ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் கூட்டணி - யானைக்கு பதில் வேறு சின்னம்:- ரணில் முயற்சி:- Sri Lanka Muslim

ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் கூட்டணி – யானைக்கு பதில் வேறு சின்னம்:- ரணில் முயற்சி:-

Contributors
author image

Editorial Team

ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் கூட்டணியயொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி யானை சின்னத்திற்க்கு பதிலாக வேறு சின்னத்தில் போட்டியிடுவது குறித்த யோசனையையும் முன்வைத்துள்ளது.

 

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

 

ஐக்கிய தேசிய கட்சிக்கான முக்கிய நியமனங்களை மேற்கொண்ட பின்னர் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உடனடியாக எதிர்கட்சிகள் மத்தியில் ஐக்கியத்தை ஏற்படுத்துவது குறித்து ஆராய்ந்துள்ளார்.மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை எப்பாடுபட்டாவது தோற்கடிப்பதே இதன் முக்கிய நோக்கம்.

 

ஐக்கியதேசிய கட்சியின் யாப்பின்படி எதிர்க்கட்சிகளுடன் பேச்சுக்களை மேற்கொள்ளும் அதிகாரம் அதன் தலைவருக்கேயுள்ளது.இதனடிப்படையில் ரணில் எதிர்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக தனக்கு நெருக்கமான குழுவொன்றை தெரிவுசெய்துள்ளார்.

 

குறிப்பிட்ட குழுவினர் முதற்கட்டமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது அதிருப்தியடைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் பேச்சுக்களை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

 

இந்தபேச்சுக்களின் போது எதிர்கட்சிக் கூட்டணியொன்றை உருவாக்குவது உட்பட முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

 

மிக முக்கியமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை ஒழிப்பது, புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவது குறித்து பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.இது தொடர்பாக பொது வேலைதிட்டமொன்றை ஆரம்பிப்பது குறித்தும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. சோபித தேரரின் நீதியான சமூகத்திற்கான அமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பாகவும் இணக்கம் ஏற்பட்டுள்ளது.

 

ராஜபக்ச அரசாங்கத்தின் மீது அதிருப்தியடைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ரணிலை பொதுவேட்பாளராக ஏற்றுக்கொள்ள இணங்கியுள்ளனர்,

 

இதேவேளை எதிர்க்கட்சிகள் இணைவதற்க்கு இலகுவாக யானைக்கு பதிலாக வேறு ஒரு சின்னத்தில் போட்டியிடுவதற்கான யோசனையையும் ரணிலின் பிரதிநிதிகள் முன்வைத்துள்ளனர்.ஜே.வி.பி மற்றும் ஜனநாயக கட்சியுடனும் இது குறித்த பேச்சுக்கள் ஆரம்பமாகியுள்ளன. (gtn)

Web Design by Srilanka Muslims Web Team