தடை செய்யப்பட்ட அமைப்புகளின் தடைகள் நீக்கப்பட்து ஏன்? - ஜனாதிபதி செயலகம் விளக்கம்! - Sri Lanka Muslim

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் தடைகள் நீக்கப்பட்து ஏன்? – ஜனாதிபதி செயலகம் விளக்கம்!

Contributors

அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய 2022.-08.-01 திகதியிடப்பட்ட 2291/02 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட 2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் 04 (7) விதிமுறையின் கீழ் பெயர் குறிப்பிடப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புக்களின் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நடைமுறைகள் தொடர்பான பின்னணி மற்றும் தெளிவுபடுத்தல் வருமாறு:

தடை நீக்கத்தின் சட்ட ஏற்பாடுகளும் பின்னணியும்:

ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் VII அத்தியாயத்தின் கீழ் செயல்படும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை 2001 செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி UNSC 1373 தீர்மானத்தை ஏகமனதாக அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு பொறுப்புகளை உறுப்பு நாடுகளுக்கு வழங்கியது.

அதன்படி, 2012 மே மாதம் 15 ஆம் திகதி, 1758/19 ஆம் இலக்க மேலதிக பொது வர்த்தமானி மூலம் 2012 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் விதிமுறைகள் இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் வர்த்தமானியாக வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் மேற்குறிப்பிட்ட அனைத்து விதிமுறைகளையும் நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக பாதுகாப்புச் செயலாளர் மற்றும் நடைமுறைப்படுத்தும் நிறுவனமாக வெளிவிவகார அமைச்சு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அது தொடர்பான பொறுப்புகள் மற்றும் வரையறைகள் விதிமுறைகளில் விளக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இலங்கை மத்திய வங்கியின் வெளிவிவகார அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், புலனாய்வு அமைப்புகள், சட்ட அமுலாக்க முகவர் மற்றும் நிதிப் புலனாய்வுப் பிரிவு ஆகியன அடங்கிய குழுவொன்று, பொறுப்பு வாய்ந்த அதிகாரியின் உரிய உத்தரவுகளுக்கு அமைய, ஆய்வு நடத்தியது. கடந்த சில ஆண்டுகளில் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்குவதில் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் செயல்பாடுகள், ஆதாரங்களின் அடிப்படையில் பட்டியலில் சேர்த்தல் அல்லது பட்டியல் நீக்கம் செய்யப்படுகிறது.

பட்டியலிடுதல் அல்லது நீக்குதல் (தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள்) தொடர்பில் 2014 முதல் 01-.08-.2022 வரை முறையான எட்டு வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், அவற்றின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தற்போது நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 2022.-08-.01 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கம் 2291/02 தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் 2022 மார்ச் மாதத்தில் ஆரம்பமாகின. நாட்டுக்குள் அல்லது நாட்டிற்கு வெளியில் வாழும் அல்லது ஸ்தாபிக்கப்பட்ட பயங்கரவாத அல்லது தீவிரவாத அமைப்புகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்கள், அதற்குரிய நிதி, சொத்துக்கள், பயங்கரவாதச் செயல்கள் அல்லது தீவிரவாத செயல்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு இருந்தால், அவை பற்றியும் அரச பாதுகாப்பு அமைச்சுக்கு உட்பட்ட அரச புலனாய்வு சேவை உள்ளிட்ட சட்ட அமுலாக்கல் நிறுவனங்களுக்குரிய CID, CTID நிறுவனங்கள், கடந்த 06 மாதங்களாக ஆய்வு செய்தது. இந்த ஆய்வுகளுக்கமைய அது குறித்து முறையான ஆதாரங்களை தாக்கல் செய்த பிறகு, ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அந்த தனிநபர்கள் அல்லது அமைப்புகள் பட்டியலிடப்படவோ, நீக்கப்படவோ நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், கடந்த வருடங்களில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் ஒரு வருட காலத்திற்குள் உரிய அதிகாரியிடம் விண்ணப்பத்தின் மூலம் நீக்குவதற்கான கோரிக்கையை முன்வைக்க வாய்ப்பு உள்ளது. அது எழுத்து மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டியதோடு, அதனை உறுதிப்படுத்தும் வகையில் காரணங்கள் முன்வைக்கப்பட வேண்டும். பின்னர் பட்டியலிலிருந்து அந்த நபர் அல்லது அமைப்பு நீக்கப்பட வேண்டுமா என்பது குறித்து வெளியுறவு அமைச்சருக்கு பரிந்துரைகளை முன்வைக்கும் கடமை, பொறுப்புவாய்ந்த அதிகாரிக்குரியது.

