத்தின் மூலமும் இதே பிரச்சினை எழுகின்றது. ஆகவே எவரேனும் ஒருவர் காணாமல் போயிருந்து இன்று உயிருடன் இல்லை என்ற சான்றிதழ் கிடைக்கப் பெறல் பெரும்பாலானவர்களுக்கு ஒரு பிரச்சினையாக உள்ளதென நான் நினைக்கிறேன். இங்கு வடக்கு தெற்கு என வித்தியாசம் இல்லை.

இதை எதிர்ப்பவர்கள் இந்த நாட்டில் உள்ள சிங்கள பௌத்த மக்கள் சார்பாகவே கதைக்கின்றனர். தேர்தலை நோக்காக கொண்டு இவ்வாறு செய்கின்றனர். ஆனால் நான் தேர்தலை நோக்கமாகக் கொண்டு கதைக்கும் ஒரு ஜனாதிபதி அல்ல. இப்பிரச்சினையை நன்றாக விளங்கிக் கொண்டுதான் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வேலைத்திட்டமொன்றை நாம் முன்னெடுத்துள்ளோம். இந்த நாட்டில் யுத்தம் நிலவிய 30 ஆண்டு காலத்தில் முன்னைய அரசாங்கங்கள் மொத்தம் ஏழு மாகாணங்களிலேயே பணியாற்றியது. இரண்டு மாகாணங்கள் கைவிடப்பட்டிருந்தது.

நாம் தற்போது ஒன்பது மாகாணங்களில் பணிபுரிகின்றோம். ஆகவே இந்த ஏழு மாகாணங்களில் உள்ள வாக்குகளை விடவும் நான் எப்போதும் கூறுவதைப் போல் விசேடமாக சிங்கள பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஏழு மாகாணங்களில் அவர்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழவேண்டுமாயின் வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் பிரச்சினைகள் பற்றி நாம் புரிந்துகொண்டு செயற்படல் வேண்டும். ஒன்பது மாகாணங்களும் மக்களது பிரச்சினைகளை விளங்க வேண்டும். ஒன்பது மாகாணங்களிலுமுள்ள மக்களுக்கான சமூக நீதி நிலை நாட்டப்படல் வேண்டும. ஒன்பது மாகாணங்களிலும் உள்ள மக்களுக்கு சுதந்திரம் மற்றும் ஜனாநாயக உரிமை வழங்கப்படல் வேண்டும்..

ஒன்பது மாகாணங்களுக்கும் சமநிலையான ஓர் அபிவிருத்தி வழங்கப்படல் வேண்டும். ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பதாம் ஆண்டுகளில் இருந்து அதிகாரத்திற்கு வந்த அரசாங்கங்கள் கடந்த 68, 69 ஆண்டுகளில் வடக்கிற்கு எத்தனை அமைச்சுப் பொறுப்புக்களை வழங்கியுள்ளது? அப்பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் எழுவதற்கு இவைகளே காரணம்.

ஜனாதிபதி அவர்களே. நாம் இதிலிருந்து சற்று விலகிச் செல்வோம். ஏனெனில் கதைப்பதற்கு பல விடயங்கள் உள்ளன. தற்போது ஒவ்வொரு வாரமும் கதைப்பதற்கு ஏதாவதொரு புதிய தலைப்பு உருவெடுக்கிறது. மக்களின் எதிரிகளான அரசியல்வாதிகள் தான இவ்வாறு கூறுகிறார்கள் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார். அனுமான் பாலம் பற்றி கதைக்கின்றனர். நீங்கள் அதை நிராகரித்துள்ளீர்கள். ஆயினும் இது பற்றியும் குறிப்பிட வேண்டும். அதேபோன்று படைவீரர்கள் கைது செய்யப்பட்டு எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அனுமான் பாலம் பற்றியும் குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி படைவீரர்கள் தடுத்து வைத்திருப்பது பற்றியும் முதலில் குறிப்பிடமுடியுமா?

நாம் சிறு வயதாக இருந்து காலத்திலும் அனுமான் பாலம் பற்றி கேள்விப்பட்டுள்ளோம். அப்போதும் இது பற்றிப் பேசப்பட்டது. தென் இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதை நோக்கமாகக் கொண்டு தேர்தல் மேடைகளில் தலை மன்னாருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலம் தொடர்பாக பேசப்பட்டது. இலங்கைக்கு செல்வதற்குரிய பாலம் அமைத்து இந்தியாவை தொடர்புபடுத்துவதாகக் கூறப்பட்டது. அது மாத்திரமல்ல இலங்கையுடன் இந்தியாவை தொடர்புபடுத்துவதற்கு இவ்வாறான ஒரு அமைக்கப்பட வேண்டுமென தேர்தல் காலங்களில் தென் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இந்திய லோக் சபையிலும் தெரிவித்தார்கள். சர்வதேச நிதி நிறுவனம் ஒன்றிலிருந்து நிதியினைப் பெற்று இன்று அல்லது நாளைக்கே இப் பணிகளைத் தொடங்கப் போவதாக ஒரு சிலர் கூறியிருந்தார்கள். ஆயினும் நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடமும் 08 மாதங்களும் ஆகியுள்ள நிலையில், இந்தியப் பிரதமர் மோடியை சர்வதேச மாநாடுகளின் போதும் அவர் இங்கு வந்தபோதும் மொத்தம் ஐந்து அல்லது ஆறு தடவைகள் நான் சந்தித்துள்ளேன்.

