தம்புள்ள பள்ளிவாசலின் இழுபறி நிலை தீர்க்கப்படுமா? » Sri Lanka Muslim

தம்புள்ள பள்ளிவாசலின் இழுபறி நிலை தீர்க்கப்படுமா?

dambull

Contributors
author image

A.S.M. Javid

மத ஒற்றுமை இன ஒற்றுமை என்பனவற்றுடன் இலங்கைவாழ் சமுகங்கள் எல்லாம் சமாதானமாக வாழ வேண்டும் என்று பறைசாற்றும் இந்த அரசிலும் சமயத்தளங்களை தாக்குவதும் அவற்றை அகற்றும் கைங்கரியங்களும் இருக்கத்தான் செய்கின்றன என்பதற்கு தம்புள்ள ஹைரியா ஜூம்ஆப்பள்ளிவாசலின் இழுபறி நிலைமைகளைக் குறிப்பிடலாம்.

ஒரு மதம் எழுச்சி பெற வேண்டும் என்பதற்காக இன்னொரு மதத்தினை முடக்குவதென்பது எந்த விதத்திலும் நியாயமான விடயங்களாக நியாயப்படுத்திக் கொள்ள முடியாது. இலங்கை என்பது பல்லின, பல் சமுகங்கள், பல் மதங்களைக் கொண்ட மக்கள் வாழும் நாடு என்பது இலங்கையின் வரலாற்றுச் சான்றுகளாகும்.

இவ்வாறான பாரம்பரியங்களின் மத்தியில் ஒரு மத்தத்தை இன்னொரு மதத்தின் வளர்ச்சிக்காக அகற்றுவது அல்லது அழிப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். இவ்வாறான சம்பவங்களுக்கு இலங்கையில் தாண்டவமாடும் இனவாதத்தின் தூண்டுதல்களே எனலாம். இந்த இனவாதத் தூண்டுதல்கள் சமுக ஒற்றுமை, சமுகத்தின் புரிந்துணர்வுகள் போன்ற சிறந்த அம்சங்களை கொச்சைப்படுத்தும் செயற்பாடுகளாக இன்று அமைந்துள்ளன எனலாம்.

இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள தம்புள்ள என்ற இடத்தில் முஸ்லிம்களும் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு வாழுகின்ற முஸ்லிம்களின் பாராம்பரிய வணக்கஸ்தளமாக தம்புள்ள ஹைரியா ஜூம்ஆப்பள்ளிவாசல் காணப்படுகின்றது. இப்பள்ளிவாசலால் எந்தவொரு சமுகத்திற்கும் இடையூறுகள் இல்லாத வகையிலேயே தொழுகை உள்ளிட்ட சகல வணக்க வழிபாடுகளும் இடம் பெறுவதுடன் அவ்வழியாக பயணம் செய்யும் முஸ்லிம்கள் தமது பயணத்தின்போது தொழுகையை நிறைவேற்றவும் வசதியாக இப்பள்ளிவாசல் திகழ்கின்றதே தவிர மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வேறு எந்த விதமான நடவடிக்கைகளும் இப்பள்ளிவாசலினூடாக இடம் பெறுவதில்லை.

இவ்வாறானதொரு பள்ளிவாசலை ஒருசில பௌத்த இயக்கங்களும், பௌத்த இனவாத தேரர்களும் தமது சுய இலாபங்களுக்காக அதனை புனித பூமிக்குள் இருக்கின்றது என்றும் புனித பூமிக்குள் இருக்கும் பள்ளிவாசலை அகற்ற வேண்டும் என்றும் கூக்குரலிட்டு இதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் அபிவிருத்தி என்ற போர்வையில் அதனை அகற்றுவதற்கும் அங்கிருந்து முஸ்லிம்களை விரட்டுவதற்கும் கடந்த சிலகாலமாக பாரிய சதி முயற்சிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இடம் பெற்று வருகின்றதை காண முடிகின்றது.

