தகுந்த மண் வாகரையில் கிடைத்திருப்பதால் பெருமளவு பொருளாதாரத்தை பெற்றுத்தரக்கூடிய பொருளாக பிப்பிஞ்சா மாறியுள்ளது - சந்தரகாந்தன் - Sri Lanka Muslim

தகுந்த மண் வாகரையில் கிடைத்திருப்பதால் பெருமளவு பொருளாதாரத்தை பெற்றுத்தரக்கூடிய பொருளாக பிப்பிஞ்சா மாறியுள்ளது – சந்தரகாந்தன்

Contributors

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாகரை பிரதேச மக்கள் ஆரம்ப கால கஸ்டங்களில் இருந்து மீண்டு உழைக்க ஆரம்பித்துள்ளார்கள் அதற்கு அரசாங்கமும் எல்லா திணைக்களங்களும் தங்களாலான உதவிகளை செய்கின்றது என்று மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்தரகாந்தன் தெரிவித்தார்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பிப்பிஞ்சா செய்கை விவசாயிகள் சந்திப்பும், உதவி வழங்கும் நிகழ்வும் நேற்று வெள்ளிக்கிழமை மாங்கேணியில் இடம்பெற்ற போது மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த காலத்தில் இப்பிரதேசத்தில் செய்யப்படும் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதில் பாரிய சிக்கல்களை உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கி வந்தனர் தற்போது பிப்பிஞ்சாவுக்கு உலகளாவிய ரீதியில் அது வர்த்தகப் பொருளாக மாறியுள்ளது அதற்கு தகுந்த மண் வாகரையில் கிடைத்து இருப்பதன் காரணமாக பெருமளவு பொருளாதாரத்தை பெற்றுத்தரக்கூடிய பொருளாக பிப்பிஞ்சா மாறியுள்ளது.

எதிர்காலத்தில் இதேபோன்று தானிய உற்பத்திகளை இப்பகுதியில் மேற்கொள்வதற்கு எங்களால் ஆன உதவிகள் மேற்கொள்ளப்படும் இந்த மண்ணை நம்பி வாழுகின்ற மக்களை அறிவூட்டி தெளிவூட்டி அவர்களுடைய உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெற்றுக்கொடுத்து இந்த மண்ணிலே அவர்களை வாழ வைப்பதுதான் என்னுடையதும் இந்த அரசாங்கத்தினுடைய எதிர்பார்ப்பாகும் அதனை நாங்கள் எல்லோரும் சேர்ந்து செய்வோம்.

இங்கு விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் சேர்ந்து தீர்த்து வைப்போம் இப்பகுதி மக்கள் உழைத்து சேமிக்கின்ற மக்களாக மாற வேண்டும் அதை நாங்கள் கண்கூடாக பார்த்து மகிழ்வதுதான் எங்களது மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்தா அளுத்கமகே, கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜகம்பத், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா, விவசாய நவீன மயமாக்கல் செயற்றிட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஆர்.ஆர்.ஏ.குகான் விஜயகோன், கிழக்கு மாகாண பணிப்பாளர் பி.எம்.என்.தயாரட்ன, நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் திருமதி.ராதிகா ரவி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், வாகரை பிரதேச செயலாளர் எஸ்.கரன், வாகரை பிரதேச சபை தவிசாளர் எஸ்.கணேசன் உட்பட திணைக்கள அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team