ஜெனிவா பிரேரணையை வெற்றி கொள்வது கடினம் - பாரிய போர்க்குற்றங்கள் எவையும் நிகழவில்லை - சீனா, ரஷ்யா ஆதரவளிக்கும் : வெளிவிவகார செயலாளர் கொலம்பகே - Sri Lanka Muslim

ஜெனிவா பிரேரணையை வெற்றி கொள்வது கடினம் – பாரிய போர்க்குற்றங்கள் எவையும் நிகழவில்லை – சீனா, ரஷ்யா ஆதரவளிக்கும் : வெளிவிவகார செயலாளர் கொலம்பகே

Contributors

ஆர்.ராம்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையிலான அனுசரணை வழங்கும் நாடுகளால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணையை வெற்றி கொள்வது கடினம் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சம்பந்தப்பட்ட நாட்டின் இணக்கத்தினைப் பெறாது எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றினாலும் எவ்விதமான பலனுமில்லை என்று வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெற்றதாக ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டின் மீளாய்வு அறிக்கையில் கூறப்பட்ட விடயங்களும் பிரித்தானிய தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் உள்ள விடயங்களையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவை தவறான தகவல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் போர்க் குற்றங்களுக்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ராப் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக குறிப்பிட்ட விடயங்கள் ஆதாரமற்றவை என்பதோடு ஜனாதிபதி கோட்டாபய அவ்விதமாக கூறவில்லை என்றும் கொலம்பகே கூறினார்.

அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய சரணடைந்தவர்கள் தொடர்பில் அவ்வாறு தெரிவித்திருந்தால், ஸ்டீபன் ராப் ஏன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை என்றும் இத்தனை காலம் மௌனமாக இருந்தமைக்கான காரணம் என்னவென்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேநேரம், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கே ஜனாதிபதி கோத்தாபய விரும்புகின்றார். அதற்காக அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதோடு அவர்களுடன் விரைவில் சந்திப்புக்களை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டு வருகின்றது என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு பயணத் தடைகளை விதிக்குமாறு கோரப்படுகின்றபோதும் ஐ.நா. பாதுகாப்புச் சபையிலேயே அது சம்பந்தமான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் எனினும் உண்மைக்குப் புறம்பான விடயங்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டால் சீனாவும், ரஷ்யாவும் எமக்கு ஆதரவளிக்கும் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team