தனியார் ஆஸ்பத்திரிகளை விடவும் அரச ஆஸ்பத்திரிகளில் கூடுதல் வசதிகள் - ஜனாதிபதி - Sri Lanka Muslim

தனியார் ஆஸ்பத்திரிகளை விடவும் அரச ஆஸ்பத்திரிகளில் கூடுதல் வசதிகள் – ஜனாதிபதி

Contributors

இலவச மருத்துவத்துறையில் பொற்கால யுகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். சிறந்த சுகாதார சேவையை வழங்குவதில் ஆசியாவிலேயே முன்னணி நாடாக இலங்கை விளங்குவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, தற்போது தனியார் வைத் தியசாலைகளைவிட வசதிகள் கொண்டதாக அரசாங்க ஆஸ்பத்திரிகள் நிகழ்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

 

சுகாதார சேவையை அபிவிருத்தி செய்து பாதுகாப்பதில் அரசாங்கம் அதிக கவனத்தை செலுத்தி வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அரச தாதியர் சேவையில் தற்போது 36,000 பேர் பணிபுரிவதாகவும் தாம் ஆட்சிப் பொறுப்பேற்ற 2005ம் ஆண்டில் 14,000 மாக விருந்த தாதியர் எண்ணிக்கையை ஏழு வருடங்களில் இரண்டு மடங்காக மாற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சுகாதாரத்துறையில் தாதியர் மற்றும் ஏனைய பிரிவுகளுக்கு 10,400 பேருக்கு நியமனம் வழங்கும் வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றது.

அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, பிரதியமைச்சர் லலித் திசாநாயக்க, உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐ.நா. சுகாதாரப் பிரிவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதிகள் மாகாண சுகாதார அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி;

தாதி சேவையானது உலகிலுள்ள சேவைகளில் மகத்துவமான சேவையாகும். அத்துடன் புண்ணியத்தை தேடிக்கொள்ளும் சேவையுமாகும். இதனால் இந்த சேவைக்கு மக்களின் ஆசிர்வாதம் மிகுதியாக உள்ளது.

உலகில் எந்த மதத்தை எடுத்துக்கொண்டாலும் அத்தனை மதங்களும் நோயாளிகளுக்கு உதவுவதை ஒரு பெரும் புண்ணியமாகவே போதிக்கின்றன. இதனை உயர்வாகவும் போற்றுகின்றன. இந்த சேவையை நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் மேற்கொள்ளும்போது நாட்டிற்கு மட்டுமன்றி மனதிற்கும் பாரிய திருப்தியளிக்கிறது.

இந்த நாட்டில் இலவச சுகாதார சேவை எனும் உரிமையைப் பாதுகாப்பதாக நாம் மஹிந்த சிந்தனை மூலம் உறுதியளித்தோம். அந்த உறுதிமொழியை நாம் முழுமையாக நிறைவேற்றியுள்ளோம்.

2005ம் ஆண்டில் நாட்டின் சுகாதாரத் துறைக்கு 38 பில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டது. அதனை தற்போது நாம் 155 பில்லியனாக அதிகரித்துள்ளோம்.

தற்போது நியமனங்களைப் பெற்றுக்கொள்ளும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மாதாந்தம் சம்பளம் வழங்குவதற்காக பெருமளவு நிதியை செலவிட வேண்டியுள்ளது. எனினும் அந்த சுமையை நாம் ஏற்றுள்ளோம். இந்த தொகையல்ல மக்களுக்கு இவர்கள் மூலம் கிடைக்கும் சேவையையே நாம் பெறுமதியாகக் கருதுகிறோம்.

தற்போது நாம் தெற்காசியாவில் மட்டுமன்றி முழு ஆசியாவிலுமே சுகாதார சேவையில் முன்னணியில் நிகழ்கிறோம். இத்துறையிலுள்ளவர்களின் அர்ப்பணிப்பான சேவையே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. எமது நாட்டில் குழந்தை பிறப்பு மரணம் வெகுவாகக் குறைந்துள்ளது. மனிதனின் ஆயுட்காலம் அதிகரித்து வருகிறது. பெண்களின் ஆயுட்காலம் 79 ஆகவும் ஆண்களின் ஆயுட்காலம் 71 ஆகவும் தற்போது உள்ளதைக் குறிப்பிடமுடியும்.

இலவச மருத்துவ சேவையை நாம் பாதுகாத்து அதனை மேம்படுத்துவதில் மேற்கொண்ட நடவடிக்கைகளே இந்த வெற்றிக்கு காரணமாகியது.

கடந்த காலங்களில் ஆஸ்பத்திரிகளில் சுத்தம் பேணப்படவில்லை. இதனால் நோயாளர்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. மருந்துகள் தட்டுப்பாடு,கட்டில்கள் பற்றாக்குறை,டொக்டர்கள் போதியளவு இல்லாமை தாதியர் மற்றும் ஊழியர்கள் இல்லாமை போன்ற பெரும் குறைபாடுகள் காணப்பட்டன.

இப்போது அரச ஆஸ்பத்திகளில் அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளை விட அரசாங்க ஆஸ்பத்திரிகள் முன்னேற்றப்பட்டுள்ளன. அரச ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரி என்ற வேறுபாடுகளை தற்போது காண முடியாதுள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளை விட அதிக வசதிகளை இப்போது அரச ஆஸ்பத்திரிகளில் காண முடிகிறது. அன்பு, கருணை, நட்புறவுடனான சேவையிலும நாம் முன்னிலையில் உள்ளோம். இது எமது நாட்டுக்கு பெரும் கெளரவமாகும்.

மருத்துவம் எமக்கு புதிதல்ல. புதிதாக கற்றுக்கொள்ளவும் எதுவுமில்லை. கடந்த காலம் தொட்டே நாம் மருத்துவத்துறையில் சிறந்த அனுபவங்களைப் பெற்று செயற்பட்டு வருகிறோம். கருணை, பிறருக்கு உதவுதல் எமக்கு பிறப்பிலேயே கிடைத்தவை. இந்த நாட்டில் பயங்கரவாதம் தலை தூக்கியிருந்த காலத்தில் படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதைப் போன்று தாதியரும் தமது சேவையை அர்ப்பணிப்புடன் நிறைவேற்றியதைக் குறிப்பிட வேண்டும்.

எமது உயர்ந்த மருத்துவ சேவை மூலம் நாட்டிலிருந்து போலியோ, லைசூரி போன்ற நோய்களை இல்லாதொழிக்க முடிந்துள்ளது. தற்போது டெங்கு நோயையும் நாம் கட்டுப்படுத்தி வருகின்றோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

(thinakaran)

Web Design by Srilanka Muslims Web Team