ஜனாஸா விவகாரம் : அரசியலுக்காக சம்மாந்துறையின் மாண்பு கேள்விக்குட்படுத்தப்பட்டதா…? - Sri Lanka Muslim

ஜனாஸா விவகாரம் : அரசியலுக்காக சம்மாந்துறையின் மாண்பு கேள்விக்குட்படுத்தப்பட்டதா…?

Contributors

சம்மாந்துறை, தனக்கென சில தனித்துவங்களை தன்னகத்தே கொண்ட ஒரு ஊர். இதன் நாமம் அற்ப அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்தப்படுவதை, இழிவு படுத்தப்படுவதை ஒரு போதும் ஏற்க இயலாது. முழு இலங்கை முஸ்லிம்களும் ஜனாஸா எரிப்பில் துடி துடித்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், ஓட்டமாவடியில் அடக்க அனுமதிக்கப்பட்ட நிகழ்வின் போதான மகிழ்ச்சியை வார்த்தைகளால் வர்ணித்திட இயலாது. இம் மகிழ்ச்சியில் அனைவரும் திளைத்திருந்த வேளை, சம்மாந்துறை தவிசாளர் நௌசாத் கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவில்லை என்ற செய்தி அனைவரையும் கவலை கொள்ளச் செய்திருந்தது.

சம்மாந்துறை தவிசாளர் நௌசாத் ஜனாஸா எரிப்புக்கு எதிரானவரல்ல என்பதை முதலில் பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன். ஒரு கலிமா சொன்ன முஸ்லிம் ஒரு போதும் அதற்கு எதிராக இருக்கவும் மாட்டான். குறித்த ஜனாஸா அடக்க விவகாரத்துக்கு தேசிய ரீதியில் தவிசாளர் நௌசாத் என்ன செய்துள்ளார் ( சம்மாந்துறையில் எந்த அரசியல் வாதியும் சொல்லுமளவு எதனையும் செய்யவில்லை ) என்ற வினாவுக்கு என்னிடம் விடையில்லாது போனாலும், சம்மாந்துறையில் அடக்கம் செய்ய அவர் ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஒரு போதும் ஏற்க முடியாது.

அமைச்சர் வாசு தேவ நாணயக்கார கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்ய சில இடங்களை பரிந்துரை செய்திருந்தார். அதில் ஓர் இடமாக சம்மாந்துறை இருந்தமை யாவரும் அறிந்ததே! இச் சந்தர்ப்பத்திலும் சுகாதார பிரிவினரால் சம்மாந்துறை முஅல்லா மஹல்லா பிரதேசம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருந்தது. இதன் பிறகு கடந்த வியாழக்கிழமையும் சுகாதார குழுவொன்று குறித்த பிரதேசத்துக்கு வந்து ஆய்வை செய்துள்ளது. ஆய்வு செய்வது அவர்களுடைய கடமை.

இவ் ஆய்வின் போது சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் நௌசாத் நேரடியாகவே குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்து, தனது ஒத்துழைப்பை வழங்கியுள்ளார். தவிசாளர் நௌசாத் அடக்கத்துக்கு எதிரானவராக இருந்தால், குறித்த ஆய்வையே செய்யாமல் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஒரு தவிசாளராக அந்த அதிகாரம் அவருக்குள்ளது. அப்படி, அவர் ஏதும் செய்திருக்கவில்லை.

ஆய்வின் முடிவு சம்மாந்துறையில் அடக்குவதை நூறு வீதம் பரிந்துரை செய்யும் வகையில் அமைந்திருக்கவில்லை. மிகப் பொருத்தமான இடத்தை பரிந்துரை செய்வதே அடக்கும் செயற்பாட்டை சாதகமாக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின் முடிவு, தீர்மானம் சுகாதார பிரிவினரோடு சம்பந்தப்பட்டது. சுகாதார பிரிவினர் குறித்த இடத்தை பரிந்துரை செய்யாமல், எப்படி தவிசாளர் அடக்கம் செய்ய அனுமதி வழங்க முடியும்? அப்படி வழங்கி என்ன இலாபம் கிடைத்துவிடப் போகிறது? அது அறிவுடமையும் அல்ல.