அவர் இந்தப் பாலம் பற்றி ஒரு வார்த்தைகூட என்னுடன் கதைத்திருக்கவில்லை. எந்த விதமான கலந்துரையாடலோ எந்தவிதமான எழுத்தாவணங்களோ இல்லை. இது முற்றிலும் பொய்யானதாகும். இது அடிக்கடி பொதுமக்களை தவறான வழியில் திசை திருப்புவதற்கு மேற்கொள்ளும் விடயங்கள் ஆகும்.
மற்றையது படைவீரர்களை வேட்டையாடுதல் எனக் கூறுவது, கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களின் போது, முக்கியமாக ஊடகவியலாளர் பிரதீப் எக்னலிகொட காணாமல் போனமை பற்றி காணாமல் போனவர்களை பற்றிக் கண்டறியும் அலுவலகத்தினூடாக விசாரணை மேற்கொள்வதை யாராவது எதிர்ப்பார்களா என நான் வினவுகிறேன். ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை. இவ்வாறான காணாமல் போதல் பற்றி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச ரீதியாக முன்னைய அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுக்கப்பட்டது. தேசிய ரீதியிலும் இந்த நாட்டு மக்கள் போராட்டங்களை நடாத்தினார்கள். இவ்வாறு காணாமல் போனவர்கள் எங்கே, இறந்தவர்கள் எங்கே என்று இப்பட்டியல் நீண்டு செல்கிறது. அப்போதைய அரசாங்கம் இவற்றுக்கு தீர்வு வழங்காதமையால் அவர்கள் சர்வதேசம் சென்றார்கள். ஜெனீவா சென்றனர்.

இவர்கள் காணாமல் போயுள்ளார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லையென அங்கு சென்று கூறினார்கள். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினூடாக கொண்டுவரப்பட்ட பிரேரணைகளுக்கு இவ்வாறான பின்னணியும் காரணமாக அமைந்தது. நூற்றுக்கணக்காண காரணங்களுள் இவையும் காரணங்களாக இருந்தது. நாம் ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் மோசடிகள் மாத்திரமன்றி, காணாமல்போதல் மற்றும் படுகொலைகள் பற்றியும் பக்கச் சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்வதாக நாம் எமது தேர்தல் பிரகடனங்கள் மூலம் மக்களுக்கு வாக்களித்தோம்.

நாம் பதவிக்கு வந்த பின்னர் இந்நிறுவனங்கள் விசாரணைகளை மேற்கொள்ளத் துவங்கியது. காணாமல் போனவர்களதும் படுகொலை செய்யப்பட்டவர்களதும் உறவினர்கள் முறைப்பாடுகளைச் செய்தார்கள். இவை தொடர்பாக ஏற்கனவே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அவை இடைநடுவில் ஸ்தம்பித்துப் போயிருந்தது. புதிய அரசாங்கம் என்ற ரீதியில் இந்த விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நாம் இரகசியப் பொலீசாரிடமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமும், ஏற்புடைய நிறுவனங்களிடமும் நாம் கூறினோம். இவ் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் போது விசாரிப்பதற்காக ஒரு சிலர் கைது செய்யப்படுகின்றனர்.

இதில் அரசாங்கம் தலையிடுவதில்லை. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஒரு சுயாதீன நிறுவனமாகும். சுதந்திரமாக பணியாற்றுவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாய்பளிக்க வேண்டும். சுதந்திரமாக பணியாற்றுவதற்கு பொலிஸ் திணைக்களத்திற்கு வாய்பளிக்க வேண்டும். 19 ஆவது திருத்தத்தின் மூலம் ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டால் அவற்றுக்கு சுதந்திரமாக பணியாற்ற வாய்ப்பளிக்க வேண்டும். முன்னைய ஜனாதிபதி 18 ஆவது திருத்தத்தை அங்கீகரித்து பிரதம நீதியரசர் முதல் அனைத்து நீதிபதிகளையும் நியமித்தார். அனைத்து ஆணைக்குழுக்களையும் நியமித்தார். சட்டமா அதிபரை நியமித்தார். பொலிஸ் மா அதிபரை நியமித்தார். இவ் அனைவரையும் நியமித்துவிட்டு அவர்களுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து தனக்குத் தேவையானவாறு செயற்படும்படி கட்டளை பிறப்பித்தார். தெளிவாகவே தற்போது அவ்வாறில்லை.

இவ்வாறு இடம்பெற்ற காணாமல்போதல் மற்றும் கொலைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை மேற்கொள்ளும் போது ஒரு சில படையினர் தொடர்பாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்று விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இதனை படைவீரர்களை வேட்டையாடுதல் எனக் கூற முடியாது. இந்த நாட்டில் உள்ள முப்படைகள் மற்றும் பொலிசார்களின் எண்ணிக்கை சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகம்.

