தனது கட்சியினாலேயே முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் அவமானப்படுத்துகிறாரா? » Sri Lanka Muslim

தனது கட்சியினாலேயே முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் அவமானப்படுத்துகிறாரா?

26648087_930507043783755_445680444_n

Contributors
author image

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை மு.காவின் அரசியலில் பா.உ மன்சூர், முன்னாள் மாகாண சபை மாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா லோயர் ஆகியோரை பிரதானமானவர்களாக சுட்டிக்காட்டலாம். கடந்த பொதுத் தேர்தலில் பா.உ மன்சூர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் ஆகியோருக்கிடையில், மு.கா சார்பாக அத் தேர்தலில் யாரை களமிறக்குவது என்பதில் பலத்த போட்டி நிலவி, இறுதியிலேயே பா.உ மன்சூருக்கு ஆசனம் வழங்கப்பட்டது. இதன் மூலம் பா.உ மன்சூருக்கு நிகரான பலமிக்க ஒருவராக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிரை நோக்கலாம் என்ற விடயத்தை அறிந்துகொள்ளலாம். இதனை இன்னும் பல விடயங்கள் கொண்டு நிறுவலாம். இருந்த போதிலும், இதனை போதுமானதாக கருதுகிறேன்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் தற்போதைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் ஒரு மாகாண சபை உறுப்பினராக இருந்தவர். இவர் பிரதேச சபைத் தேர்தலில் களமிறங்குவதானது, அவரது தரத்தை சற்று குறைத்துக்கொள்ளும் செயற்பாடாகும். அவர் இது வரை எந்த பிரதேச சபைத் தேர்தல்களிலும் களமிறங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நேரடியாக களமிறங்காது, தனது சார்பாக வேட்பாளர்களை களமிறக்கி கூட, இத் தேர்தலை எதிர்கொண்டிருக்க முடியும். ஒருவர் நேரடியாக களமிறங்குவதற்கும், வேட்பாளர்களை களமிறக்கி எதிர்கொள்வதற்கும் இடையில் பாரிய வேறுபாடுள்ளது.  இவர் இத் தேர்தலில் களமிறங்கியுள்ளதானது, மு.காவின் வெற்றி மீது அவர் கொண்ட அக்கறையினாலேயே என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டால், பிரதேச சபையில் தெரிவானாலும் (தெரிவாகுவாரா..?), அதனை  இராஜினாமா செய்துவிட்டு தேர்தல் கேட்பார். இத் தேர்தல் மூலம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் பண ரீதியாகவும் அதிகம் செலவிட நிர்ப்பந்திக்கப்படுவார்.

இப்படியெல்லாம் நான் பெரிய விளக்கம் கொடுப்பதற்கு காரணம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் சம்மாந்துறை பிரதேச சபை சார்பாக தேர்தல் கேட்கும் ஏனைய வேட்பாளர்களுக்கு நிகரானவர் அல்ல என்பதற்கேயாகும். இருந்த போதிலும் அவரை தனித்து வேறுபடுத்தி கௌரவிக்குமுகமான எந்த செயற்பாடுகளும் இடம்பெறவில்லை. மு.காவில் களமிறங்கும் வேட்பாளர்கள் தங்களது விளம்பர புகைப்படங்கள், சுவரொட்டிகளில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரின் புகைப்படத்தை இணைத்ததாக இல்லை. 

இதில் உள்ள மிக முக்கிய விடயம், மு.காவின் சம்மாந்துறை வாக்கு வங்கியில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிரின் செல்வாக்கு அதிகம் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. இவரை கணக்கில் கொள்ளாத வேட்பாளர்கள் கூட, இவரின் செல்வாக்கு காரணமாக வாக்கை பெறலாம் என்பதாகும். இத் தேர்தலில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாகிர் கறி வேப்பிலையாக பயன்படுத்தப் படப் போகிறார்.

ஒரு வேட்பாளர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிரின் புகைப்படத்தை இணைப்பது, இணைக்காமல் விடுவது அவர்களது விருப்பம் எனலாம். அப்துல் மஜீது மண்டபத்தில் இடம்பெற்ற மு.காவின் சம்மாந்துறை பிரதேச சபை வேட்பாளர் அறிமுக நிகழ்விலும், அவர் ஒரு  சாதாரண உறுப்பினர் போன்றே நடாத்தப்பட்டுள்ளார்.

அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த புகைப்படத்தை இணைத்துள்ளேன். பா.உ மன்சூரின் புகைப்படங்கள் தான் எங்கும் பெரிதாக காட்சி தருகின்றன. இதன் மூலம் பா.உ மன்சூர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிரை விட பெரியவர் என்பதை ஆழமாக பதித்துக்கொண்டார். மாஹிர், தன்னை தானே தாழ்த்திக்கொண்டார்.

எமது அண்மைய ஊரான நிந்தவூரை எடுத்து நோக்கினாலும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் அவமானப்படுத்தப்படுகிறார் என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம். நிந்தவூரில் மு.கா சார்பாக ஒரு பிரதி அமைச்சரே உள்ளார். அங்கு நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் கெளரவப்படுத்தப்படுகிறார். அனைத்து இடங்களிலும் பிரதி அமைச்சர் பைசால் காசிமின் புகைப்படங்களோடு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனின் புகைப்படங்கள் உள்ளதையும், கௌரவப்படுத்தப்படுவதையும் அவதானிக்கலாம். அதுவே முறையானதுமாகும்.

ஏன் நிந்தவூருக்கு செல்ல வேண்டும்? சம்மாந்துறை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சுவரொட்டிகளையும், பதாதைகளையும் பாருங்கள். அனைத்திலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நௌசாத், வீ.சி இஸ்மாயில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமீர் ஆகியோரது புகைப்படங்களை பார்க்கலாம். இதனை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் அறியாமல் இருக்க மாட்டார்.

இங்குள்ள இன்னுமொரு பிரச்சினை, இதுவரை சம்மாந்துறை பிரதேச சபையின் முதன்மை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்பதாகும். சில வேளை, மு.காவுக்கு தவிசாளர் கிடைத்தால், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவிசாளர் பதவிக்காக சில்லறைகளோடு  போட்டியிட வேண்டிய நிலையம் ஏற்படலாம் (இதனை எதிர்வரும் கட்டுரைகளில் தெளிவாக பார்ப்போம்).

Web Design by The Design Lanka