ஜோ பைடனுக்கு மறைமுக எச்சரிக்கை : அமெரிக்காவை மிரட்ட வட கொரியா ஏவுகணை சோதனை - Sri Lanka Muslim

ஜோ பைடனுக்கு மறைமுக எச்சரிக்கை : அமெரிக்காவை மிரட்ட வட கொரியா ஏவுகணை சோதனை

Contributors

அமெரிக்கா, தென் கொரிய நாடுகளின் கடற்படை கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுகின்றன. இது வட கொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

கொரிய தீபகற்பத்தில் தென் கொரியா, வட கொரியா ஆகிய நாடுகள் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.

தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா, தென் கொரிய நாடுகளின் கடற்படை கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுகின்றன. இது வட கொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் சகோதரியும் உயர் அதிகார பொறுப்பில் இருக்கும் கிம் யோ ஜாங் அமெரிக்க அதிபர் ஜோபைடன் நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுத்தார்.

அதில் நீங்கள் (அமெரிக்கா) அடுத்து வரும் நான்கு ஆண்டுகள் நிம்மதியாக தூங்க வேண்டும் என்று நினைத்தால் முதல் படியாக எங்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது என்றார்.

இந்த நிலையில், வட கொரியா கடந்த வார இறுதியில், குறுகிய தூர ஏவுகணை சோதனை நடத்தியது என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதை அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வட கொரிய அதிபரின் சகோதரி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சில நாட்களிலேயே ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவை மிரட்ட வட கொரியா இதை செய்துள்ளதாக கருதப்படுகிறது.

இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் கூறும்போது, புதிய நிர்வாகம், (ஜோ பைடன்) பேச்சு வார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான சலுகைகளை வட கொரியா புறக்கணித்து உள்ளதால் ஏவுகணை சோதனைகளை நடத்தி உள்ளது என்றனர்.

ஆனாலும் இந்த ஏவுகணை சோதனை, பேச்சுவார்த்தையில் கதவுகளை மூடுவதாக ஜோ பைடன் நிர்வாகம் கருதவில்லை என்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team