தகவல் கசிந்த விவகாரம்: அமெரிக்க நாடாளுமன்ற குழு முன் ஃபேஸ்புக் நிறுவனர் விளக்கம் » Sri Lanka Muslim

தகவல் கசிந்த விவகாரம்: அமெரிக்க நாடாளுமன்ற குழு முன் ஃபேஸ்புக் நிறுவனர் விளக்கம்

face

Contributors
author image

BBC

சமூக வலைதளங்களை தங்கள் சுயநலத்துக்காகவும், தேவைகளுக்காகவும் பயன்படுத்த பார்க்கும் ரஷ்யர்களிடம் தொடர்ந்து போராடி வருவதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க், அமெரிக்க செனட்டர்களிடம் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் 87 மில்லியன் முகநூல் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் கசிந்த விவகாரம் குறித்து அமெரிக்க நாடாளுமன்றக் குழு மார்கிடம் விசாரணை நடத்திய போது அவர் இதனை தெரிவித்தார்.

கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மார்க் சக்கர்பர்க் அமெரிக்க செனட்டர்களிடம் பதிலளித்தார்.

மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து விசாரித்து வரும் விசாரணையாளர் முல்லர், ஃபேஸ்புக் நிறுவன ஊழியர்களை விசாரித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் அவர் தன்னை விசாரிக்கவில்லை என்றும் மார்க் தெரிவித்துள்ளார்.

“சிறப்பு விசாரணைக் குழுவுடன் நாங்கள் ஆற்றி வரும் பணியானது மிகவும் ரகசியமானது எனவே இங்கே நான் அதை சொல்ல விரும்பவில்லை” என்றார் மார்க்.

உங்கள் ஃபேஸ்புக் தகவல்களை தேர்தல் நேரத்தில் பாஜகவும் காங்கிரஸும் பயன்படுத்தியதா?
“87 மில்லியன் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது”
பிப்ரவரி மாதம் முல்லர், மூன்று ரஷ்ய நிறுவனங்களுடன் சேர்த்து 13 ரஷ்யர்கள், அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக குற்றம் சாட்டினார்.

தற்போது தங்கள் நிறுவனம் போலி கணக்குகளை கண்டுபிடிக்கும் கருவிகளை உருவாக்குவதாக தெரிவித்தார் மார்க்.

“ரஷ்யாவில் இருக்கும் சிலரின் பணி நமது அமைப்பை தங்களது சுய நலத்துக்காகவும் தேவைகளுக்காகவும் பயன்படுத்தி கொள்வதுதான் நாம் அதை சரிசெய்வதற்கும் முதலீடு செய்ய வேண்டும்” என்றார் மார்க்.

சமூக ஊடகம் எவ்வாறு தீவிரமாக கண்காணிக்கப்படலாம் என அமெரிக்க செனேட்டர்கள் மார்க் சக்கர்பர்கிடம் கேள்விகளை கேட்டனர்.

இந்தியா குறித்து மார்க்

கேள்வி பதில் நேரத்தில் மார்க் சக்கர்பர்க் இந்திய தேர்தல் குறித்தும் விளக்கமளித்தார்.

அமெரிக்க தேர்தல் எந்தவித அழுத்தங்களாலும், பாதிக்கப்படாது என்பதை உறுதி செய்ய அவர் என்ன செய்ய போகிறார் என்று செனட்டர் ஃபின்ஸ்டின் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மார்க், 2018ஆம் ஆண்டில் இந்த விவகாரத்தில் அதிகம் கவனம் செலுத்த போவதாக தெரிவித்தார்.

அமெரிக்காவில் மட்டுமல்ல, மேலும் பல நாடுகளில் தேர்தல் நடக்கவிருப்பதால் 2018ஆம் ஆண்டு மிக முக்கியமானது என மார்க் தெரிவித்தார்.

இந்தியா, பாகிஸ்தான், ஐங்கேரி, பிரேசில், மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு இந்த வருடம் மிக முக்கியமான வருடம் என்றும், இந்த நாடுகளில் நடைபெறும் தேர்தல்கள் தங்கள் தரத்தை இழக்காமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் நாங்கள் மேற்கொள்வோம் என்றும் மார்க் சக்கர்பர்க் தெரிவித்தார்.

மேலும் வன்முறைகளை தூண்டும் செய்திகளை தடுப்பது, போலி கணக்குகளை கண்டறியும் நடவடிக்கை ஆகியவற்றை நாங்கள் மேற்கொள்வோம் என அவர் தெரிவித்தார்.

கேம்பிரிட்ஜ் அனலிடிகா

கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் அரசியல் ஆலோசனை நிறுவனத்தால், 87 மில்லியன் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் முன்னதாக ஒப்பு கொண்டுள்ளது.

“நம்பிக்கை மீறல் நடைபெற்றுள்ளது” என தனது முகநூல் பதவில் தெரிவித்திருந்தார் மார்க் சக்கர்பர்க்.

“ஃபேஸ்புக்கை தொடங்கியது நான்தான் எனவே இதில் என்ன நடந்தாலும் நான்தான் பொறுப்பு” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Web Design by The Design Lanka