தடுப்பூசி அரசியலை நிறுத்துங்கள் - அனுர குமார கோரிக்கை..! - Sri Lanka Muslim

தடுப்பூசி அரசியலை நிறுத்துங்கள் – அனுர குமார கோரிக்கை..!

Contributors

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படாத காரணத்தால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட கட்சியின் தலைவர் அனுரகுமார திஸ்ஸநாயக்க, தமக்கு எதிரான தவறான செய்திகளை உருவாக்குவதை விடுத்து கொரோனா தடுப்பு விடயத்தில் அவதானம் செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

பல அரச அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. தடுப்பூசி வழங்குவதில் கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் இல்லாததால் இத்தகைய நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே, தடுப்பூசி போடுவதற்கு அவர்கள் தங்கள் தொழில்முறை சக்தியைப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. ஆனால் இது உலக சுகாதார ஸ்தாபனத்தின் திட்டத்துடன் உடன்படுகிறதா? மக்கள் தொகையில் 10 வீதமானோருக்கு போதுமான தடுப்பூசிகளைப் பெற்றபோது, 60 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான திட்டம் இருந்தது.

இந்த அடிப்படையில் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்த நாட்டின் மக்களுக்கு அவர்களின் வயதுக்கு ஏற்ப தடுப்பூசி போடப்படும் என்பது தெளிவாகிறது.

எனினும் இந்த தடுப்பூசி செயல்பாட்டில் அதிகாரத்தை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு நாங்கள் உங்களை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்.

ஒரே நாடு, ஒரே சட்டம் எனக் கூறினார்கள். ஆனால் குறைந்தபட்சம் அது தடுப்பூசி விடயத்திலேனும் அது செயற்படுத்தப்படவில்லை. இந்த தடுப்பூசி அரசியல் நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

இன்று முதல் உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய திட்டத்தின்படி செயல்படுமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்.

ராஜபக்ச முகாம் இணையதள ஆர்வலர்கள் எங்களுக்கு எதிராக தவறான செய்திகளை உருவாக்குவதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. அவர்கள் அந்த தவறான செய்தியால் சிறிதளவேனும் மகிழ்ச்சியடைந்தால் நாங்கள் அதுத் தொடர்பில் மகிழ்ச்சியடைகிறோம்.

இதுபோன்ற தவறான செய்திகளை உருவாக்க தனது பிரசார சக்தியை பயன்படுத்த வேண்டாமென நாம் கோட்டாபய ராஜபக்சவிற்கு அறிவிக்கின்றோம்.

அது எவ்வித பிரதிபலனையும் தரப்போவது இல்லை. அதனைவிடுத்து கொரோனாவை தடுக்கும் பிரசாரங்களை மேற்கொள்ளுமாறு நாம் கேட்கின்றோம் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team