பின்னர், அரச பாதுகாப்புப் படையினரின் தகவல்களை முழுமையாக ஆய்வு செய்த பின்னர், உரிய அதிகாரியின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் குறித்த நபர் அல்லது அமைப்பு மீதான தடையை நீக்கலாமா வேண்டாமா என்பது குறித்து அமைச்சருக்கு பரிந்துரை வழங்கும் கடமை, பொறுப்பு வாய்ந்த அதிகாரியை சாரும்.

அமைச்சரின் முடிவே இறுதி முடிவு என்றும், பாதிக்கப்பட்ட தரப்பினர் அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிடைக்கக் கூடிய பணம் அல்லது நிதி, முடக்கம் உத்தரவு அல்லது பிற நிதிச் சொத்துக்கள் அல்லது பொருளாதார ஆதாரங்கள் அல்லது பிற தொடர்புடைய சேவைகளால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபர் அல்லது நிறுவனத்திற்கும் உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்வதற்கு சந்தர்ப்பம் உள்ளது.

இந்த செயல்பாடுகள் ஒவ்வொன்றின் இறுதி முடிவும், அடுத்த வரவிருக்கும் வர்த்தமானியில் (ஆண்டுதோறும் வெளியிடப்படும்) உரிய அதிகாரி, செயலாளர், பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்படும். அந்த நடைமுறைகள் அனைத்தும், ஐக்கிய நாடுகளின் சாசனத்தின்படி மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன், 01-.08.-2022 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி 2291/2 மூலம், முறையான மற்றும் ஆழமான தகவல் ஆய்வு மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் 316 தனிநபர்களையும், 06 நிறுவனங்களையும் நீக்கத் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் புதிதாக அடையாளம் காணப்பட்ட 55 நபர்கள் மற்றும் 03 அமைப்புகள் உள்ளிட்ட 316 நபர்கள் மற்றும் 15 அமைப்புகள் மேற்குறிப்பிட்ட வர்த்தமானி ஊடாக தடைசெய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

தடை நீக்கப்பட்ட அமைப்புகளின் விபரங்கள்

 1. உலகத் தமிழர் பேரவை (GTF)
 2. அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் (ATC)
 3. உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC)
 4. தமிழீழ மக்கள் பேரவை (TEPA)
 5. பிரிட்டிஷ் தமிழ் மன்றம் (BTF)
 6. கனடிய தமிழ் காங்கிரஸ் (CTC)

தடை நீடிக்கும் அமைப்புகள்

 1. தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE)
 2. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (TRO)
 3. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு TCC)
 4. உலகத் தமிழ் இயக்கம் (WTM)
 5. நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE)
 6. உலகத் தமிழர் நிவாரண நிதியம் (WTRF)
 7. HQ குழு (HQ Group)
 8. கனடிய தமிழர் தேசிய அவை (NCCT)
 9. தமிழ் இளைஞர் அமைப்பு (TYO)
 10. தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ)
 11. ஜமாத் மில்லதே இப்ராஹிம் (JMI)
 12. விலாயா அஸ் செலானி (WAS)
 13. தாருல் ஆதர் (DA)
 14. இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM)
 15. சேவ் த பேர்ல்

இது தொடர்பான மேலதிக ஆய்வுகளுக்கு www.competentauthority.gov.lk என்ற இணையத்தளத்தை அணுகலாம்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2022-08-17

Web Design by Srilanka Muslims Web Team