ஏதேனும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் போது அரச உத்தியோகத்தர், வியாபாரிகள், படையினர் மற்றும் பொலிஸார் எனப் பார்க்க முடியாது. அவ்வாறு சிறப்புரிமைகள் பெற்ற எவரும் இல்லை. ஏதேனும் ஒரு குற்றம் தொடர்பாக, ஏதேனும் பாரதூரமான செயல் தொடர்பாக அரசியலமைப்பின் கீழ் அல்லது சட்டத்திற்கமைய சுதந்திரமாக நிறுவனங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
இவ்விசாரணைகளின் மூலம் படைவீரர்களுள் எவரேனும் ஒருவர் குற்றவாளியாகக் கருதப்படுமிடத்து ஒட்டுமொத்த படையினருக்கும் இக்குற்றச்சாட்டிலிருந்து விடுபட முடியும். இது படையினரின் நன்மதிப்பிற்கு ஏதுவாய் அமைகிறது. படையினர் ஒருவர் இராணுவ சட்ட திட்டங்களுக்கும், நாட்டின் சட்ட திட்டங்களுக்கும் முரணாக செயற்பட்டு அவர் இராணுவத்திலிருந்து நீங்கும் பட்சத்தில் முற்று முழுதாக இராணுவம் தூய்மைப்படுத்தப்படும். இராணுவத்தின் கௌரவம் பாதுகாக்கப்படும்.

பௌத்த பிக்குகள் கைது செய்யப்படுவதாக அரசாங்கத்தின் மீது ஏன் குற்றம் சுமத்தப்படுகிறது?
விகாரைகளில் தர்ம போதனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பௌத்த தேரர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. தானத்திற்கு சமூகமளிக்கும் போது கைது செய்யப்படவில்லை. பிரித் ஓதும் போது கைது செய்யப்படவில்லை. அவ்வாறு எதுவுமே நடைபெறவில்லை. ஒரு சில விசாரணைகள் மேற்கொள்ளப்படும் போது சந்தேகத்தின் பேரில் தேரர்களும் அகப்படுகின்றார்கள். அதன் போது விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானதாகும்.

இந்த அரசாங்கம் 2015 ஆம் ஆண்டில் எத்தனை தேரர்களை கைது செய்துள்ளதென அண்மையில் பாராளுமன்றத்தில் யாரோ ஒருவர் வினவியிருந்தார். அதற்கான பதில் 81 என இருந்ததாக ஞாபகம் உள்ளது. நீதிமன்றம் ஒன்றில் நுழைந்து குழப்பம் விளைவத்தமையினாலேயே இந்த 81ல் அரைவாசிக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார்கள். நீதிமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டுமென பொதுவாக அனைவருக்கும் தெரியும்.
\
நீதிமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டுமென பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நீதிபதி ஒருவர் எச்சரித்தமை எனக்கு நினைவிருக்கிறது. ஆகவே நீதிமன்ற செயற்பாடுகள் அனைவருக்கும் பொதுவானதாகும். அவ்வேளையில் அங்கு நடந்த ஒரு சம்பவத்தின் போது அவர்கள் நடந்து கொண்ட விதத்தினை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

தற்போது அரச நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்துவதற்கான ஆயத்தம் உள்ளதா? லிட்ரோ காஸ், துறைமுகங்கள், லங்கா ஹொஸ்பிடல் ஆகியன தனியார் மயப்படுத்தப்படுமா?

தனியார் மயப்படுத்தல் எனும் பிரச்சினையின் போது, அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் பல அரச நிறுவனங்களில் 15-20 ஆண்டுகளாக எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல் மாத்திரம் இடம்பெறும் ஒரு நிலைமை காணப்படுகிறது. சில நிறுவனங்களில் ஊழியர்கள்கள் வேலைக்கு வருவதில்லை. மாதாந்தம் சம்பளம் பெறுவதற்கு வருகின்றனர்;. இவ்வாறான நிறுவனங்கள் பற்றி அண்மையில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பாக தெளிவான ஒரு தீர்மானம் மேற்கொள்ளப்படும். காரணம் இது அரசுக்கு பாரிய ஒரு சுமையாக உள்ளது. இவ்வாறான நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதில் தவறில்லை. ஆயினும் இலாபம் உழைக்கும் நிறுவனங்களான லங்கா ஹொஸ்பிடல், லிட்ரோ காஸ் போன்ற நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்படவுள்ளதாக அண்மையில் பத்திரிகைகளில் நான் கண்டேன். இவை அதிகளவு இலாபம் உழைக்கும் நிறுவனங்கள் என்பதை நான் தெளிவாக கூறுகிறேன். பத்திரிகைகளுக்கு இந்த பட்டியலை யார் வழங்கினார்களென எனக்குத் தெரியாது. லங்கா ஹொஸ்பிடல், லிட்ரோ காஸ் மற்றும் இது போன்று அரசுக்கு உயர்ந்த வருமானத்தை ஈட்டித் தரும் நிறுவனங்களை ஒருபோதும் தனியார் மயப்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது.

தற்போது அரசியலமைப்பு சதித் திட்டம் பற்றி கதைக்கப்படுகிறது. மறுபடியும் நாட்டைப் பிரிப்பதற்கான ஓர் அரசியலமைப்பை அரசாங்கம் கொண்டுவரப் போகிறது எனப் பேசப்படுவது தொடர்பாக உங்களது கருத்து யாது?

