ஜனாதிபதி சத்தமாக இருமினாலும், கொட்டாவி விட்டாலும் அதனை சர்வதேசத்திற்கு கொண்டு செல்பவர்கள் உள்ளனர்..! - Sri Lanka Muslim

ஜனாதிபதி சத்தமாக இருமினாலும், கொட்டாவி விட்டாலும் அதனை சர்வதேசத்திற்கு கொண்டு செல்பவர்கள் உள்ளனர்..!

Contributors

சிறிலங்காவில் 30 வருடகால யுத்தம் முடிவிற்கு வந்திருக்காவிட்டால், இஸ்ரேல் – பலஸ்தீனத்தை ஒத்த நிலையில் சிறிலங்கா தற்போதும் போராடிக் கொண்டிருக்கும் என்பதை சர்வதேசம் விளங்கிக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டமைக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அதிருப்தி வெளியிட்ட நிலையில், கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதற்கு பதிலளித்த காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் தவறாக பயன்படுத்தாது என்ற வாக்குறுதியை அளித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

நாங்கள் அவசரகாலச் சட்டத்தை சீனி, அரிசி பதுக்கல் செய்தவர்களுக்கெதிராக நுகர்வோர் சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க முடியாத காரணத்தினால் தான் கொண்டுவந்தோம்.

அவசரகாலச் சட்டத்தை குப்பை மேடு சரிந்த சந்தர்ப்பத்தில் நல்லாட்சி அறிவித்தது. இருப்பினும் இன்று உலகம் நெருக்கடியை சந்தித்திருக்கும் நிலையில் இருக்கின்ற அத்தியாவசியப் பொருட்களை சரிவர விநியோகம் செய்யவே அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. ஆகவே அவசரகாலச் சட்டத்தை எந்தச் சந்தர்ப்பத்திலும் முறைகேடாகப் பயன்படுத்த மாட்டோம்.

ஜனாதிபதி சத்தமாக இருமினாலும், கொட்டாவி ஏற்பட்டாலும் அதனைக்கூட சர்வதேசம் வரை கொண்டுசெல்கின்ற தரப்பினர் இருக்கின்றார்கள். அதனை தடுக்க முடியாது.

அவசரகாலச் சட்டம் என்பது எமது நாட்டில் மாத்திரமன்றி, ஜனநாயகவாத நாடாளுமன்றம் உள்ள நாடுகளிலும் அவசரகாலச் சட்டம் அமுலாகியிருக்கின்றது.

கொவிட் போன்ற சுனாமி போன்ற சந்தர்ப்பங்களில் இராணுவம் மாத்திரமன்றி அரச பொறிமுறையை செயற்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றது. வரலாற்றில் இதுபோன்ற இடர் சந்தர்ப்பங்களிலும் இச்சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஜெனீவா அல்ல, அதற்கும் அப்பால் இந்த விடயத்தை கொண்டுசெல்கின்றார்கள். ஆனாலும் அதனைத் தடுக்க முடியாது. எமது நோக்கம் நேர்மையானது என்றார். IBC

Web Design by Srilanka Muslims Web Team