ஜெனீவா மனித உரிமைகள் பேரவை - இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கக்கூடிய நிலையில்லை..! - Sri Lanka Muslim

ஜெனீவா மனித உரிமைகள் பேரவை – இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கக்கூடிய நிலையில்லை..!

Contributors

மனித உரிமைகள் பேரவையில் நேற்று (23) நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஊடாக இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கக்கூடிய நிலைமை இல்லை என்று அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக செயற்படும் ருவன் சத்குமாரம் கலந்துகொண்டார்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் மூலம் நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஊடாக இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா? என கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், இதனால் பொருளாதார பாதிப்பு ஏற்படாது. மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையினால் தனிப்பட்ட ரீதியில் பேரவையினால் சில நாடுகளுக்கு இதனை வலியுறுத்த முடியும்.

ஆனால் இவ்வாறான தடை விதிக்கப்பட வேண்டுமாயின், ஜக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையிலேயே இதுதொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பு சபையில் வீடோ அதிகாரத்தை கொண்ட பால நாடுகள் உண்டு. அவை எமக்கு ஆதரவு வழங்கும் என்று அமைச்சர் கூறினார்.

இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இன்னும் உரிய வகையில் நிரூபிக்கப்படவில்லை.

யுத்தம் நடைபெற்ற 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை தொடர்பாக இலங்கை பிரிட்டிஷ் தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவு அதன் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பி வைத்த தகவல்கள் முரண்பாட்டை கொண்டதாக பிரபு நேஸ்பி தெளிவுபடுத்தியுள்ளார்.

6 மாத கால தகவல்களை இவர் ஆய்வு செய்து அதில் முரண்பாடு இருப்பதை வெளிப்படுத்தி இருந்தார். அமெரிக்க பிரதிநிதி ஒருவரும் இந்த அறிக்கை பக்கசார்பானது என்று அப்பொழுது குறிப்பிட்டிருந்தார்.

இதேபோன்று அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி கேனல் ஸ்மீத்தும் இந்த முரண்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தார். இலங்கைக்கு எதிராக அக்கால பகுதியில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அனுசரணை வழங்கிய அமெரிக்காவும் அதிலிருந்து விலகிக் கொண்டது. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான விடயங்களை ஆராய்ந்து சரியானவற்றை இலங்கை முன்வைப்பதற்கு தற்பொழுது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team