புதியதோர் அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாக அரசாங்கம் மக்களது கருத்தை அறிவதற்கான குழுவை நியமித்தது. இக்குழுவின் தலைவராக திரு லால் விஜேநாயக்க அவர்கள் செயற்பட்டார். நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் வாழும் மக்கள், அறிஞர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து தராதரங்களிலுமுள்ள நபர்களைச் சந்தித்து புதிய அரசியலமைப்பைத் தயாரித்தல் தொடர்பான கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கு இவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. அக்குழு தனது பணியைச் செய்தது. மக்களது கருத்துக்களை அறியும் குழுவினால் அறிக்கை தயார் செய்யப்பட்டது. இது பிரசித்தப்படுத்தப்பட்டது. அவ் அறிக்கை பாராளுமன்ற சபா பீடத்தில் வைக்கப்பட்டது. எனக்கும் கிடைக்கப் பெற்றது. இதில் ஒவ்வொரு நபர்களினதும் கருத்துக்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டை வேற்று மத நாடாக மாற்றுவது தொடர்பான ஒரு கதை இதில் உள்ளது. ஓரினச் Nசுர்க்கை பற்றிய ஒரு கதை இன்னோரிடத்தில் உள்ளது. இவை பொது மக்கள் குழுவிடம் தெரிவித்தவைகள். இது அவர்களின் கருத்து. இது அரசியலமைப்பு அல்ல. இது அரசியலமைப்பின் வரைவும் அல்ல. இதில் மக்களது கருத்துக்கள்தான் உள்ளது. அரசியலமைப்பினைத் தயாரிக்கும் போது அரசியலமைப்பு தொடர்பான நிபுணர்கள், சட்ட வல்லுனர்கள் மற்றும் அரசியல் ரீதியாக பாராளுமன்றத்தில் உள்ள நபர்களை உள்ளடக்கிய சுமார் மூன்று குழுக்கள், அரசியலமைப்பு சபை என்ற ரீதியில் கூடுவார்கள். இவ்வாறுதான் இது நடைபெறும். இப் புத்தகத்தைப் பற்றியே இவ்வாறான கதைகள் பேசப்படுகிறது. இப்புத்தகத்தைக் காட்டி சமூகத்தை வழி கெடுக்கின்றனர். இது மக்களது கருத்துக்கள் என்பதை தெளிவாகநான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

அரசியலமைப்பில் உள்ளடக்க கூடியதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான ஒரு சில விடயங்கள் இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் ஒரு சில விடயங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் ஒரு நாட்டின் அரசியலமைப்பைத் தயாரிக்கும்போது அந்த நாட்டின் கலாசாரம் மிகப் பலம் வாய்ந்ததாக உள்ளது. ஒரு நாட்டின் அரசியலமைப்பு, சட்டம் ஆகியவற்றிலும் மேலாக பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள் மற்றும் கலாசாரம் என்பன மிகப் பலம் வாய்ந்ததாகும். புதியதோர் அரசியலமைப்பினைத் தயாரிப்பதற்கு காரணமாய் அமைந்த விடயங்கள் உள்ளன. தேர்தல்முறை வேறுபடுகிறது. தேர்தல்முறை மாறும் போது கட்டாயம் தற்போதுள்ள அரசியலமைப்பு மாற்றமடைய வேண்டும். புதிய தேர்தல் முறையோடு இணைந்ததாக அதற்கு ஏற்றவாறு புதிய அரசியலமைப்பு காணப்படல் வேண்டும். இவ்வாறான பல விடயங்கள் உள்ளன.

ஜனாதிபதிப் பதவியின் அதிகாரங்களை நீக்குவது தொடர்பாக தேர்தல் வெளியீட்டில் நான் குறிப்பிட்ட விடயங்கள் நிறைவேற்றப்படும் போது அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படல் வேண்டும். அபிவிருத்தியடைந்த உலகத்தில் மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள், சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றுடன் புதிய கோட்பாட்டு ரீதியான கருத்துக்கள் கட்டியெழுப்பப்படும் போது மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் என்பவற்றுக்காக புதியதோர் அரசியலமைப்பு உருவாக்கப்படல் வேண்டும்.
ஜனாதிபதி அவர்களே. முழுமையான ஓர் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாகவா அரசாங்கம் கவனம் செலுத்துகிறது…..

இது அரசியலமைப்புத் திருத்தம் அல்ல, மாறாக புதியதோர் அரசியலமைப்பு ஆகும். அந்த அரசமைப்பு பற்றி நீண்டதொரு வரலாறு உள்ளது. ஆரத்தி தொள்ளாயிரத்து பதினைந்துகளில் சிங்கள முஸ்லிம் கலவரம். 40 ஆம் தசாப்தம் முதல் தமிழ் சிங்கள கலவரம். இவ் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இவ்வாறான பாரதூரமான பிரச்சினைகள் எழுந்தது. சுதந்திரத்தின் பின்னர் முதற் தடவையாக திரு பண்டாரநாயக்க அவர்கள் திரு செல்வநாயகத்துடன் அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசினார்கள். அதேபோல் டட்ளி சேனாநாயக்க. அதன் பின்னர் திரு. ஜே.ஆர் ஜயவர்தன அவர்கள் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினைக் கொண்டு வருவதற்காக முழு நாட்டிலும் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்து இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். இவை அனைத்து நடவடிக்கைகளினதும் இறுதி விளைவாக யுத்தம் மென்மேலும் வலுவடைந்தது.

