ஜெயசிறில் விடயத்தை த.தே.கூட்டமைப்பின் தலைவர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்க கோரவுள்ளோம் : எச்.எம்.எம். ஹரீஸ் எம்.பி. - Sri Lanka Muslim

ஜெயசிறில் விடயத்தை த.தே.கூட்டமைப்பின் தலைவர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்க கோரவுள்ளோம் : எச்.எம்.எம். ஹரீஸ் எம்.பி.

Contributors

நூருல் ஹுதா உமர்

கண்மணி நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களை பற்றி இழிவாக கருத்து பகிர்ந்த காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில் மீது தமிழர்களுடன் ஒன்றித்து பயணிக்கும் முஸ்லிங்கள் தனது அதிருப்தியை காட்ட ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில் கூட அவர் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வித நடவடிக்கையும் எடுக்காது அமைதி காப்பது ஏன் என்பதுதான் விளங்காமல் உள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் இன்று (02) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், உலக முஸ்லிங்களின் தலைவராக மட்டுமின்றி உலக வாழ் மக்களின் நன்மதிப்பை பெற்ற தலைவராகவும் உள்ள கண்மணி நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் மீது இவ்வாறான தவறான கருத்தை முன்வைத்த தவிசாளரின் மீது அதிரடி காட்டாமல் சிவில் சமூகம் மிகவும் நிதானமாக நடந்து கொண்டு தமிழ்- முஸ்லிம் மக்களின் ஒற்றுமை கருதி இவ்விடயத்தை நிதானமாக கையாண்டு வருவது பாராட்டத்தக்கது. பள்ளிவாசல்கள் சம்மேளனம், பொது அமைப்புக்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் இவருக்கு எதிராக போராட்டங்களை மேற்கொள்ளாது ஜனநாயக ரீதியாக சட்டநடவடிக்கை எடுக்க முனைந்திருப்பது இவ்விடயத்தில் முஸ்லிங்களின் பெருந்தன்மையையும், சட்டத்தின் மீதான நம்பிக்கையையும் காட்டுகிறது.

40 சதவீதமளவில் முஸ்லிங்களை கொண்டுள்ள காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் நிதானமிழந்து செய்திருக்கும் இந்த செயலின் பாரதூரத்தை நன்றாக அறிந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவங்கள் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து இவ்வாறான சிந்தனை கொண்டோருக்கு தக்க பாடத்தை கற்பிப்பார்கள் என்று நம்பிக்கை கொண்டிருந்தோம். ஆனால் இதுவரை அவ்வாறான எவ்வித நடவடிக்கைகளும் நடக்கவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவங்களை நேரடியாக சந்தித்து முஸ்லிம் எம்.பிக்கள் பேசவுள்ளோம். இவ்வாறான மத நிந்தனை செயற்பாடுகளை பல்லினம் வாழும் எமது நாட்டில் யாரும் செய்ய அனுமதிக்க முடியாது. அது யாராக இருந்தாலும் சரியே. கண்மணி நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களை பற்றி இழிவாக கருத்து பகிர்ந்த காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறிலுக்கு எனது பலத்த கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team