தமிழர் பிரச்சினைக்கு அர்த்தமுள்ள முழுமையான அதிகாரப்பகிர்வே தீர்வு, என்றும் இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு இதுவே - யாழ்ப்பாணத்தில் தமிழர் பிரதிநிதிகளிடம் இந்திய தூதுவர் கோபால் பாக்லே சுட்டிக்காட்டு - Sri Lanka Muslim

தமிழர் பிரச்சினைக்கு அர்த்தமுள்ள முழுமையான அதிகாரப்பகிர்வே தீர்வு, என்றும் இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு இதுவே – யாழ்ப்பாணத்தில் தமிழர் பிரதிநிதிகளிடம் இந்திய தூதுவர் கோபால் பாக்லே சுட்டிக்காட்டு

Contributors

தமிழ் மக்களது நீண்டகால இனப் பிரச்சினைக்கு, அர்த்தமுள்ள முழுமையான அதிகாரப்பகிர்வே தீர்வாகுமென்பதில் இந்தியா எப்போதும் உறுதியாகவுள்ளது. அது ஜெனீவாக இருந்தாலும் சரி, கொழும்பாக இருந்தாலும் சரி, டெல்லியாக இருந்தாலும் சரி இந்தியாவில் நிலைப்பாட்டில் மாற்றம் எதுவுமில்லையென இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

வடக்கு, கிழக்குக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் நான்கு நாட்கள் அங்கு தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றும் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களையும் மேற்கொண்டார்.

நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தமது நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.

இச்சந்திப்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். குறிப்பாக தமிழ் மக்களது அரசியல் ரீதியான பிரச்சினைக்கு தீர்வு தொடர்பாக பேசப்பட்டது.

இக்கலந்துரையாடல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில், இச் சந்திப்பில் 14 உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தோம். சுமார் ஒரு மணி நேரம் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது பல விடயங்கள் பேசப்பட்டன. அரசியல் ரீதியான மற்றும் அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் பேசப்பட்டன.

குறிப்பாக அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் இந்தியா உதவுவதற்கு எப்போதும் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும் அபிவிருத்தி தொடர்பாக திட்டங்களை வழங்குகின்ற போது அவற்றை மேற்கொள்வது தொடர்பாக சாதகமான முடிவுகளை எடுக்க முடியுமென உறுதியளித்தார்.

இதேநேரம், இந்தியாவால் கொண்டுவரப்பட்ட 13ஆம் திருத்தத்திலுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களை அமுல்படுத்தினால் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற ஆக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்த முடியுமென எமது உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

விசேடமாக 13ஆம் திருத்தம் எமது பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக இல்லாத போதும், முழுமையான அதிகாரப் பகிர்வு முறைக்கு செல்லும் வரை இதனை உபயோகப்படுத்தலாமென குறிப்பிட்டனர்.

இதற்கு அவர் தமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லையெனக் குறிப்பிட்டார். தமிழ் மக்களது பிரச்சினைக்கு, முழுமையான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வே தீர்வாகும் என்பதில் இந்தியா உறுதியாகவுள்ளது.

இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் எதுவுமில்லை. அது ஜெனீவாக இருந்தாலும் சரி, கொழும்பாக இருந்தாலும் சரி, டெல்லியாக இருந்தாலும் சரி அந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லையென இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார் என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்

Web Design by Srilanka Muslims Web Team