ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் நாட்டை பாதுகாக்க முடியாது என்பது இப்பொழுது தெளிவாகி உள்ளது. - Sri Lanka Muslim

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் நாட்டை பாதுகாக்க முடியாது என்பது இப்பொழுது தெளிவாகி உள்ளது.

Contributors

எம்.மனோசித்ரா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட

பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் மூலம் , நாட்டுக்கு எதிரான அச்சுறுத்தல்களிலிருந்து அதைப் பாதுகாப்பதில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தோல்வியடைந்துள்ளார் என்பது தெளிவாகிறது என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.


இம்முறை இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணையில் கடந்த ஒன்றரை வருட ஆட்சியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட விடயங்களே உள்ளடக்கப்பட்டுள்ளன. ராஜபக்ஷக்களின் சர்வாதிகார போக்குடைய அரசியல் கொள்கைகளால் இலங்கை காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது என்றும் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை நிறைவேற்றப்பட்டதிலிருந்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் நாட்டை பாதுகாக்க முடியாது என்பது தெளிவாகிறது. அத்தோடு முறையற்ற வெளிநாட்டு கொள்கைகளுடன் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. நாட்டுக்கு எதிரான அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டை பாதுகாப்பதில் ஜனாதிபதி தோல்வியடைந்துள்ளார்.இம்முறை இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த பிரேரணையின் யுத்தம் தொடர்பான காரணிகளை விட தற்போதைய ஆட்சியில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள் , இராணுவ மயமாக்கல் மற்றும் நீதிமன்ற சுயாதீனத்தன்மையின் பலவீனம் உள்ளிட்ட காரணிகள் தொடர்பிலேயே அதிகளவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு ஊடகவியலாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பழிவாங்கலுக்கு உட்படுகின்றமை , முஸ்லிம்களின் சடலங்கள் கட்டாய தகனம் செய்யப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுக்களும் , ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இடம்பெற்ற நீதித்துறையில் அரசியல் தலையீட்டு உள்ளிட்ட விடயங்களும் இதில் உள்ளடங்குகின்றன.குறித்த அறிக்கையில் முழுமையாக நாட்டுக்கு எதிராக எந்தவொரு தீர்மானமும் முன்வைக்கப்படவில்லை. மாறாக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக இடம்பெற்று வருகின்ற அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கைகளின் காரணமாகவே இலங்கை ஜெனீவாவில் தோல்வியடைந்தது. சர்வாதிகாரத்தை இலக்காகக் கொண்டு செயற்படும் இந்த அரசாங்கத்தினால் சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஐ.நா.வில் வாக்களிப்பதற்கு தகுதியுடைய 47 உறுப்பு நாடுகளில் 15 நாடுகள் முஸ்லிம் அமைப்புக்களுடன் தொடர்புடையவையாகும். முஸ்லிம் நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் மனித உரிமை ஆணைக்குழுவில் உரையாற்றும் போது முஸ்லிம் மக்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள 4 நாடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்தார். அவற்றில் இலங்கையும் உள்ளடங்குகிறது. இவ்வாறு இலங்கை தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பதற்கான வாய்ப்பினை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுமே ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இதன் மூலமே 11 முஸ்லிம் நாடுகளின் ஆதரவை இலங்கை இழந்துள்ளது.2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த சூழலில் ஐ.நா.வில் இலங்கைக்கு ஆதரவாக 29 நாடுகள் வாக்களித்திருந்தன. ஆனால் இம்முறை 11 நாடுகள் மாத்திரமே ஆதரவாக வாக்களித்துள்ளன. கோத்தாபய ராஜபக்ஷவின் ஆட்சியின் முதலாவது வாக்கெடுப்பிலேயே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது.அவரது சர்வாதிகார அரசியல் கொள்கையே இதற்கு காரணமாகும். அத்தோடு ஆதரவாக வாக்களித்த 11 நாடுகளும் இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வாக்களிக்கவில்லை. அவற்றில் பெரும்பாலானவை பிரித்தானியாவுக்கு எதிரான நாடுகளாகும். அதன் அடிப்படையிலேயே இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. அத்தோடு முன்னைய பிரேரணைகளில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நேபாளம் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளின் ஆதரவை இம்முறை பெற்றுக் கொள்ள முடியாமல் போயுள்ளமை அரசாங்கத்தின் இயலாமையை வெளிப்படுத்துகிறது.இவ்வாறான நிலையில் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்த நாடுகளுடன் இணைத்து 25 நாடுகளின் ஆதரவை இலங்கை பெற்றுக் கொண்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுகின்றார்.அவர் புதிய கணித முறைமையை உருவாக்கியுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது 162 இலட்சம் பேர் பதிவு செய்யப்பட்டிருந்தனர். எனினும் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு 69 இலட்சம் வாக்குகள் கிடைத்தன. அவ்வாறெனில் 90 இலட்சம் பேர் அவருக்கு வாக்களிக்கவில்லை. தினேஷ் குணவர்தனவின் புதிய கணித நுட்பத்துக்கு அமைய மதிப்பிட்டால் ஜனாதிபதி கோத்தாபய 95 இலட்சம் வாக்குகளால் தோல்வியடைந்துள்ளார் என்று பொருள்படும். எனவே இதுபோன்ற கேலிப் பேச்சுக்களை தவிர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.தற்போதைய அரசாங்கம் அதன் மோசடிகளினாலும் சர்வாதிகாரத்தினாலும் நாட்டை காட்டிக் கொடுத்துள்ளது. எனவே அடுத்த பிரேரணையேனும் தோற்கடிப்பதற்கு மனித உரிமைகளை பாதுகாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.அத்தோடு 20 ஆவது திருத்தம் இரத்து செய்யப்பட வேண்டும். சர்வாதிகார இராணுவமயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும். ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல் நிறுத்தப்படுவதோடு , அரசியலமைப்பு ரீதியான ஆட்சியை முன்னெடுக்குமாறும் வலியுறுத்துகின்றோம் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team