ஜனாதிபதி லண்டன் நகரை சென்றடைந்தார்……. » Sri Lanka Muslim

ஜனாதிபதி லண்டன் நகரை சென்றடைந்தார்…….

maith

Contributors
author image

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

லண்டன் நகரில் இடம்பெறவுள்ள 2018 ஆம் ஆண்டிற்கான பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், நேற்று (15) இரவு லண்டன் நகரிலுள்ள ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

ஜனாதிபதி அவர்கள் லண்டன் நகரில் தங்கவுள்ள ஹோட்டலில் அந்நாட்டிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பணிக்குழுவினரால் ஜனாதிபதி அவர்களுக்கும் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிறுவர் சிறுமியர் வெற்றிலை வழங்கி சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.

53 நாடுகளின் தலைவர்களினதும் பிரதிநிதிகளினதும் பங்குபற்றலில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு இன்று முதல் ஏப்ரல் 21ஆம் திகதி வரை லண்டன் நகரில் இடம்பெறவுள்ளது. இவ்வருடத்திற்கான தொனிப்பொருள் ”பொதுவான எதிர்காலத்தை நோக்கி” என்பதாகும்.

சுபீட்சம், பாதுகாப்பு, சமநிலை, பேண்தகுதன்மை ஆகிய அம்சங்களின் கீழ் பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளின் நோக்கங்களை அடைந்துகொள்வது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஏப்ரல் 21ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி அவர்கள் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அம்மையாரை சந்திக்கவுள்ளதுடன், பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றும் அரச தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்த அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றும் ஜனாதிபதி அவர்கள், பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மன்றத்திலும் உரையாற்றவுள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு சம்மேளனத்திலும் பிரித்தானிய மகாராணியின் 92 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெறும் விசேட கொண்டாட்டத்திலும் ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றவுள்ளார்.

Web Design by The Design Lanka