தமிழக முதல்வராகிறார் ஓ.பன்னீர் செல்வம் - Sri Lanka Muslim

தமிழக முதல்வராகிறார் ஓ.பன்னீர் செல்வம்

Contributors
author image

World News Editorial Team

தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

 

இதில் ஓ.பன்னீர் செல்வம் அடுத்த முதல்வராக ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டதாக அதிமுக கட்சி எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். இதனையடுத்து தமிழக ஆளுநர் ரோசையாவைச் சந்திக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.

 

எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஆளுநர் ரோசையாவிடம் தெரிவிக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.

 

இதற்கு முன்பு 2001ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஓ.பன்னீர் செல்வம் தமிழக முதல்வர் பதவியில் இருந்தார்.

 

முன்னதாக ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர், பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசினர்.

 

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் முதல்வர் பதவி மற்றும் எம்.எல்.ஏ. பதவியை இழந்ததால் அடுத்த முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் அல்லது ஷீலா பாலகிருஷ்ணன் ஆகலாம் என்று யூகங்கள் வெளியாகின.

 

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வமே மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்.

Web Design by Srilanka Muslims Web Team