தமிழர்களுக்கு தீர்வு வழங்க முடியுமென்றால் பசில் ராஜபக்ஷவை ஆதரிக்கத் தயார் - எம்.ஏ. சுமந்திரன் - Sri Lanka Muslim

தமிழர்களுக்கு தீர்வு வழங்க முடியுமென்றால் பசில் ராஜபக்ஷவை ஆதரிக்கத் தயார் – எம்.ஏ. சுமந்திரன்

Contributors

2024ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பசில் ராஜபக்‌ஷவால் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் தேர்தல் விஞ்ஞாபனம் முன்வைக்கப்படுமாக இருந்தால் அவரை ஆதரிக்கத் தயாரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்ச முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்த தெளிவான வேலைத்திட்டம் இருந்தது.

அதேபோல் சஜித்துடன் பேச்சுகளை நடத்தியவேளை வடக்கு, கிழக்கு மக்களின் பிரதான பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதே அவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

அதனால் அவரை ஆதரித்தோம். ஆனால், துரதிஷ்டவசமாக அவர் வெற்றி பெறவில்லை. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவைச் சந்தித்து நாம் பேச்சுகளை நடத்தியிருந்தோம்.

இதன்போது உங்களால் மட்டுமே தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்பதை நான் நேரடியாகக் குறிப்பிட்டிருந்தேன்.

ஏனெனில், சிங்கள மக்கள் எதிர்க்காத ஒரே தலைவர் என்ற காரணத்தால் அவர் எடுக்கும் தீர்மானங்கள் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தாது. நான் கூறியதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்டபோதும், இன்னமும் தீர்வுகளை வழங்க அவர் முன்வரவில்லை” என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team