ஜனாதிபதி அரசியல் பழிவாங்கல் அறிக்கையில் விரைந்து செயற்படும் வேகத்தை உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் அறிக்கையிலும் காண்பிக்க வேண்டும் : தேசிய பிக்கு முன்னணி - Sri Lanka Muslim

ஜனாதிபதி அரசியல் பழிவாங்கல் அறிக்கையில் விரைந்து செயற்படும் வேகத்தை உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் அறிக்கையிலும் காண்பிக்க வேண்டும் : தேசிய பிக்கு முன்னணி

Contributors

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பகுதிகளை நீக்க முயற்சிக்காமல், துரிதமாக நியாயமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பிக்கு முன்னணியின் பொதுச் செயலாளர் வக்கமுல்லே உதித்த தேரர் தெரிவித்தார்.

கொச்சிக்கடை புனித அந்தோனியர் திருத்தலத்தில் நேற்று ஞாயிறுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட கறுப்பு ஞாயிறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டபோது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பெரும்மளவான இலங்கையர்களே உயிரிழந்துள்ளனர். அத்தோடு வாழ்நாள் முழுவதும் அங்கவீனர்களாக இருக்க வேண்டிய நிலைமைக்கு பலர் உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கான நியாயத்தை பெற்றுக் கொடுக்குமாறு நாம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதுடன், அதன் பிரதிகள் பேராயருக்கும், மகாநாயக்க தேரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. எனினும் இந்த அறிக்கையில் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கான பதிலை அரசாங்கம் வழங்க வேண்டும். தாக்குதலுடன் தொடர்புடைய பலரது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது தொடர்பில் பேராயரும் கவலை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின சம்பவத்தின் பின்னர் நியாயமான தீர்ப்பொன்றை பெற்றுக் கொள்ள முடியும் என்கின்ற எதிர்பார்ப்பில் பேராயர், தங்களது மக்களை முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட வேண்டாம் என்று கட்டுப்படுத்தியிருந்தார். எனவே தற்போதைய ஜனாதிபதிக்கு இது தொடர்பில் நியாயத்தை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் பாரிய பொறுப்புள்ளது.

எமது உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பதற்காகவே நாம் ஆட்சியாளர்களை தெரிவு செய்கின்றோம். எமது இந்த எதிர்பார்ப்பு கூட நிறைவேற்றப்படவில்லை என்றால் அவ்வாறான ஆட்சியாளர்களை தெரிவு செய்வதால் என்ன பயன் கிடைக்கப் போகின்றது.

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த ஆணைக்குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதுடன் ஜனாதிபதி விரைந்து செயற்படுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது. இந்த வேகத்தை உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலும் காண்பிக்க வேண்டும். அதனை விடுத்து அறிக்கை தொடர்பில் பரீசிலனை செய்வதற்காக என்று பொருத்தமற்ற நபர்களை நியமிப்பதால் காலம் கடத்தப்படுவதையே அவதானிக்க கூடியதாக இருக்கும்.

தாக்குதல் சம்பவத்திற்கு சர்வதேச தலையீடு, தேசிய தலையீடு காணப்பட்டதாகவும், ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றிக் கொள்வதற்காக சிலர் இந்த மரணங்களை பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது. இதற்கான பதிலை அரசாங்கமே தெரிவிக்க வேண்டும்.

இதேவேளை இந்த தாக்குதல் தொடர்பில் நியாயமான தீர்வு கிடைக்கும் வரையில் நாம் இந்த எதிர்ப்பு ஆர்பாட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.

தொல்பொருள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் உடஸ்கிரியே சபித்த தேரர் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் அனைவரையுமே சோகத்தில் ஆழ்த்திய சம்பவமாகும். இந்த தாக்குதல் சம்பத்தின் பிரதான பொறுப்புதாரிகள் கைது செய்யப்படும் வரையில் நாடு சோகத்திலேயே இருக்கும்.

தாக்குதல் சம்பவத்தின் பின்னர் பேராயர் சிறந்த முறையில் செயற்பட்டிருந்தார். சம்பவத்திற்கு பின்னால் இருக்கும் பிரதான நபர்களை அடையாளம் காணுவதற்காக சட்டத்திற்கு இடமளிக்குமாறு பேராயர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கான நியாயத்தை அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ளதா?

Web Design by Srilanka Muslims Web Team