புனித பூமி என்ற சொல்லுக்குள் அதிகமாக வணக்கஸ்தளங்களை கொண்ட இடங்களை அடிப்படையாக வைத்து அதனைக் குறிப்பிடப்படுகின்றது. அவ்வாறானால் எந்த வணக்கஸ்தளமாக இருந்தாலும் அதுவும் புனித பூமிக்குள் உள்ளடங்கும் ஒன்றாக இருப்பதால் தம்புள்ள பள்ளிவாசலும் புனித பூமிக்குள் இருக்கின்றது என்ற விடயம் தெரியாத இனவாத சக்திகள் தம்புள்ள பள்ளியை அகற்ற வேண்டும் என்று போர்க்கொடி தூக்குகின்றமை எந்த விதத்தில் நியாயமான விடயமாக ஏற்றுக் கொள்ள முடியும்?.

இந்த விடயத்தில் தம்புள்ள ரன்கிரி விஹாரையின் முன்னாள் விஹாராதிபதியாக இருந்த இனாமலுவே சுமங்கள தேரர் முக்கியமானவராவார். இவர் முஸ்லிம் சமுகத்திற்கு எதிராக மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களும், அட்டகாசங்களும் மட்டிலடங்காது அந்தளவிற்கு தம்புள்ள பள்ளிவாசலை அகற்றி அங்கிருக்கும் முஸ்லிம்களையும் அகற்ற வேண்டும் என்று துடிதுடித்தவராகும்.

இவரின் பௌத்த தர்மத்திற்கு மாற்றமான முறையில் அமைந்த இனவாத பிரச்சாரங்களும், தீய கருத்துக்களும் அப்பாவி பௌத்த மக்களை அமைதியாக வாழ்ந்த முஸ்லிம் மக்களுக்கு எதிராக திரண்டெழுந்து முஸ்லிம் மக்களை எதிர்ப்பதற்கும், முஸ்லிம் மக்களின் தம்புள்ள பள்ளியை பல தடவைகள் தாக்குவதற்கும், தம்புள்ள நகரில் உள்ள முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை எரிப்பதற்கும், சூறையாடுவதற்கும் வித்திட்டன.

இந்த வேளையில் இனாமலுவே சுமங்கள தேரர் கடந்த காலங்களில் சுமார் 1095 கோடி ரூபாவை சூறையாடியுள்ளதாக தம்புள்ள ரன்கிரி விஹாரையின் தற்போதைய பொறுப்பாளர் கொடகம மங்கள தேரர் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு அறிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளதுடன் 1996ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரை விஹாரைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்த நுழைவுச்சீட்டுக்கள் மூலமே இவ்வளவு தொகையை அவர் கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஹாரைக்கு கிடைத்த பணத்தை மோசடி செய்த இவ்வாறாதொரு மதப் போதகரின் செயற்பாடு இருக்கையில் அவர் எவ்வாறு புனித பூமி என்ற நாடகத்தை அரங்கேற்ற முடியும்? இது பௌத்த தர்மமா? என மக்கள் கேட்கும் அளவிற்கு அவர் ஒரு விரும்பத்தகாத மனிதராக இன்று காட்டப்பட்டுள்ளார்.

தம்புள்ள பள்ளிவாசலை அகற்ற வேண்டாமென ஒட்டுமொத்த இலங்கைவாழ் முஸ்லிம்களும் குரல் கொடுத்து வருவதுடன் ஒருசில முஸ்லிம் அரசியல் வாதிகளும் இது விடயத்தில் தமது எதிர்ப்புக்களைக் காட்டி வருகின்றனர். குறிப்பாக தம்புள்ள ஹைரியா ஜூம்ஆப்பள்ளிவாசலை வேறு இடத்திற்கு நகர்த்தவும் சில பௌத்த குழுக்கள் முனைந்து வருகின்றன. வணக்கஸ்தளம் என்ற வகையில் அது இருந்த இடத்திலேயே இருக்க வேண்டும். தள்ளு வண்டிக் கடைகளை தள்ளி வேறு இடத்தில் வைப்பதுபோன்று ஒரு வணக்கஸ் தளத்தை வைக்க முடியாது. ஒரு வணக்கஸ்தளத்தை அகற்ற வேண்டும் என்ற இனவாத செயற்பாடுகள் எந்தளவு இருக்கின்றன என்பதற்கு நல்ல உதாரணமாக இதனைக் குறிப்பிடலாம்.

