ஜப்பான் - இலங்கை முதலீட்டு மாநாடு ஜனாதிபதி தலைமையில் » Sri Lanka Muslim

ஜப்பான் – இலங்கை முதலீட்டு மாநாடு ஜனாதிபதி தலைமையில்

mai6

Contributors
author image

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான முதலீடுகள் மற்றும் வர்த்தக தொடர்புகளை மேலும் பலப்படுத்திகொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட முதலீட்டு மாநாடு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (13) பிற்பகல் டோக்கியோ நகரிலுள்ள இம்பேரியல் ஹோட்டலில் இடம்பெற்றது.

இருநாடுகளினதும் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் பங்குபற்றலில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் இருநாடுகளுக்குமிடையிலான பொருளாதார தொடர்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்வது தொடர்பாக விரிவாக கவனம் செலுத்தப்பட்டது.

பல்வேறு துறைகளில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு இலங்கையில் காணப்படுவதாகவும், அத்துறைகளில் முதலீடு செய்யுமாறு ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

முதலீட்டு மாநாட்டில் உரை நிகழ்த்திய அபிவிருத்தி உபாய மார்க்கங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, இலங்கையும் ஜப்பானும் கடந்த பல தசாப்தங்களாக பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதோடு, ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் இந்த விஜயத்தினால் அத்தொடர்புகள் மேலும் வளர்ச்சியடையும் என்று தெரிவித்தார்.

ஜப்பானின் பாராளுமன்ற அலுவல்கள், பொருளாதார, வர்த்தக மற்றும் கைத்தொழில் உப அமைச்சர் மசக்கி ஒகுஷியும் இந்த மாநாட்டில் பங்குபற்றினார்.

இதன் பின்னர் ஜப்பானிய வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் (JETRO) தலைவர் ஹிரோயுகி இஷிகியை (Hiroyuki Ishigi) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.

ஜப்பான் வர்த்தக மற்றும் முதலீட்டு மேம்பாட்டு சேவைகளை வழங்கும் முதன்மை நிறுவனமான ஜெட்ரோ நிறுவனத்தின் இலங்கை தொடர்பான செயற்பாடுகள் பற்றி விளக்கமளித்த நிறுவனத்தின் தலைவர், அச்செயற்பாடுகளை எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

அதன் பின்னர் ஜனாதிபதி அவர்களை ஜெயிக்கா (JICA) நிறுவனத்தின் தலைவர் ஷினிசி கிடஓகா (Mr. Shinichi Kitaoka) சந்தித்தார்.

ஜெயிக்கா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் தற்போது இலங்கையில் செயற்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் தற்போதைய நிலைமை மற்றும் முன்னேற்றம் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், சகல சந்தர்ப்பங்களிலும் உள்நாட்டு வர்த்தக நடவடிக்கைகளுக்கு முதலிடமளித்து, வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வதே தமது அரசாங்கத்தின் கொள்கையாகும் என்று தெரிவித்தார்.

ஒரு நாடு என்ற வகையில் நாட்டு மக்களை வலுப்படுத்தக்கூடிய, அவர்கள் தமது சுய முயற்சியில் முன்னேற்றமடையக்கூடிய செயற்திட்டங்களுக்கு உதவியளிக்குமாறு இதன்போது ஜெயிக்கா நிறுவனத்தின் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதி அவர்கள், தற்போது இலங்கை மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அபிவிருத்தி செயற்திட்டங்களே மிக அவசியமாகின்றன என்றும் குறிப்பிட்டார்.

இலங்கை சுற்றுலா கைத்தொழில்துறையின் மேம்பாட்டிற்கு உதவியளிக்கவும் இதன்போது ஜெயிக்கா நிறுவன தலைவர் இணக்கம் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka