தமிழக ஹாஜிகள், தலாக் சான்று வழங்க இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு » Sri Lanka Muslim

தமிழக ஹாஜிகள், தலாக் சான்று வழங்க இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

india

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

சென்னை

சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பதர் சயீத் தாக்கல் செய்த மனு: தலாக் சான்றிதழ் வழங்க ஹாஜிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பதர் சயீத் தாக்கல் செய்த மனு விவரம்:
இஸ்லாமியர் தனிநபர் சட்டத்தில், திருமணமான ஆண்கள் 3 முறை தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறை உள்ளது. ஹாஜிகள் தலாக் சான்று வழங்கி விட்டால், அதுவே இறுதி முடிவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இது, இஸ்லாமிய பெண்களுக்கு எதிரானது மட்டுமின்றி தன்னிச்சையானது.

எந்த சூழலில் தலாக் சொல்லப்படுகிறது; எதற்காக சொல்லப்படுகிறது என்ற காரணத்தை ஹாஜிகள் கருத்தில் கொள்வதில்லை. உரிமையியல் நீதிமன்றங்கள் தோற்றுவிக்கப்பட்ட பிறகு, ஹாஜிகள் அதிகாரம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. மற்ற மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கு விவாகரத்து விஷயத்தில் சட்டரீதியிலான பாதுகாப்பு உள்ளது. ஆனால், இந்த சட்டப் பாதுகாப்பு இஸ்லாமிய பெண்களுக்கு இல்லை. எனவே, தலாக் சொல்லி விவாகரத்து பெறும் முறையை ரத்து செய்தும், ஹாஜிகள் தலாக் சான்றிதழ் வழங்குவதற்கும் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவு: ஹாஜி சட்டம் 1880 பிரிவு 4 -இல் ஹாஜிக்கள் என்பவர்கள் யார்? அவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது? என்பது தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.அதன்படி, இவர்களுக்கு நீதி பரிபாலனம் செய்யும் உரிமை இல்லை. தலாக் விஷயத்தில் ஹாஜிகள் வழங்கும் சான்றிதழ் என்பது எந்த விதத்திலும் சட்டரீதியான ஆவணம் கிடையாது. அந்தச் சான்று ஹாஜிகளின் தனிப்பட்ட கருத்து; அவ்வளவுதான்.

எனவே, இந்த வழக்கு முடியும் வரை, தமிழகம் முழுவதும் உள்ள ஹாஜிகள், தலாக் சான்று வழங்க இடைக்கால தடை விதிக்கிறோம். அதுபோல, ஹாஜிகள் தரக்கூடிய தலாக் சான்றிதழை ஒரு சட்டரீதியிலான விவாகரத்து ஆவணமாக நீதிமன்றங்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது என, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பவும் பதிவுத் துறைக்கு உத்தரவிடுகிறோம்.இந்த வழக்கில் தலாக் நடைமுறைகளை புதிய வடிவில் மாற்றுவது குறித்து பதிலளிக்க எதிர்மனுதாரர்கள் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால், வழக்கு விசாரணையை பிப்ரவரி 21 -ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Web Design by The Design Lanka