தம்புள்ள ஹைரியா ஜூம்ஆப்பள்ளி வாசலை அகற்றுவது தொடர்பில் கடந்த சில வருடங்களாக இழுபறி நிலை காணப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்த வந்த போதிலும் அது வெற்றியளிக்க வில்லை. பல சமய அமைப்புக்கள், சமுக அமைப்புக்கள்கூட பள்ளி அகற்றும் விடயத்தில் நெகிழ்வுத் தன்மையில் ஒரு விட்டுக் கொடுப்புடன் செயற்படுமாறு தம்புள்ள விஹாராதிபதிக்கும் அதனை அகற்றத் துடிக்கும் குழுக்களுக்கும் தமது ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளன.

இருந்தாலும் ஒருசில பௌத்த தேரர்களின் விடாப்பிடியான கொள்கைகள் இன்று இப்பள்ளியின் வணக்க வழிபாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றன. முஸ்லிம்கள் இப்பள்ளியில் நிம்மதியாக தொழுகைகளில் ஈடுபட முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். இப்பள்ளிவாசலின் பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்து வைக்கும்படி பல முனைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டே வருகின்றன. இருந்தாலும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்கு இந்த அரசின் காலமே சிறந்ததாகும். காரணம் இந்த அரசின் நோக்கம் இன ஒற்றுமை, சமாதானம், தேசிய நல்லிணக்கம் என்பனவாகும். இந்த நோக்கங்களைக் கொண்ட அரசிலேயே இதற்கான நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என முஸ்லிம்களும், தமிழர்களும் நம்புகின்றனர்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாஸ அவர்கள் இலங்கையில் சகல இனங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், பாகுபாடு இருக்கக்கூடாது ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் அண்டி வாழ வேண்டும் என்ற நல்ல சிந்தனையுடன் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார். அந்தத் திட்டம்தான் ஒவ்வொரு மதங்களினதும் மதஸ்தளங்கள் அருகருகே இருக்க வேண்டும் என்பதாகும்.

இதன் அடிப்படையில் நாட்டில் பல பாகங்களில் இஸ்லாமிய, இந்து, கத்தோலிக்க, பௌத்த மத வழிபாட்டுத்தளங்கள் நிறுவப்பட்டன. இது சமுகத்தின் ஒற்றமைக்கு ஒரு சிறந்த வழிகாட்டுதல்கள் என்றே கூறலாம். இலங்கையில் எந்தவொரு தலைவரும் மேற்கொள்ளாத ஒரு சிறந்த திட்டத்தை அவர் கொண்டு வந்திருந்தார். எனினும் அவரின் மறைவானது இந்தத்திட்டங்கள் முடங்குவதற்கு வழிவகுத்து விட்டன எனலாம்.