தவிசாளர் நௌசாத் சுகாதார பிரிவுக்கு ஒத்துழைக்கவில்லை, சுகாதார பிரிவினர் அனுமதி கேட்டும் வழங்கவில்லை என்ற நிலையே அவரை குற்றவாளியாக்கும். அப்படி சுகாதார பிரிவோடு சம்பந்தப்பட்ட யாரும் இதுவரை நேரடியாகவோ, மறை முகமாகவோ அவரை குற்றம் சாட்டியதாக அறியக் கிடைக்கவில்லை. மாறாக, குறித்த விடயத்தோடு சம்பந்தப்பட்ட சில முக்கிய நபர்கள் சமூக வலைத்தளங்களில் தவிசாளர் நௌசாத்துக்கு ஆதரவாகவே, தங்களது கருத்தை பதிவு செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. நானும் முக்கிய சிலரை தொடர்பு கொண்டு வினவிய போது, ” எங்களுக்கு தவிசாளர் நௌசாத் பூரண ஒத்துழைப்பு வழங்கினார் “ என்றே கூறியிருந்தனர்.

கொரோனா ஜனாஸாக்களை சம்மாந்துறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற நிலை வந்தால், சம்மாந்துறை தயார் என்ற தீர்மானத்தை தவிசாளர் நௌசாத் மிக நீண்ட நாட்கள் முன்பே சம்மாந்துறை பிரதேச சபையில் எடுத்திருந்ததோடு, சம்மாந்துறை முச் சபைகளோடும் குறித்த தீர்மானத்தை கலந்துரையாடியிருந்ததாக அறிய முடிகிறது. இத் தீர்மானத்தை தனக்குள்ள தொடர்பை பயன்படுத்தி அரச உயர் மட்டத்துக்கும் அறிவித்துள்ளார். தவிசாளர் நௌசாத் கொரோனா ஜனாஸாக்களை சம்மாந்துறையில் அடக்கம் செய்ய மிகத் தீவிரமாக செயற்பட்டுள்ளார் என்ற விடயம் மிகவும் வெளிப்படையாக உள்ள போது, அவர் அடக்கம் செய்ய அனுமதிக்கவில்லை என விமர்சிப்பது ஏற்புடையதல்ல. குறித்த இடம் அடக்கம் செய்ய பொருத்தமற்றதாக இருந்தால், அதற்கு எப்படி தவிசாளர் நௌசாத் பொறுப்பாக முடியும்?

தவிசாளர் நௌசாத் மீதான குறித்த குற்றச் சாட்டு சம்மாந்துறையின் மாண்பை முழு இலங்கையிலும் கேள்விக்குட்படுத்தியிருந்தது. இது அற்ப அரசியல் இலாபத்துக்கானது என அறியும் போது மிகவும் கவலையாக உள்ளது. “இல்லை”, “இல்லை” தவிசாளர் நௌசாத் அடக்க அனுமதிக்கவில்லை என யாராவது கூறுவார்களாக இருந்தால், அவர்கள் மக்கள் ஏற்கும் வகையில் அதனை நிரூபிக்க வேண்டும். அப்படி அவர்களால் நிரூபிக்க முடியுமென நம்பவில்லை. குறித்த தவிசாளர் மீதான சர்ச்சையை சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தியிருந்த சம்மாந்துறையின் முக்கிய அரசியல்வாதி, தனது குறித்த முகநூல் பதிவை நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அற்ப அரசியல் இலாபத்துக்காக சம்மாந்துறையின் மாண்பை கேள்விக்குட்படுத்துவதை யாராக இருந்தாலும் அனுமதிக்க முடியாது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Web Design by Srilanka Muslims Web Team