ஜெமீலின் இராஜினாமா தொடர்பில் ACMC விளக்கம் » Sri Lanka Muslim

ஜெமீலின் இராஜினாமா தொடர்பில் ACMC விளக்கம்

jameel

Contributors
author image

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அம்பாறை மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளருமான கலாநிதி ஏ.எம். ஜெமீல் அவர்கள் அரச வர்த்தக கூடடுத்தாபனத் தலைவர் பதவியிலிருந்து நீங்கியமை அல்லது நீக்கப்பட்டமை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தரப்பில் அதன் உயர்பீட உறுப்பினர் ஒருவரால் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சார்பில் எனக்கு வழங்கப்பட்ட விளக்கத்தை இங்கு வெளியிடுவது எனது தார்மிகப் பொறுப்பாகும்.

மறுபக்க கருத்துக்கும் இடங்கொடுக்க வேண்மென்ற ஜனநாயகத்தினதும் கருத்துச் சுதந்திரத்தினதும் ஒரு முக்கிய கூறு என்ற அடிப்படையில் அதனை இங்கே முழுமையாக வெளியிடுகேிறேன்.

….’அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அம்பாறை மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளருமான கலாநிதி ஏ.எம். ஜெமீல் அவர்கள், அரச வர்த்தக கூடடுத்தாபன தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்று நீங்களோ மற்றவர்களோ கூறுவது மிகத் தவறானது. அவரை நீக்க வேண்டிய தேவை எமது கட்சிக்கோ தலைமைத்துவத்துக்கோ இல்லை.’
……’தான் அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவர் பதவியிலிருந்து இம்மாதம் முதலாம் திகதி முதல் (01-06-2018) இராஜினாமாச் செய்யப் போவதாக உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் எமது கட்சித் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு அறிவித்திருந்தார். இது தொடர்பில் எமது அமைச்சர் அவர்கள் கலாநிதி ஜெமீல் அவர்களை நேரில் அழைத்து ஏன் இராஜினாமாச் செய்யப் போகிறீர்கள் எனக் கேட்டார்…’

……’ இல்லை.. நான் கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபடப் போகிறேன். அம்பாறை மாவட்டத்தில் கட்சியை வளர்க்கப் போகிறேன், மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடப் போகிறேன். இவ்வாறானதொரு நிலையில் அரச வர்த்தகக் கூட்டுத்தாபன தலைவர் பதவியிலிருந்து கொண்டு எனது கட்சிக்கானதும் எனது அரசியலுக்குமானதுமான பணிகளைச் முன்னெடுக்க முடியாதுள்ளது. இதன் காரணமாகவே நான் இராஜினாமா செய்யத் தீர்மானித்தேன்…’ எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து, எமது கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் அவர்களும் அவரது கோரிக்கைகள் தொடர்பில் கரிசனை காட்டியவராகவும் அவர் கூறியவற்றில் நியாயங்கள் உள்ளன என்பதனைக் கருத்தில் கொண்டும் அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டார்.

இந்த அப்படையிலேயே அவர் தான் வகித்த அரச வர்த்தகக் கூடடுத்தாபனத் தலைவர் பதவியிலிருந்து 07-06-2018 முதல் அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமாச் செய்தார்.

அவர் பதவியை இராஜினமாச் செய்த தினமான 07-06-2018 அன்று மாலை எமது கட்சியின் தலைவர் கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்கள், கலாநிதி ஜெமீலை அழைத்து சில விடயங்களைத் தெளிவுபடுத்தினார்.

அப்போது அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

……’ கட்சியை வளர்க்கும் பணியில் நீங்கள் முழுமையாக ஈடுபட விரும்புகிறீர்கள். அம்பாறை மாவட்டத்தில் கட்சியைப் பலப்படுத்தவும் அதேவேளை, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நீங்கள் போட்டியிட அதிக கரிசனையையும் காட்டுகிறீர்கள். உங்களது கோரிக்கைகளுக்கு முழுமையான ஆதரவையும் அங்கீகாரத்தையும் கட்சித் தலைவர் என்ற வகையில் நான் வழங்கியுள்ளேன். இதனடிப்படையில் உங்கள் வேண்டுகோளின் பேரில் அரச வர்த்தகக் கூட்டுத்தாபன தலைவர் பதவியிலிருந்து நீங்கள் விலகிக் கொள்வதற்கு நான் அனுமதியளித்தேன். மேலும், பல நிறுவனங்களின் தலைவர்கள் விலக்கப்பட்டு வரும் நிலையில் நீங்கள் உங்கள் விரும்பத்தின் பேரிலேயே பதவி விலகியுள்ளீர்கள்.’