அதன்போது தற்போதுள்ள 78 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு பற்றி நாடுபூராக பேசப்பட்டது. 78ஆம் ஆண்டின் அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டுமென்ற கருத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் கொண்டிருந்தது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை காரணமாக 78ஆம் ஆண்டின் அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்ட தினத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அதற்கு எதிராக செயற்பட்டது. 78ஆம் ஆண்டின் அரசியலமைப்பிற்குப் புறம்பாக புதியதோர் அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாட்டின் போது முதற் தடவையாக அக்கட்சி கூறியது. இவ் இரு கட்சிகளும் தற்போது ஒரே கருத்தைக் கொண்டுள்ளது. புதியதோர் அரசியலமைப்பின் தேவை பற்றி முழு நாடும் கூறுகிறது.

இந்த நாட்டை ஆட்சி செய்யும் போது ஏழு மாகாணங்களாகக் கருதி கணக்கிட வேண்டாம். எப்போதும் ஒன்பது மாகாணங்களையும் கவனத்திற் கொள்ளல் வேண்டும். ஒன்பது மாகாணங்களின் தேர்தல்கள் பற்றி மாத்தரிம் கதைக்க கூடாது. 30ஆண்டு காலமாக எமதுநாட்டில் ஏழு மாகாணங்களின் ஆட்சி பற்றியே கதைக்கப்பட்டது. இன்று காணப்படுவது அவ்வாறான ஒரு நிலைமை அல்ல. ஆகவே நாடு என்ற வகையில் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள பிரச்சினைகளை விளங்கி உண்மையிலேயே மக்கள் சமாதானமாகவும் சுதந்திரமாகவும் வாழும் பலம் மிக்க பொதுவான நல்லிணக்க கொள்கையின் அடிப்படையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே புதியதோர் அரசியலமைப்பின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

ஜனாதிபதி அவர்களே, நீங்கள் கட்சியை ஒழுங்குபடுத்துகிறீர்கள். அரசாங்கத்தின் செயற்பாடுகளை கவனிப்பதில்லை என உங்களைத் தெரிவுசெய்தவர்களே குற்றம் சுமத்துகின்றனரே. இது உண்மையா?
மிகத் தெளிவாகவே நான் அதை நிராகரிக்கிறேன். அதில் எவ்வித உண்மையுமில்லை. என்றாலும் நாம் தேர்தல் பிரகடனத்தில் முன்வைத்த விடயங்களுக்கு ஏற்பவும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி தேர்தல் பெறுபேறுகளுக்கு அமையவும் ஒரு இணக்க அரசாங்கத்தை அமைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அத்தோடு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நான் பலவந்தமாகப் பொறுப்பேற்கவில்லையே. நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு 9 ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் 12ஆம் திகதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் கட்சியைப் பொறுப்பேற்குமாறு என்னிடம் கூறினார்கள். நான் கட்சியைப் பொறுப்பேற்றேன். அதேநேரம் சிலர் அதற்கு முட்டுக்கட்டையாகவுள்ளனர். உள்ளுராட்சி தேர்தல் வேற்பாளராக விண்ணப்பம் கோரியவர்களுக்கு கடிதம் அனுப்பினால் அவற்றை கிழித்தெறிகின்றனர்.

எரிக்கின்றனர். அப்படி கிழிப்பவர்கள், எரிப்பவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அல்லர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவர் ஒரு போதும் அப்படி கிழிக்கவோ, எரிக்கவோ முடியாது. அப்படிச் செய்வது கட்சியை கிழிப்பது கட்சியை எரிப்பது போன்றதாகும். எனவே ஒரு இணக்க அரசாங்கத்தை முன்னெடுக்கும் போது இரண்டு கட்சிகளினதும் தனித்துவத்திற்கு எந்தவித பாதகமும் இல்லை. அவ்விரண்டு அரசியல் கட்சிகளையும் அவர்களது கொள்கைகள், கோட்பாடுகளின் மீது கட்டியெழுப்புவதற்குப் பலப்படுத்தவேண்டும். பிரதான இரண்டு அரசியல் கட்சிகளும் பலவீனப்படுவது நல்லதல்ல.

சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையை எடுத்துக்கொண்டால் எத்தகைய குறைபாடுகள் இருந்தபோதும் என்னதான் பிரச்சினைகள் இருந்தபோதும் இந்த இரண்டு கட்சிகளும் ஆட்சி அமைத்து வந்துள்ளன. நாட்டில் யுத்தம் இருந்த போதும் கடினமானதொரு கட்டத்திற்கு முகம்கொடுத்துள்ளன. எனவே இங்கு தத்தமது கட்சிகளின் தனித்துவத்தை பாதுகாத்துக்கொண்டு கட்சியை வளப்படுத்தி முன்கொண்டு செல்லவேண்டும் என்பதை நாம் மிகவும் தெளிவாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இணக்க அரசாங்க அரசியல் எண்ணக்கருவின் பொது நோக்கம் எப்போதும் கட்சியே முதலிடத்தில் இருப்பதில்லை. முதலிடத்திலிருப்பது நாடும் நாட்டு மக்களுமாவர். அடுத்ததாகத் தான் கட்;சி. எனவே நாம் எல்லோரும் ஏதோ ஒருவகையில் அர்ப்பணிப்பை செய்தாக வேண்டும். ஐ.தே.க அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது வேறு எந்த கட்சியாக இருந்தாலும் எமது பொது நோக்கம் நாடும் நாட்டு மக்களுமாகும். நாளை இந்த தேசம் ஒரு சிறந்த தேசமாக இருக்க வேண்டும் என்பதாகும்.

நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பற்றி கேற்கிறேன். இப்போது கட்சி 65வது ஆண்டு நிறைவைக் கொண்டாடத் தயாராகிவருகிறது. அதேநேரம் இக்கட்சி இரண்டாகப் பிளவுபடப் போகின்றது என பேசப்படுகின்றது. 65வது ஆண்டு நிறைவின் பின்னர் கட்சி தொடர்பாக நீங்கள் இதனைப் பார்க்கிலும் வேறு ஏதாவது தீர்மானங்களை மேற்கொள்ளும் உத்தேசம் உள்ளதா?

65வது ஆண்டு நிறைவு விழாவினை குருணாகலையில் நடத்துவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவே தீர்மானித்துள்ளது. நாம் மிகவும் வெற்றிகரமான, பலம் வாய்ந்த அரசியல் பண்பாடுகள் நிறைந்த ஒரு ஆண்டு நிறைவு விழாவை நடாத்துவோம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எல்லா பாராளுமன்ற, மாகாண சபைகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் கட்சியின் யாப்பிற்கு அமைய அழைப்பு விடுக்கப்படும். எந்தவொருவருக்கும் தடைகள் கிடையாது.

இதற்கு மேலும் வேறு எவரும் வேறு ஏதேனும் கட்சி ஆண்டு நிறைவு விழாவை நடத்துகின்றார்களா என்பது எனக்குத் தெரியாது. அதுவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தானே. இன்னும் ஒன்றல்ல ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இன்னும் பத்து இருந்தாலும் எந்தப் பிரச்சினையுமில்லை. ஆனால் நாம் யாரையும் நீக்கவில்லை. நாம் எல்லோருக்கும் அழைப்புவிடுத்துள்ளோம். எனவே 65வது ஆண்டு நிறைவு விழாவுக்கு வருகைதருமாறே எல்லோருக்கும் கூறுகின்றோம். செப்டெம்பர் மாதம் 04ஆம் திகதி குருணாகலையில் நாம் ஒரு சிறந்த ஆண்டு நிறைவு விழாவை நடாத்துவோம்.

நீங்கள் கட்சியின் தீர்மானங்களை எடுப்பதுவும், நாட்டின் தீர்மானங்களை மேற்கொள்வதும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள் குறிப்பிடும் விடயங்களுக்கு ஏற்பவும் அவரது ஆலோசனையின் பிரகாரமாகவுமே என ஒரு குற்றச்சாட்டு உள்ளதா? மத்திய வங்கி ஆளுநர் நியமிக்கப்பட்ட விடயமும் அவர் குறிப்பிட்டதன் பிரகாரமாகும் என்றும் அவர் தான் இப்பெயரை முன்மொழிந்தார் என்றும் சமூகத்தில் பரவலாகப் பேசப்படுகின்றதே. அது அப்படியா?

அது முற்றிலும் பொய்யானதாகும். தற்போதிருக்கும் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களை நியமிக்கும் விடயம் சந்திரிகா குமாரதுங்க அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. குமாரசுவாமி அவர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் அடுத்தநாள் இது ஒரு நல்ல தீர்மானம் என சந்திரிக்கா அம்மையார் என்னிடம் தெரிவித்தார். இந்த தீர்மானத்தை நானும் விரும்புகிறேன். வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்தார். அது பற்றி அவர் எதுவும் அறிந்திருக்கவில்லை. சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க அவர்கள் சொல்வதன் பிரகாரமே நான் செயற்படுகிறேன் என்ற விடயம் ஒரு சிலருடைய திட்டமிட்ட பிரசாரமாகும். நான் அவரை சந்திப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தையும் சரியாக அமைத்துக்கொள்ளவில்லை என அவர் என்னிடம் குறைபட்டுக்கொண்டார். அப்படி அவரை அடிக்கடி சந்திப்பதற்கான வாய்ப்பும் எங்களுக்கு இல்லை.

எனவே இவை முற்றிலும் பொய்யான கூற்றுக்களாகும். கட்சியின் அண்மைய மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்களை மேற்கொண்டிருந்த சந்திர்ப்பத்தில் ஒரு ஆங்கிலப் பத்திரிகை என்னுடைய புகைப்படத்தையும் அதன் பின்னர் சந்திரிகா அம்மையாரின் புகைப்படத்தையும் பெரிதாக பிரசுரித்து நாட்டில் ஒரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த முயற்சிசெய்தனர்.

இது முற்றிலும் பொய்யானதாகும். அன்று அவர் அந்த மத்திய செயற்குழு கூட்டத்திற்கு வருகைதரும் போது அந்த ஒழுக்காற்று நடவடிக்கைகள் அனைத்தும் கலந்துரையாடப்பட்டு முடிந்தவிட்டது. அவர் தாமதித்தே வருகைதந்தார். அவர் வருகைதரும் போது நாம் கட்சியின் ஆண்டு நிறைவு விழா குறித்தே கலந்துரையாடிக் கொண்டிருந்தோம். ஒரு பிழையான கருத்தையே இதன் மூலம் ஏற்படுத்த முயல்கின்றனர். இது குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன். நாம் மிகவும் நற்புடனும் சுமுகமாகவுமே செயற்படுகிறோம். அவர் குறித்த மதிப்பு என்னிடம் உள்ளது. என்றாலும் இங்கு முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் முற்றிலும் போலியானவையாகும்.

