ஜனாதிபதி மஹிந்த, நியூயோர்க் சென்றடைந்தார் - Sri Lanka Muslim

ஜனாதிபதி மஹிந்த, நியூயோர்க் சென்றடைந்தார்

Contributors
author image

Editorial Team

ஐக்கிய நாடுகள் சபையின் 69ஆவது பொதுச் சபை கூட்டத் தொடர் நியுயோர்க்கில், இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந் மாநாட்டில் நாளை 24ஆம் திகதி உரையாற்றவுள்ளார்.

 

இந்த கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக பயணமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியூயோர்க் நேரத்தின் பிரகாரம் நேற்று திங்கட்கிழமை பகல் சென்றடைந்துள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

 

69ஆவது பொதுச் சபை கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.40 அளவில் அமெரிக்கா நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.

 

ஐ. நா. பொதுச் சபை மாநாட்டில் உரையாற்றிய பின்னர் எதிர்வரும் 26ஆம் திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது பாரியார் ஷிராந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ ஆகிய இருவரையும் ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன, ஐக்கிய அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர், பிரசாத் காரியவசம், பிரதி நிரந்தர பிரதிநிதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதிகள் அலுவலகத்தின் பணியாளர்கள் ஆகியோர் வரவேற்றனர்.

 

ஐக்கிய நாடுகளின் 69ஆவது பொதுச்சபை அமர்விற்கு மேலதிகமாக, காலநிலை உச்சிமாநாடு 2014, கிளின்டன் உலகளாவிய முன்னெடுப்பின் (Clinton Global Initiative) வருடாந்தக் கூட்டம், பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் கூட்டம் ஆகியன உட்பட இவ்வாரம் இடம்பெற எதிர்பார்க்கப்பட்டுள்ள சில பெரியளவிலான சர்வதேச நிகழ்வுகளில் பங்குபற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

காலநிலை உச்சிமாநாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை, ஜனாதிபதி ராஜபக்ஷ தேசிய கருத்து அறிக்கையினை வெளியிடவும், நாளை 24ஆம் திகதி புதன்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உரையாற்றவுள்ளார். பொதுச்சபையில் ஜனாதிபதி ஆற்றும் ஏழாவது உரையாக இது அமையவுள்ளது.

 

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், வடிகாலமைப்பு மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா, சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புப் பிரதியமைச்சர் திருமதி நிருபமா ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்புப் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் த வாஸ் குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜே.ஆர்.பி. சூரியப்பெரும, ஏ.எச்.எம். அஸ்வர், நிரஞ்சன் விக்கிரமசிங்க, மத்திய மாகாண முதலமைச்சர் ரத் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி செனுகா செனவிரத்ன, சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கலாநிதி. ரி.ஆர்.சி. றுபெரு, காலநிலை மாற்ற செயலகத்தின் பணிப்பாளர் (சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு) கலாநிதி. சுனிமால் ஜெனதுங்க ஆகியோர் ஜனாதிபதியுடன் இணைந்துசென்றுள்ளனர்.

 

உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் கலாநிதி. கொஹன, தூதுவர் காரியவசம், மேஜர் ஜெனரல் சில்வா ஆகியோரும் இணைந்துகொள்வர்.

Web Design by Srilanka Muslims Web Team