ஜனாதிபதியின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்க முடியும் - விஜயதாச ராஜபக்ஷ:- Sri Lanka Muslim

ஜனாதிபதியின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்க முடியும் – விஜயதாச ராஜபக்ஷ:-

Contributors
author image

Editorial Team

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

ஜனாதிபதி மஹிந்த இரண்டாம் தவணைக்காக தெரிவு செய்யப்பட்டதன் பின்னரே 18ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

 

சட்ட ரீதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேட்பு மனுவை நிராகரிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கு காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

சட்டம் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

எதிர்வரும் காலங்களில் பதவி வகிக்கும் ஜனாதிபதிகளுக்கே புதிய சட்டத்தின் பிரகாரம் இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியும் எனவும், தற்போதைய ஜனாதிபதிக்கு அவ்வாறு பதவி வகிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாம் தவணைக்காக தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தால், சட்ட மா அதிபரிடம் ஆலோசனைப் பெற்றுக்கொண்டு வேட்பு மனுவை நிராகரிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கு இருப்பதாகதெரிவித்துள்ளார்.

 

1833ம் ஆண்டு முதல் சுயாதீனமான அலகாக இயங்கி வந்த சட்ட மா அதிபர் திணைக்களத்தை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம், ஜனாதிபதியின் கீழ் இயங்கும் ஒர் அலகாக மாற்றியமைத்தது என அவர்குற்றம் சுமத்தியுள்ளார்.

 

ஜனாதிபதியின் கீழ் இயங்கி வரும் சட்ட மா அதிபர், தனது எஜமானருக்கு எதிராக செயற்படுவார் என எதிர்பார்க்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

லெட்டிமார் கொள்கைகளுக்கு அமைவாக நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்ய தாம் பாராளுமன்றில் சமர்ப்பித்த வழக்குகள் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார் (GTN)

Web Design by Srilanka Muslims Web Team