உங்களது அரசாங்கம் பெரிய கள்வர்களை மட்டுமே பிடிக்கின்றது. சிறிய கள்வர்களைப் பிடிப்பதில்லை. கடந்த தசாப்தத்தின் போது உள்ளுராட்சி மட்டப் பிரதிநிதிகளுக்கு பாரிய அளவில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஊழல் மோசடிகள் குறித்தும் பேசப்பட்டது. இப்போது இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. இதற்கு என்ன காரணம்?.

இல்லை சாதாரணமாக மீன்பிடிக்கச் செல்பவர்கள் கூட நெத்தலி மீன்களைப் பார்க்கிலும் பெரிய பெரிய மீன்களை பிடிப்பதற்கே வலை வீசுகின்றனர். ஏன் அங்கு தானே பெறுமதியுள்ளது. எனவே இது போன்று இந்த நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் ஒரு விடயம் உள்ளது. பாரியளவில் ஊழல் மோசடிகள், களவுகளை செய்தவர்கள் தொடர்பில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். என்றாலும் அதேபோன்று நீங்கள் குறிப்பிட்ட கீழ் மட்டங்களில் உள்ளவர்கள் தொடர்பில் அவ்வாறான எந்தவித அழுத்தங்களையோ அறிவுறுத்தல்களையோ நாம் வழங்கியில்லை. குறித்த நிறுவனங்களே அந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. என்றாலும் இங்குள்ள பிரச்சினை என்னவென்றால் அந்த நிறுவனங்களில் உள்ள ஊழியர் குழாமினருடன் இந்த எல்லா விடயங்களையும் ஒரேயடியாக விசாரிப்பதில் கஷ்டங்கள் உள்ளன. எனவே அவர்கள் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும், அரசாங்கம் எதிர்பார்க்கும் அந்த பிரதான விடயங்களுக்கு முன்னுரிமையளித்துள்ளனர். அவை ஓரளவு முடிவடைந்ததன் பின்னர் அடுத்தவிடயங்களில் கவனம் செலுத்துவர்.

ஜனாதிபதி அவர்களே, ஊழல் மோசடிகளை மேற்கொண்டவர்கள் தொடர்பில் எடுக்கப்படும் பெரும்பாலான சட்டநடவடிக்கைகள் மிகவும் மந்த கதியிலேயே முன்னெடுக்கப்படுகின்றன. இது தொடர்பில் நீங்கள் திருப்தியடைகின்றீர்களா? சில விடயங்கள் நடைபெறுவதேயில்லை. சிலர் கைதுசெய்யப்படுகின்றனர். அடுத்த நாள் பிணையில் விடுவிக்கப்படுகின்றனர். உங்களுக்கு வாக்களித்தவர்களிடையே இது குறித்த ஒரு அதிருப்தியான நிலை உள்ளது. இதனை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா?

நாட்டில் சட்டம் உள்ளது. அரசாங்கத்திற்கென பண்பொழுக்கங்கள் உள்ளன. நாம்; இவற்றுக்கு ஏற்பவே செயற்படுகிறோம். அவ்வாறில்லாது வெறுமனே காட்டுச் சட்டத்திற்கு ஏற்ப செயற்படுவதோ சட்ட திட்டங்களை மதிக்காது செயற்படுவதோ, பொய்க் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதோ எங்களுடைய அரசாங்கத்தில் கிடையாது. எனவே நாம் அதனை மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அண்மையில் சிலர் ஒரு பாத யாத்திரையை மேற்கொண்டனர். முன்னைய ஆட்சியில் என்றால் கண்டியிலிருந்து கடுகண்ணாவை வரைக்கும்கூட வந்திருக்க முடியாது அடித்து விரட்டப்பட்டிருப்பர். அக்காலத்தில் சிலருக்கு ஏற்பட்ட நிலைமைகள் எனக்குத் தெரியுமல்லவா. எனவே எமது ஜனநாயக அரசியல் முறைமைக்குள் சிலர் சுதந்திரம் என்பதை எல்லை தாண்டி பயன்படுத்துவதையும் நாம் அறிவோம்.

இந்த எல்லா விடயங்களையும் எடுத்துக் கொண்டால் நாம் மிகவும் தூய்மையான ஒரு எண்ணத்துடன் செயற்படுகிறோம். எதிர்கட்சி என யாரும் இருப்பார்களானால் அந்த எதிர்கட்சியில் இருப்பவர்களும் நாடு தொடர்பிலும் மக்கள் தொடர்பிலும் மிகவும் அன்புடன் செயற்படுவதற்குத் தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறில்லாது அடுத்து வரவிருக்கும் தேர்தலை எதிர்பார்த்து கதைப்பதல்ல. நாம் ஒரு பாரதூரமான பொருளாதார நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளோம். சர்வதேச ரீதியாக எமக்கிருக்கும் பிரச்சினைகளை நாம் தீர்த்துக்கொள்ள வேண்டும். இவை எல்லாவற்றுடனும் நாம் எல்லோரும் மிகவும் சுமுகமாகவும் கூட்டாகவும் எமது நாடு எமது மக்கள் எமது தாய்நாடு என்ற மனநிலையுடன் நேர்மையாக செயற்படவேண்டும்.