இவ்வாறான நல்ல சிந்தனைகள் உள்ள மனிதர்களின் வழியில் தற்கால மதத் தலைவர்களும், அரசியல் வாதிகளும் செல்வார்களானால் அது இந்த நாட்டின் இனவாத சிந்தனைகளுக்கு பாடம் புகட்டும் ஒரு விடயமாகவும், சமாதானத்தை நிலைபெறச் செய்யும் ஒரு அம்சமாகவும் அது அமையும் எனலாம்.
இன்று தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பாக பலரும் கதைத்து வந்தாலும் இந்தப் பள்ளியிவாசலின் பிரச்சினை நீண்டு கொண்டே செல்கின்றன. தம்புள்ள பள்ளிவாசலை வேறோர் இடத்திற்கு இடமாற்றுவதற்கு பள்ளிவாசல் நிருவாகம் கொள்கையளவில் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதே என்னப்பாட்டில்தான் மக்களும் உள்ளனர். இவர்கள் முழுமையான விருப்பத்துடன் இனங்க வில்லை என்றாலும் இந்த நாட்டில் ஏனைய சமுகங்களுடன் ஒற்றுமையாகவும், சமாதானமாகவும் வாழ வேண்டும் என்ற ஒரே கொள்கையின் அடிப்படையில் இத்தீர்மானத்திற்கு வந்துள்ளார்கள் என்பதே யதார்த்தமான உண்மையாகும்.

மாற்றுக் காணி வழங்கள் என்ற விடயம் தற்போது அரச தரப்பால் பேசப்படுகின்றது. இதனை வழங்குவதிலும் தமது கருமித்தனத்தைக் காட்டும் செயற்பாடுகள் இடம் பெறுவதும் இங்குள்ள முக்கிய விடயமாகும். போதியளவு மாற்றுக்காணியை வழங்கினால் ஏதோ ஒருவகையில் பிரச்சினையின் தீர்விற்குச் செல்லலாம் என்ற நிலையில் ஒருசாரார் இருக்கின்றனர். ஆனால் நகர அபிவிருத்தி அதிகார சபையும் இந்த விடயத்தில் பக்கச்சார்பாகவும், காலந்தாழ்த்தும் நிலையில் இருக்கின்றதையும் காண முடிகின்றது. இந்த விடயத்தில் முஸ்லிம்களின் இணக்கப்பாட்டின் பின்னர் அவர்கள் காட்டும் நடவடிக்கைகளில் இருந்து சரியான தீர்வுகளை கண்டு கொள்ள முடியும்.

தம்புள்ளப் பள்ளவாசல் தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகாரசபை கோரிய ஆவணங்கள் அனைத்தும் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பியும் குறித்த பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படாதிருக்கின்றது என்றும் இது விடயமாக தான் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தெரிவித்து அதன் மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தின் உண்மைத் தன்மைகளையும், தீர்வகளையும் பொருத்திருந்துதான் கண்டு கொள்ள முடியும். தம்புள்ளப் பள்ளிப் பிரச்சினை விவகாரம் யார் குற்றியும் அரசியானால் சரியென்றவாறு இருப்பதுடன் இது விடயத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் வரவேற்கத் தக்கதாகும். என்றாலும் பல தடவைகள் இவ்வாறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டு அவை நீர்மேல் எழுத்தான கதையாகவே உள்ளது என்றும் இந்த அரசில் பங்காளிகளாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்புக்களுடன் அரசாங்கத்திற்கு திடகாத்திரமான அழுத்தங்களைக் கொடுத்து அதற்கான தீர்வைப் பெறவேண்டுமே தவிர ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் தத்தமது விருப்பத்திற்கு அமைவாக மேற்கொள்ளும் எந்த முயற்சிகளும் இலகுவில் வெற்றியளிக்காது என்பதே கடந்த கால கசப்பான அனுபவங்களில் இருந்த கற்றுக் கொள்ள முடிந்துள்ளது.

எனவே நாட்டில் சமயங்களுக்கு இடையில் புரிந்துணர்வுகளும், ஒருமைப்பாடுகளும் ஏற்பட வேண்டுமானால் ஒரு மதம் மற்றய மதத்தை துவம்சம் செய்வதையும், நசுக்குவதையும், அவற்றைக் கொச்சைப்படுத்துவதையும் முதலில் நிறுத்த வேண்டும். இந்த விடயத்தின் வெற்றியே சமுக மேம்பாட்டையும் ஒற்றுமையையும் சமுகத்தில் ஏற்படுத்தும் எனலாம்.

Web Design by The Design Lanka