‘…..இருப்பினும் உங்களுக்கு எனது அமைச்சில் ஓர் உயரிய இடத்தை வழங்கவுள்ளேன். எனது சிரேஷ்ட ஆலோசகராக உங்களை நியமிக்கப் போகிறேன். உங்களுக்கான அனைத்து வசதிகளையும் நான் செய்து தரவுள்ளேன்…’ என கௌரவ அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த கலாநிதி ஜெமீல் அவர்கள், ‘…நீங்கள் இதுவரை காலமும் மிக முக்கிய பதவி ஒன்றைத் தந்து என்னைக் கௌரவப்படுத்தியுள்ளீர்கள். அதற்காக நன்றியைத் தெரிவிக்கிறேன். இப்போதும் எனக்கு ஒரு பொறுப்பான பதவியை தந்துள்ளீர்கள் அதற்காகவும் உங்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். நமது கட்சிப் பணிகளிலும் எனது அரசியல் நடவடிக்கைகளிலும் நான் இனி தீவிரமாக செயற்பட முடியும் எனத் தெரிவித்தார்….’ இதுவே நடைபெற்ற விடயங்களாகும் என குறித்த மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் என்னிடம் தெரிவித்தார்

மேலும் அவர் தெரிவிக்கையில், நீங்கள் (நான்) இந்த விவகாரத்தை சாய்ந்தமருது மக்களுடன் தொடர்புபடுத்தி வேண்டுமென்றே திட்டமிட்டு சில விடயங்களை ‘சாய்ந்தமருது மக்களுக்கான அரசியல் அதிகாரங்களும் அரசியல் அந்தஸ்துகளும் வெறும் நீர்க்குமிழிகள்தான்’ என்ற தலைப்பில் உங்களது முகநூலில் பதிவிட்டுள்ளீர்கள். நீங்கள் ஒரு நடுநிலை ஊடகவியலாளராக இருந்திருந்தால் எமது கட்சித் தலைமையுடனோ அல்லது கட்சியின் முக்கியஸ்தர்களுடனோ தொடர்பு கொண்டு இது தொடர்பில் கேட்டிருக்கலாம் என்றார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தேசியப்பட்டியல் எம்.பி விவகாரம் தொடர்பில் சாய்ந்தமருது முக்கியஸ்தர்கள் சிலர் எமது கௌரவ அமைச்சர் ரிஷாத் பதியுதீனை அண்மையில் சந்தித்துப் பேசிய போது, ‘……வீ.சி. இஸ்மாயிலுக்கு தேசியப் பட்டியல் எம்.பி கொடுக்கா விட்டால் மட்டும் அதனை எமது சாய்ந்தமருதுக்கு தாருங்கள். ஆனால், வீ.சி இஸ்மாயில் அவர்களுக்குத்தான் வழங்க வேண்டுமென நீங்கள் தீர்மானித்திருந்தால் அதனையே நீங்கள் செய்யுங்கள் எங்களுக்குத் தேவை இல்லை…..’ எனத் தெரிவித்தனர்.

இதன்போது, இவ்வாறான விட்டுக் கொடுப்புத்தன்மை கொண்ட சாய்ந்தமருது மக்களின் மன நிலையை தான் பாராட்டுவதாக எமது அமைச்சர் அவர்கள் சாய்ந்தமருது முக்கியஸ்தர்களிடம் கூறியதுடன் இந்த விட்டுக் கொடுப்புக்காக ஜெமீலையும் எமது தலைவர் பாராட்டி நன்றியும் தெரிவித்தார்.

ஆனால், நீங்களோ (நான்) ஜெமீலின் விடயத்தை வைத்து சாய்ந்தமருது மக்கள் மத்தியில் எமது கட்சித் தலைமை மீது தவறான புரிந்துணர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறீர்கள். உங்களது பதிவு ஒரு தலைப்பட்சமானது, நியாயத்துக்கு அப்பாற்பட்டது எனத் தெரிவித்தார்.

.எனவே, இவ்வாறான சேறு பூசும் நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபட்டு பிரச்சினைகளை ஏற்படுத்தாதீர்கள் என என்னைக் கடிந்து கொண்டார்.
– ஏ.எச்.சித்தீக்

Web Design by The Design Lanka