அவ்வாறில்லாது குறுகிய அரசியல் நோக்கங்களின் அடிப்படையில், அதிகார மோகத்தில் செயற்படுவது எந்தப் பயனையும் தராது. அதிகாரத்திலிருந்த சிலருக்கு அது இல்லாமல் இருக்க முடியாது. எனவே அவர்கள் அதற்காக அங்கும் இங்கும் நடந்து திரிகின்றனர். அப்படியன்றி ஒரு நாடு என்ற வகையில் பொறுப்புடன் செயற்படவேண்டும்.

உள்ளுராட்சி தேர்தலை அடுத்த ஜனவரி மாதம் நடாத்துவதாக நீங்கள் வாக்குறுதி அளித்துள்ளீர்கள். அந்த வாக்குறுதியின் பிரகாரம் செயற்படுவீர்களா?\

ஆம் மிகத் தெளிவாக. இங்கு தேர்தல் ஆணையாளரின் ஆலோசனைக்கு ஏற்ப ஒரு குழு அமைக்கப்பட்டு தேர்தல் தொகுதிகளை நிர்ணயிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முன்னர் செய்யப்பட்டிருந்த விதம் குறித்து பல விமர்சனங்கள் இருந்தன. உண்மையில் அதில் பல பிழைகள் காணப்பட்டன. எனவே மிகவும் பக்கசார்பற்ற முறையில் நடுநிலையாக தொகுதிகளைப் பிரிக்கும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு அதன் பணிகளை முன்னெடுத்து வருகிறது.

முடிந்தளவு விரைவில் இப்பணிகளை நிறைவு செய்யுமாறு நாம் அவர்களுக்கு தெளிவாக கூறியுள்ளோம். இவ்வருடத்தின் நடுப்பகுதியில் நிறைவு செய்யுமாறு நாம் முன்பு கூறியிருந்தோம். என்றாலும் கிடைத்திருக்கும் முறையீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அப்படி செய்யக்கூடிய வாய்ப்புகள் இல்லை என அவர்கள் கூறினர். எனவே அடுத்தவருட ஆரம்பத்தில் எப்படியாவது இந்த தேர்தல் நடாத்தப்படவேண்டும் இப்பணிகளை விரைவில் நிறைவு செய்யுங்கள் என நாம் கூறியுள்ளோம். எனவே அக்குழுவின் பணிகள் நிறைவடைந்ததும் நாம் தேர்தலை நடாத்துவோம்.

இறுதியாக அண்மையில் நடைபெற்ற பாதயாத்திரை தொடர்பான உங்களது மதிப்பீடு என்ன எனத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அவர்கள் அரசாங்கத்தை அசைத்துவிடப் போவதாக கூறினர். மிக விரைவில் ஆட்சியைப் பிடிக்கப் போவதாகவும் கூறினர். அரசாங்கம் விரைவில் கவிழ்ந்துவிடுமா?

இந்தப் பாதயாத்திரையின் மூலம் அரசாங்கம் பலப்பட்டுள்ளது. இந்த பாத யாத்திரையின் நோக்கம் அரசாங்கத்திற்கு ஒரு சவால் அல்ல. பாத யாத்திரையில் நடந்து கொண்டவிதம், கூறிய விடயங்கள், பாவித்த வார்த்தைகள் இவை எல்லாவற்றையும் பார்க்கையில் அவர்கள் பாத யாத்திரை மேற்கொண்டது அரசாங்கத்திற்கு எதிராகவோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராகவோ அல்ல. இது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்துவதற்காக மேற்கொண்ட ஒரு வேலையாகும். இது தான் உண்மை. இந்த பாத யாத்திரையின் மூலம் மிகவும் மகிழ்ச்சியடைந்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினர். இது எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் நினைத்தார்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முடிந்தது.

இத்தோடு அது பிளவுபட்டுவிடும் என்று. எனவே இந்த பாதயாத்திரை அரசாங்கத்திற்கு ஒரு சவால் அல்ல. அரசாங்கம் அசையவில்லை. அரசாங்கம் பலம்பெற்றது. ஸ்ரீல ங்கா சுதந்திரக் கட்சிக்குத்தான் அவர்கள் சவால்விட்டார்கள். கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு முன்னர் தான் அவர்கள் கூச்சலிட்டனர். இன்னும் அவர்கள் கூறியவைகள், செய்தவைகள் எனக்குத் தெரியும். அவற்றைப் பற்றிப் பேச நான் விரும்பவில்லை. மிகவும் தெளிவாக கூறுவதானால் இந்த பாத யாத்திரை மூலம் எமது அரசாங்கம் பலமடைந்துள்ளது.

அந்த பாதயாத்திரை நிறைவடைந்ததன் பின்னர் நானும் இதுவரை செய்துவந்த விடயங்களில் சில மாற்றங்களை செய்யவேண்டும் என தீர்மானித்துள்ளேன். எனவே அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பிலும் நாடு மற்றும் நாட்டு மக்கள் தொடர்பிலும் எனது அர்ப்பணிப்புகள் இந்த பாதயாத்திரையின் பின்னர் மேலும் பலம் பெற்றுள்ளது. இது தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனவே இன்னும் சில பாதயாத்திரைகளை மேற்கொள்ளுமாறு நான் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
14.08.2016

Web Design by The Design Lanka